குட்டிச்சுவர் சிந்தனைகள்





நையாண்டி

‘‘வாய ஊது...’’
‘‘உப்ப்ப்ப்ப்ப்ப் உப்ப்ப்ப்ப்ப்ப்’’
‘‘குடிச்சிருக்கியா?’’
‘‘சார், இல்ல சார்...’’
‘‘பொய்யா சொல்ற..?’’
‘‘சார், அது... காலைல குடிச்சது சார்...’’
‘‘ஓ, தூங்கி எழுந்ததுல இருந்து குடிச்சிக்கிட்டு இருக்கியா?’’
‘‘அய்யோ, காலைல மச்சான் ஊருல இருந்து வந்திருந்தான் சார். அதான்...’’
‘‘என்ன, கதை விடுறியா? யோவ் 201, கேஸ் ஷீட் எடு...’’
‘‘சார், நான் டீசன்டான குடும்பம் சார்... விட்டுடுங்க சார்...’’
‘‘அதை கோர்ட்டுல ஜட்ஜுகிட்ட வந்து சொல்லு...’’
‘‘சார்... சார்... ப்ளீஸ் சார்!’’
‘‘கோர்ட்டுல ஃபைன் கட்டிட்டு வண்டிய எடுத்துக்கோ...’’
‘‘சார்... சார்... வீட்டுல தெரிஞ்சா கொன்னுடுவாங்க சார்!’’
‘‘அப்புறம் எதுக்கு குடிச்சுட்டு ஓட்டுற? ஃபைனை கட்டிடு...’’
‘‘சார்... சார்... கோர்ட்டு எல்லாம் வேணாம் சார்!’’
‘‘அப்புறம்? ஜட்ஜ வீட்டுக்கு வரச் சொல்லட்டா? ஹா... ஹா...’’
‘‘சார்... இங்கயே முடிங்க சார்...’’
‘‘எவ்வளவு வச்சிருக்க?’’
- இந்தியாவில் ஸ்பாட் பிக்ஸிங் உருவான வரலாறு!

சம்பாதி, சம்பாதின்னு சும்மா நச்சுப் பண்ணும் பெற்றோர்களுக்கும் பொண்டாட்டிகளுக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா...
எங்களுக்கும் சம்பாதிக்கத் தெரியாம இல்ல. ஆனா, நிறைய சம்பாதிக்கக் கூடிய தொழில்களான சந்தன மரம் கடத்துதல், லாட்டரி விற்றல், கொள்ளையடித்தல், கட்டப் பஞ்சாயத்து செய்தல், கள்ள நோட்டு அடித்தல், சாராயம் காய்ச்சுதல், ரவுடியிசம் செய்தல்னு எல்லாத்தையும் இந்த இந்திய அரசாங்கம் சட்டவிரோதம்னு சொல்லிட்டா நாங்க எப்படி சம்பாதிக்கிறது? என்னது, நேர்மையான வழியில சம்பாதிக்கணுமா? நேர்மையா இருந்து எப்படிய்யா சம்பாதிக்க முடியும்?

‘காத்து வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்’னு பாடினது போய்... ‘காய் வாங்கப் போனேன், வெறும் காத்து வாங்கி வந்தேன்’னு இப்ப ரீமிக்ஸ் பண்ணனும் போல. பீன்ஸ் செஞ்சுரி போட்டு ரொம்ப நாளாச்சு... தக்காளி கிலோ அறுபது ரூபாய்க்கு மேல விக்குது, சின்ன வெங்காயம் கிலோ நூறு ரூபாய்க்கு மேல விக்குது, நமக்கு விலைவாசிய கேட்டாவே தொண்டை விக்குது.

ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு குவாட்டர் விலை அதிகம். குவாட்டரை விட, சின்ன வெங்காயம் விலை அதிகம். சொல்லப் போனா ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலையோட கம்பேர் பண்ணினா 80% இந்தியர்களோட ஒருநாள் வருமானம் குறைவுதான். அப்போவெல்லாம் ‘போடா வெங்காயம்’னு ஒருத்தனை திட்டுவோம். இப்போ வெங்காய மதிப்பு கூடினதால, அவனெல்லாம் நம்மளப் பார்த்து நக்கலா சிரிக்கிறான். பேசாம அம்மா மெஸ்ல நாலு இட்லி வாங்கி, அதுக்குத் தர்ற சாம்பார்ல கிடக்கிற சின்ன வெங்காயத்தப் பொறுக்கிக் கொண்டாந்து வீட்டு சாம்பார்ல போடலாம்னு இருக்கேன். இத்தன கஷ்டத்துல நாம இருந்தா, வெங்காய மதிப்பு கூடுறதப் பார்த்து லோக்கல் கவுன்சிலர் ஒருத்தன் வட்டச் செயலாளருக்கு ‘வருங்கால வெங்காயமே’ன்னு ஃபிளக்ஸ் போர்டு வச்சு உயிரை எடுக்கிறான். அடேய்ய்ய்!

