கமலுக்கு புரொட்யூசர்... சூர்யாவுக்கு டைரக்டர்...





‘லிங்கூ’ என கவிதைத்தொகுப்பு வெளியிட்டிருக்கிற இயக்குநர் லிங்குசாமி, ஓவியங்கள் வரைந்து கண்காட்சியும் வைத்திருக்கிறார். ஐதராபாத்தில் சூர்யாவின் புதுப்பட டிஸ்கஷனில் இருக்கிறார். கமலை வைத்து புதுப்படத்திற்கான தயாரிப்பும் கூடவே. ‘‘என்னங்க... உங்களுக்கே இத்தனை கெட் அப்’’ என்றால், எனர்ஜியாக சிரிக்கிறார். ‘‘சினிமா என்னோட கிரவுண்ட்னா, கவிதை, ஓவியம், இலக்கியம்தான் ஒவ்வொரு நாளும் நான் விளையாடுவதற்கான சக்தியைக் கொடுத்திட்டே இருக்கு. என்னை உணரவும் உணர்த்துவதற்குமான டைம் இது. இப்ப உங்களிடம் பேசலாம்னு தோணுது’’ - முற்றிலும் சிநேகப் புன்னகையுடன் தொடர்ந்தது உரையாடல்!
‘‘கவிதை கூட இப்ப ஆயிரத்துல 500 பேர் எழுதுறாங்க... ஓவியம் எப்படி?’’

‘‘மூணு மாசமா ஐ பேடில் வரைஞ்சுக்கிட்டே இருந்தேன்.   Angry bird விளையாடுறமாதிரிதான். வரைய ஒரு சாஃப்ட்வேர் கிடைச்சது. கோடுகளை இழுத்து வண்ணங்களைச் சேர்த்தால் திடீர்னு ஒரு ஓவியம் மாதிரி பிரமிப்பு தந்தது. அந்த பிரமிப்பு மத்தவங்களுக்கும் வந்ததுதான் ஆச்சரியம். அதுவே புத்தகமாகப் போட்டு, கண்காட்சியா வைக்கிற அளவுக்கு வந்துட்டுது. கண்காட்சியில ‘எப்படி வரைஞ்சீங்க’ன்னு கேள்வி கேட்டப்போ, மையமா சிரிச்சு வச்சேன். வரைஞ்சும் காண்பிச்சேன் இப்ப மனசெல்லாம் வண்ணம் தான்!’’

‘‘சூர்யாவோட ப்ராஜெக்ட்... இப்பவே எதிர்பார்ப்பு கிளம்பிருச்சே...’’
‘‘சூர்யாவுக்கும் எனக்கும் எப்பவும் ஒரு நல்ல புரிதல் உண்டு. முதன்முறையா சேர்ந்து வேலை பார்க்கலாம்னு நினைக்கிறபோது, ஒரு நல்ல கதைக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. கதை வந்தது, கேட்டுட்டு ‘டபுள் ஓகே’ன்னு சொன்னார். சமந்தாவை ஜோடியாப் போட்டு கலகலன்னு ஆரம்பிக்கப் போறோம். அவர் திறமைகளுக்கு பங்கம் வராமல், என் ஸ்டைலுக்கும் இடைஞ்சல் இல்லாமல் படம் இருக்கும். பெரிய ஹிட்... பெரிய கலெக்ஷன்... இதுதான் டார்க்கெட்!



நாம் ஒரு கதை வச்சிருப்போம். ஆனா, ஆடியன்ஸ் மனசுல வேற இருக்கும். அவங்க வச்சிருக்கிற கதையத்தான் கண்டுபிடிச்சு நாம எடுக்கணும். அப்படி ஒரு முத்தெடுக்க ஆசைப்படுறேன். எல்லா உணர்வும் சேர்ந்த கலவையாய் இருக்கிற மாஸ் படம் அது. என்னோட கனவும், உழைப்பும் இந்தப் படம்தான்!’’
‘‘மளிகைக்கடை பேக்ரவுண்டில் பிறந்து வந்திட்டு, சூர்யா வரைக்கும் படம் பண்ற விஷயத்தை எப்படி நினைச்சுப் பார்ப்பீங்க?’’

