பாரதி... பெரியார்... இப்போ இராமானுஜன்!





வாழ்க்கையில் நிஜ ஹீரோக்களாக நின்று, வென்று காட்டியவர்களின் கதைதான் ஞானராஜசேகரனின் சாய்ஸாக இருக்கிறது எப்போதுமே! கமர்ஷியல் கலப்பில்லாத அசல் பதிவுதான் அவரது அடையாளம். ‘பாரதி’, ‘பெரியார்’ படைப்புகளைத் தொடர்ந்து இந்தமுறை கணித மேதை இராமானுஜனின் வாழ்க்கையைக் கையிலெடுத்து சினிமா உலகிற்கு பந்தி வைக்க இருக்கிறார் அவர். இராமானுஜன் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, கல்லூரி, தரிசனம் செய்த கோயில் என இயல்பு கெடாத பதிவாக கும்பகோணத்தைச் சுற்றி சுற்றி படம்பிடித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ஞானராஜசேகரனைச் சந்தித்தோம்...

வாழ்க்கை வரலாறு என்கிற வட்டத்துக்குள்ளேயே இருக்கீங்க போல..?
‘‘என்ன மாதிரி படம் எடுக்கணும் என்பதே இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. யதார்த்த சினிமா என்ற எண்ணமே இப்போது நிறைய பேருக்கு வற்றிவிட்டது. ஹீரோயிஸம் என்பது வாழ்க்கையில் சில அம்சங்களில்தான் வெளிப்படும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே முடிவு வரை ஹீரோவை ஒரு சாகசக்காரனாக காட்ட முயற்சித்து கதாநாயகர்களையும் கதாபாத்திரங்களையும் செயற்கையின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் மிக நுட்பமான உணர்வுகளை நாம் இழந்துவிட்டோம்.



சமீபகாலமாக ‘பீட்சா’ மாதிரி சில படங்களைப் பார்க்கும்போது நல்ல டிரெண்டும் வந்திருப்பதாகத் தோன்றினாலும், பெரும்பாலும் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே தென்படுகிறது. ‘ஒரு சினிமாவில் இதெல்லாம் கட்டாயம் இருக்கணும்’ என்று மக்கள் கேட்பதில்லை. நீ காட்டுவதுதான் சினிமா. மெல்லிய உணர்வுகளுக்கும் உன்னதங்களுக்கும் மக்களை பழக்கப்படுத்த வேண்டும். நான் ஒரு சினிமா எடுக்கிறேன் என்றால் அதில் நியாயமும் அர்த்தமும் இருக்கணும். ரசனையை மேம்படுத்தும் முயற்சிக்காக கொஞ்சமாவது மெனக்கெடணும்.

‘பெரியார்’ படத்தை முடித்துவிட்டு வேறு பாதையில் போகலாம் என நினைத்து இரண்டு கதைகள் பண்ணினேன். அதில் ஒன்றை படமாக்கலாம் என்று ஒரு தயாரிப்பாளர் வந்தார். ஷூட்டிங் கிளம்பும் நேரத்தில், ‘சார்... உங்ககிட்ட பயாக்ரஃபி ஏதாவது இருந்தால் அதை பண்ணலாமே’ என மனசு மாறினார். ‘ஞானராஜசேகரன் என்றாலே பயாக்ரபி சினிமா பண்றவர்’ என்கிற மாதிரி ஆகிவிட்டது. அதன் பிறகு வள்ளலார், கணித மேதை இராமனுஜன் என இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கும் எண்ணம் வந்தது. இதற்காக ஒரு வருடம் படித்தேன். உலகத்தில் எங்கும் கிடைக்காத சுகம் படிப்பதில்தான் கிடைக்கிறது. இப்படி பயாக்ரஃபி என்னையும் நான் பயாக்ரஃபியையும் விடுவதாக இல்லை. வாழ்க்கை வரலாறும் முக்கியமானதுதானே!


