இன்னுமா அடிக்கலை?





டி.எம்.எஸ் என்ற மூன்றெழுத்துக்காரருக்கு கவிப்பேரரசுவும் மனுஷ்யபுத்திரனும் புகழ் மாலை சூட்டி விட்டனர். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்’ என்றுதான் அவர் அன்றே பாடிவிட்டாரே!
- சுகந்தி நாராயண், சென்னை-39; இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி; காந்தி லெனின், திருச்சி; மா.மாரிமுத்து, ஈரோடு; ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

இருப்புப் பாதைகள் இறப்புப் பாதைகளாகும்போது, அதில் சிதைந்து கிடக்கும் சடலங்களை எடுக்கும் பிரகாஷின் பணி கடினமானது மட்டுமல்ல... உன்னதமானதும் கூட!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; tசண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலி; எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

டைரக்டர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி ஓப்பன் டாக் அருமை. ரஜினி படமே என்றாலும் அது தனக்கு சரியாக வராவிட்டால் ஒதுங்கிவிடும் விதத்தில் அவருக்கு செம ‘தில்’!
- ஏ.விஷால், புதுச்சேரி; ஸாதியா அர்ஷத், குடியாத்தம்; துரை.சேதுராணி, புதுகை.

சாட்சிக்காரன் (மது விற்கும் அரசு) காலில் விழுவதை விட, சண்டைக்காரன் (குடிகாரன்) காலில் விழுவது மேல் என்று நினைப்பதிலேயே சசி பெருமாளின் காந்தியப் பற்று புரிகிறது. அவர் லட்சியம் நிச்சயம் வெல்லும்!
-அ.சுகுமார்,காட்டுக்கானூர்; எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை; ப.இசக்கிபாண்டியன், திருநெல்வேலி.

த்ரிஷாவின் மனதில் எந்தப் புண்ணியவானும் இன்னுமா ‘காதல் மணி’ அடிக்கவில்லை? எதற்கும் அம்மணி நல்ல ‘ஈ.என்.டி’ மருத்துவரைப் பார்ப்பது நல்லதுங்கோ!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

ஒரே புகைப்படம் திரையுலகில் ஒருவருக்கு கதாநாயகி அந்தஸ்தை வாங்கித் தருகிறது என்றால் அந்தப் புகைப்படக் கலைஞரான ‘கிளாமர்’ சத்திய மூர்த்தியின் திறமையை என்னென்பது!
-பேச்சியம்மாள்,புதுச்சத்திரம்;வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; த.ஜெகன், சரலூர்.

மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக, தீவிரவாதத்தைக் காரணம் காட்டி தொன்று தொட்டு ‘அரிவாள்’ தொழில் செய்யும் திருப்பாச்சேத்திக்கு போலீஸ் தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல.
-ரேவதிப்ரியன்,ஈரோடு; வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61; ஜி.இனியா, கிருஷ்ணகிரி.

‘கண் தெரியாது... ஆனா கடல் தெரியும்!’ கட்டுரையில் அருள் ஜேசுராஜின் கருத்துகள் அனைத்தும், ‘வாழ்ந்து தான் தீர வேண்டும்’ என்ற வைராக்கியத்தை அனைவருக்கும் பரப்பிவிட்டது. வாழ்த்துகள்!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை -91.

காந்தி ஆசிரமத்தில் படித்து ஆசிரியையான சட்டீஸ்கர் சோனி சோரியிடம், காவல்துறை நிகழ்த்திய கொடூர பாலியல் வன்முறையைப் பார்க்கும்போது, ‘இது காந்திதேசம்தானா?’ என்று மனம் கொந்தளிக்கிறது.
- கவியகம் காஜூஸ், கோவை-24