மறக்க முடியாத மருதநாயகம்





பிரிட்டிஷ் அரசியை வரவழைத்து, அவர் முன்னிலையில் துவக்க விழா கண்ட படம் ‘மருதநாயகம்’. தமிழக வரலாற்றில் கூட அதிகம் பேசப்படாமல் மறக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின் கதை. பல கோடிகளை விழுங்கிய ‘மருதநாயகம்’, கமலின் கனவு படம். சில காரணங்கள் தசாவதார நாயகனின் கனவுக்கு தற்காலிக கதவடைப்பு செய்திருக்கிறது. இருப்பினும், ‘என்றைக்காவது ஒருநாள் இதைப் பார்ப்போம்’ என்ற நம்பிக்கையில் கண்களில் எதிர்பார்ப்பை தேக்கி வைத்துக் காத்திருக்கும் கூட்டம் கோடி. அவர்களின் ஏக்கத்தில் இருக்கும் நியாயத்தை, இந்த அட்டகாசமான புகைப்படங்களை வைத்தே புரிந்துகொள்ளலாம். ‘மருதநாயகம்’ படத்தில் பணியாற்றிய பிரபல புகைப்படக் கலைஞர் முத்துக்குமார், படம் பற்றி இதுவரை வெளிவராத மிரட்சியான சில தகவல்களை புகைப்படங்களோடு இங்கு பகிர்ந்துகொள்கிறார்...

‘‘கடந்த 1998ல் ‘மருதநாயக’த்துக்காக நான் எடுத்த புகைப்படங்கள் இவை. கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷமாச்சு. ஆனாலும் அந்தப் படத்தில் பணியாற்றியபோது நான் பார்த்த ஆச்சர்யங்களை என்றைக்குமே மறக்கமுடியாது. இந்தப் படங்களில் பார்ப்பது சாலக்குடி அருகேயுள்ள அதிரம்பள்ளி அருவி. எதிரிகளிடமிருந்து தப்பித்து மலையிலிருந்து கீழே இறங்கி கமல் ஓடுவது போன்ற ஒரு காட்சி. இந்த இடத்தை அடைவதே மிக ஆபத்தான விஷயம். ஒரு மலையிலிருந்து கீழே இறங்கி, ஒத்தையடிப் பாதையைவிட குறுகலான இடுக்கில் புகுந்து நடந்து செல்லவேண்டும். கமல் சார் சர்வசாதாரணமாக அந்த இடத்தைக் கடந்து மலைமீது ஏறி நின்று டேக்கிற்கு ரெடியானார். பின்னால் மிரட்டும் அருவியின் இரைச்சல், நடுங்க வைக்கும் குளிர் சாரல், அமானுஷ்யமான சூழல், எதையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான வழுக்குப் பாறையில் நின்றபடி அவர் நடித்தபோது யூனிட்டே அரண்டு போனது.



கதைப்படி காட்டுக்குள் தப்பித்துச்செல்லும் அவரை இரண்டு ஆட்கள் துரத்துவார்கள்; கூடவே நான்கு வேட்டை நாய்களும் துரத்திவரும். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மலை மீதிருந்து பாறை ஒன்றைத் தள்ளிவிடுவார். கீழே உருண்டு வரும் அந்தப் பாறை அந்த ஆட்களை உரசிச் சென்று நாய்கள்மீது விழும். போட்டோ எடுத்துக்கொண்டிருந்த நான், அவர் பாறையை உருட்டித் தள்ளும் காட்சியைப் பார்த்து வியந்தபடி க்ளிக்காமல் விட்டுவிட்டேன். கவனித்துவிட்ட கமல் என்னைத் திட்டினார். ‘‘உன்னோட கவனமெல்லாம் கேமரா மீதுதான் இருக்கவேண்டும். இந்தப் படத்தை எடுத்திருந்தால் மிகப்பெரிய அளவில் பேசப் பட்டிருக்கும். அதை மிஸ் பண்ணிட்டியே’’ என்று அட்வைஸ் செய்தார்.

அப்போது டிஜிட்டல் கேமரா வரவில்லை. ஒலம்பஸ்ஷீனீ 2 என்ற ஃபிலிம் கேமராவில்தான் அந்தக் காட்சிகளை எடுத்தேன். நொடிக்கு 700 ஃபிரேம்கள் வரை அந்தக் கேமரா எடுக்கும். ஆனால் அதை விட வேகமாக மாற்றி மாற்றி போஸ் கொடுப்பார் கமல் சார். நான் அங்கு வெறும் இயந்திரம்தான். அதற்கு உயிர்கொடுத்ததெல்லாம் அவர்தான்.

அப்புறம் பாம்பை வைத்து ஒரு ஷாட். பொள்ளாச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டது ஒரு நல்லபாம்பு. பயிற்சி தரப்பட்ட பாம்பென்றாலும் அதன் வாய் தைக்கப்படாமல் இருந்தது. கமல் சார் அதனை சர்வசாதாரணமாகக் கையில் பிடித்து விளையாடினார். தப்பித்துச் செல்லும் வழியில் பசியைப் போக்க கஞ்சி குடிப்பார் கமல். எதிரிகள் அங்கும் வந்து அதைத் தட்டிவிட, அங்கிருந்து ஓட்டமெடுப்பவர் ஒரு பள்ளத்தில் ஒளிந்துகொள்வார். அப்போது அங்கிருக்கும் மரப்புழுவை பசிக்காக உண்பது போல காட்சி. எந்த அருவருப்பும் இல்லாமல் கமல் புழுவை கையில் பிடித்து உதடுகள் வரைக்கும் அருகே கொண்டு போவார். காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்யத் தயாராக இருப்பார்.

சாலக்குடி ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்தது. கமல் சார் குதிரையில் செல்வது போன்ற காட்சியை எடுக்க வேண்டும். இதற்காக நவீன கேமரா தேவைப்பட்டபோது, இசைஞானி இளையராஜாவிடம் நிக்கான் எஸ்.5 மாடல் கேமரா இருப்பதாக கமல் சார் தகவல் சொன்னார். அவரிடமிருந்து அந்தக் கேமராவை வாங்கி, அந்த குதிரைக் காட்சியை க்ளிக்கினேன். ‘சந்திரலேகா’ படத்தில் இடம்பெற்ற டிரம்ஸ் பாடல் காட்சியை இப்போது பார்த்தாலும் எப்படி பிரமிப்பு வருகிறதோ, அதேபோல ‘மருதநாயகம்’ வெளிவந்தால் காலத்துக்கும் மறக்கமுடியாத படமாக இருக்கும். அந்த நேரத்துக்காக நானும் ஒரு ரசிகனாகக் காத்திருக்கிறேன்!’’
- அமலன்
அட்டை மற்றும் ஸ்பெஷல்
 படங்கள்: முத்துக்குமார்