இப்போ சினிமா இருக்கற டிரெண்டில, இராமானுஜனுக்கு வரவேற்பு இருக்குமா?
‘இராமனுஜன் என்றால் கணித மேதை, கணக்குல பெரிய ஆள்’ என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். டி.வி, விமானம் மாதிரி அவரோட கணக்கு ஒரு கண்டுபிடிப்பு இல்லை. அதைத் தாண்டிய சில விஷயங்கள் இருக்கு. ஆச்சாரமான ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் இராமனுஜன். சின்ன வயசிலேயே ஜீனியசாக இருந்த அவரை இந்த சமூகம் எப்படிப் பார்த்தது? சோதனைகளை அவர் எப்படி சாதனைகளாக மாற்றினார் என்பதை படத்தில் சொல்கிறேன். இது நிகழ்கால பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு தரும் படமாகவும் இருக்கும்.

எல்லா துறையிலும் சாதாரணமாக இருக்கும்வரை யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் வித்தியாசமாக சிந்திக்கும் ஒருவனை சராசரி ஆக்கும்வரை, இந்த சமூகம் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கும். இப்போ கல்லூரி அட்மிஷனுக்காக அலைகிற பெற்றோர்களையே உதாரணமா பாருங்க... பையனுக்கு இசையில பெரிய ஆர்வம் இருக்கும். ஆனால் அவனை எஞ்சினியர் ஆக்கியே தீரணும் என்று பெற்றோர்கள் தங்களது விருப்பத்தை திணித்து மகனின் ஆர்வத்தை நசுக்கிவிடுவார்கள். அதுபோன்ற சோதனைகளை இராமானுஜனும் கடந்து வந்தவர்தான். இன்றைக்கு இருந்தாலும் அந்த சோதனையை அவர் சந்திப்பார். அவர் கதை, இந்தக் காலத்துக்கும் பொருந்திப் போகிற ஒன்றுதான்.

இராமானுஜனோட கதையில வெறுமனே கணக்கு போட்டு போரடிச்சிட மாட்டேன். அவர் நல்ல நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்தான். அதனால் ரசனைக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். படத்தில நாலு பாடல்கள்கூட வச்சிருக்கேன். நல்ல சினிமா விரும்பிகளை திருப்திப்படுத்தற படம், பொழுதுபோக்கா தியேட்டருக்குள்ள வர்றவங்களையும் ஏமாத்தாது.’’



பீரியட் ஃபிலிம் என்பதால் நிறைய சவால்கள் இருக்குமே?
‘‘ஆமா. 1899ல் தொடங்கி 1920 வரை நடக்கிற கதை. நடிகர்கள் தேர்விலிருந்தே சவால்கள் தொடங்கிருச்சு. இராமானுஜனா புதுமுகம் அபிநய் நடிக்கிறார். ஜெமினிகணேசன் - சாவித்திரியின் மகளான விஜயசாமுண்டீஸ்வரியின் மகன். அவர் நடிச்சிருந்த ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து கூப்பிட்டேன். டெஸ்ட் ஷூட் பண்ணிப் பார்த்து, ‘இவர்தான் இராமானுஜன்’ என்கிற முடிவுக்கு வந்தேன். சின்ன வயசு இராமானுஜனா சிறுவன் அன்மோர் நடிக்கிறார். இராமானுஜனின் மனைவியா பாமா, பெற்றோர்களா சுஹாசினி - நிழல்கள் ரவி, பேராசிரியர் சேஷு அய்யராக கிட்டி, இராமானுஜனின் லண்டன் தோழராக அப்பாஸ் என்று பொருத்தமான கேரக்டர்களை தேர்வு செய்வதே பெரிய வேலையாக இருந்தது.



அரைக்குடுமி தோற்றம் என்பதால் நிறைய பேருக்கு மொட்டை போட்டோம். கும்பகோணத்தையே சலித்தெடுத்து நிறைய இளைஞர்களை மாணவர்களாக நடிக்க தேர்ந்தெடுத்தோம். மொட்டை அடிக்க வேண்டும் என்றதும் நிறைய பேர் நடிக்க மறுத்துவிட்டார்கள். அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தவேண்டும் என்பதால், ஒளிப்பதிவில் தொடங்கி ஆர்ட் டைரக்ஷன் வரை நிறைய சிரமங்கள். ‘மோகமுள்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ‘பெரியார்’ படத்துக்கு உடையலங்காரம் செய்த என் மனைவி சகுந்தலாதான் இந்தப் படத்துக்கும் காஸ்ட்யூம் டிசைனர். ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் நடிகர்களே ஆங்கிலமும் பேசி நடிக்கிறார்கள். மகிழ்ச்சியான சவாலாக நினைத்து உழைக்கிறோம்.’’
- அமலன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்