‘‘அப்பா, அம்மாவோட, அண்ணன் தம்பின்னு நாங்க நாலு பேரா இருந்த காலம் அது. அப்பா உறவுகளுக்காகவே உயிரை வச்சுக்கிட்டு இருந்த ஆளு. யாருக்கும் எதிரியில்லை. சதா சிரிப்பும், பேச்சுமா இருந்தவரு. அவ்வளவு துயரத்தையும் வேதனையையும் தனக்கேன்னு வச்சுக்கிட்டு, எங்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே அடையாளம் காட்டினவர். குட்டி வீடு. ஒருத்தர் தோள் இடிக்காமல் இன்னொருத்தர் இருக்க முடியாது. பதட்டமே இல்லாத வீடு. நெல்லுச்சோறு கனவு. கேழ்வரகு, கம்பங்கூழ், வரக்காப்பிதான் சாப்பிடுவோம். நான் அம்மா பிள்ளை. அவங்க காலை சுத்திக்கிட்டே திரிவேன். அவங்க நல்ல கதை சொல்லி, ஒரு ஊரில் ஒரு நரி கதையைக்கூட நீட்டி முழக்கி, சுவாரஸ்யத்தின் உச்சிக்கு கொண்டு போவாங்க. அவங்க ரிதம், தன்மை, சுவாரஸ்யம்தான் எனக்கு வந்திருக்குமோன்னு நினைக்கிறேன். இப்ப அப்பா இல்லை; அம்மா மட்டும் இருந்து அருள் பாலிக்கிறாங்க. அவங்களோட பேரன்பு, கருணை, பாதுகாப்பு, அரவணைப்பிலதான் எனக்கு ஓவியம், கவிதை, சினிமா எல்லாமே வருகிறது.’’

‘‘நீங்க எல்லா ஹீரோயின்களோடும் நெருக்கம். மத்தவங்க சும்மா பார்த்தாலே ‘ஜொள்ளு’ன்னு சொல்லிடுறாங்க. நீங்க மட்டும் எப்படி..?’’
‘‘வீட்டில நம்புறாங்கன்னு அர்த்தம். ஒண்ணும் ஆபத்து இல்லாதவன்னு அர்த்தம். அனுஷ்காவை மட்டும் ரொம்ப பிடிக்கும். பொண்டாட்டிகிட்டயே அதை தைரியமா சொல்லியிருக்கேன். என் குட்டீஸ் கூட ‘அப்பாவுக்கு அனுஷ்கா பிடிக்கும்’னு சொல்வாங்க. அனுஷ்காவைத் தவிர மத்த எல்லார்கிட்டேயும் நானே இதைச் சொல்லிட்டேன். ‘என்னைப் பிடிக்குமா’ன்னு அனுஷ்காவே வந்து நேரா கேட்டால் அன்னிக்கு வரும் பிரச்னை.’’

‘‘ ‘ஆனந்தம்’ படத்திற்குப் பிறகு, இலக்கியமா படங்கள் செய்யலையே... ஏன்?’’
‘‘குடவாசலில் இருந்த காலத்தில், படம்னா பத்து சண்டை இருக்கான்னு பார்த்து போவோம். ‘ஷோலே’, ‘தீவார்’, ‘உதயம்’, ‘நாயகன்’, ‘பாட்சா’ பார்த்தது எல்லாம் அது படம் என்பதால் மட்டும்தான். இங்கே வந்த பிறகுதான் படத்தை தரம் பிரிக்கத் தெரிஞ்சது. இன்னும் ஊர்லயே இருக்குற என்னை மாதிரி ஆட்களுக்கும் சேர்த்தே நான் தீனி போட்டுட்டிருக்கேன். இன்னும் என்னோட கனவுப்படம் ரிலீசாகவே இல்லை. ‘ரோடு ஹோம்’ பார்த்த பிறகு, நான் அது மாதிரி ஒரு ப்ரேம் கூட எடுக்கலைன்னு உணர்ந்திருக்கேன். ஆனா, புரொடக்ஷன் வேற! பாலாஜி சக்திவேல், ‘உங்க குடவாசல் பலசரக்குக் கடையில எல்லா சரக்கும் கிடைக்கிற மாதிரி, திருப்பதி பிரதர்ஸிலும் கிடைக்குதப்பா’ன்னு சொல்வார். அதுதான் இப்ப உண்மை.’’

‘‘கமல் படம் எப்படியிருக்கும்...’’
‘‘ ‘தேவர் மகன்’ பார்த்த காலமெல்லாம் நான் மேம்பட்ட காலங்கள். நானும் தம்பி சுபாஷும் அந்த மகா கலைஞன்கிட்ட போய், ‘ஒரு படம் பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்டோம். மலர்ச்சியா, ‘பண்ணுவோம்’னு சொன்னார். சடசடன்னு வேலைகள் நடந்துகிட்டு இருக்கு. அவர் என்கிட்டே சொன்ன கதை அவ்வளவு அழகு. ஊரிலிருந்த காலத்திலிருந்தே பார்த்துப் பார்த்து ரசித்த கலைஞன். அவரே எங்களுக்கு படம் பண்ணித் தருவது பெரிய கொடுப்பினை!’’
- நா.கதிர்வேலன்