ஐம்பது நாளில் அம்பானி ஆவது எப்படி?
மொத ஒரு மீன் பாடி வண்டிய வாடகைக்கு எடுக்கிறோம்டா. நேரா கிட்டத்துல இருக்கிற மம்மி மெஸ்ஸுக்கு போறோம். போறோமா... போயி 50 இட்லி, 40 தயிர் சாதம், 50 சாம்பார் சாதத்த பார்சல் கட்டுறோம். கட்டிக்கிட்டு நேரா அதே மீன் பாடி வண்டில ஏத்தி, ரெண்டு கிலோ மீட்டருக்கு அந்தாண்ட போயி நாம கடைய தொறக்கிறோம். ஒரு ரூபாய்க்கு வாங்குன இட்லி மூணு ரூபாய், மூணு ரூபாய்க்கு வாங்குன தயிர் சாதம் ஆறு ரூபாய், அஞ்சு ரூபாய்க்கு வாங்குன சாம்பார் சாதம் எட்டு ரூபாய்னு விக்கிறோம். அம்பதே நாள்தான்... 300% லாபம் பார்த்து அம்பானி ஆகுறோம். என்னாது, மம்மி மெஸ்ல பார்சல் கிடைக்காதா? அடப் போய்யா அங்கிட்டு... நைட்டு 10 மணிக்கு மேல டாஸ்மாக்லயும்தான் சரக்கு கிடைக்காதுன்னு சொல்றாங்க... அய்ய்யோ... அய்ய்யோ!

30 வயசு வரை கல்யாணமாகாத முதிர்கன்னி பெண்களுக்காகக் கவலைப்படும் கவிஞர்களும், மக்களும், சமுதாயமும்... 35 வயதுக்கு மேலும் கல்யாணமாகாத ஆண்களுக்காகவும் கொஞ்சம் கவலைப்படலாம், கவிதை எழுதலாம். ‘பெண்பாவம்தான் பொல்லாதது... ஆண்பாவம் செல்லாது’ன்னு நினைக்காதீங்கய்யா... இவங்களோட ஃபீலிங்ஸ் தெரியுமாய்யா உங்களுக்கு?

நம்மோட படிச்ச பொண்ணுக்கு கல்யாணம் ஆகுறதே மிகப் பெரிய மன வலி... இதுல நம்மளோட படிச்ச பொண்ணோட பொண்ணுக்கு கல்யாணம் ஆகுறதை பேச்சுலரா பாக்கிறது எவ்வளவு துர்ப்பாக்கிய நிலைமை தெரியுமா? நம்மளோட சுத்துன நண்பர்களோட பசங்க, அவங்கவங்க கேர்ள் ஃபிரண்டோட சுத்துறதப் பாக்கிற நெலம எதிரிக்கும் வரக்கூடாதுய்யா. கொஞ்சம் ஆம்பள மனசையும் புரிஞ்சு நடந்துக்குங்கய்யா. உலகின் ஒட்டுமொத்த ஆறுதலும் கருணையும் கிடைக்க வேண்டியது இப்படிப்பட்ட ‘முதிர்கண்ணன்’களுக்குத்தான்யா.

‘இந்தியாவில் ராமருக்கும் இலங்கையில் சீதா தேவிக்கும் கோயில் கட்டுவோம்’னு சொல்லி இருக்காங்க நம்ம பாரதிய ஜனதா கட்சி. ரொம்ப ரொம்ப முக்கிய விஷயம்; ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். ஆனா பாருங்க, நாட்டுல அவனவன் டெலிபோன் பில் கட்ட முடியாம கெடக்குறான்; புள்ளைங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாம தவிக்கிறான்; கரன்ட் பில் கட்ட முடியாம துடிக்கிறான்; செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் கட்ட முடியாம இருக்கிறான்... இதையெல்லாம் கட்டறதுக்கு உதவி செய்யாம கோயில கட்டுறோம், கோபிகாவ கட்டுறோம்னு பேசுறது நல்லாவாண்ணே இருக்கு?

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்
அடிவாரத்திலிருந்து பழனி மலைக்குப் போன ரோப் காரை அந்தரத்துலயே ரிப்பேராகி நிக்க வச்சு ‘அரோகரா அரோகரா’னு கத்த வந்தவங்கள ‘அய்யய்யோ அய்யய்யோ’ன்னு கத்த வச்ச கோயில் நிர்வாகம்!