சாயி ஷீரடி பாபாவின் புனித சரிதம்





எனது பக்தர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி, கடைசியில் ஆசையே இல்லாத நிலையை அடையச் செய்வேன்
- பாபா மொழி

சாயியும் தேவிதாஸும் நெருக்கமானார்கள். சாயியின் அபார சக்தியைக் கண்டு தேவிதாஸ் வியந்தார். தர்மம், வாழ்க்கை, சிரத்தை, பக்தி போன்ற எல்லா விஷயங்களைப் பற்றியும், பல மணி நேரம் அவர்களிடையே விவாதம் நடக்கும்.
ஒருமுறை தேவிதாஸ், மகல்சாபதி மற்றும் சாயி பேசிக் கொண்டிருந்தார்கள். நடுவில் சாயி, ‘‘மகல்சாபதி... இன்று இன்னொரு தாஸ் என்னைப் பார்க்க வரப்போகிறார்’’ என்றார்.
‘‘யாரது?’’
‘‘பொறு!’’
மசூதியை நோக்கி யாரோ நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. மகல்சாபதியும் தேவிதாஸும் திரும்பிப் பார்த்தனர். நல்ல உயரமான தேகக்கட்டு, தேஜஸான முகம், பெரிய பெரிய கண்கள், நீண்ட தலைமுடி கொண்ட ஒரு சந்நியாசி, காலில் கட்டைச் செருப்பு அணிந்துகொண்டு டக்டக்கென்ற ஓசையை எழுப்பியவாறே வந்தார்.
‘‘நான் உள்ளே வரலாமா?’’

‘‘உங்கள் பெயர்?’’
‘‘ஜானகிதாஸ்!’’
‘‘ஜானகிதாஸ்... தாஸ்!’’ என்று சிரித்த மகல்சாபதி, ‘‘சாயி, நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள்’’ என்றார்.

‘‘ஜானகிதாஸ், உள்ளே வந்து இங்கே உட்காருங்கள்’’ என்றார் சாயி.
அவர் மேலே வந்தவுடன் முதலில் சாயியை வணங்கினார். ‘‘அல்லா உங்களுக்கு அருள்புரிவார்’’ என்று கையை மேலே தூக்கி ஆசீர்வதித்த சாயி, ‘‘ரொம்ப தூரத்திலிருந்து வருகிறீர்களோ?’’ என்றார்.

‘‘நான் எப்படி இங்கு வந்தேன் என்று எனக்கே தெரியாது. மனசு ஏதோ கலக்கமாக இருந்தது. கால்கள் தானாக இங்கு கொண்டுவந்து விட்டன...’’

‘‘நல்லகாலம் பிறந்தால், கால்கள் இங்கு வந்துவிடும். தேவிதாஸ், மகல்சாபதி... உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். மனிதர்கள் அனாவசியமாக தலையில் பாரத்தைத் தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். பிறகு மானம், மரியாதை போய்விட்டது என்று வருந்துகிறார்கள். இந்த கர்மத்திற்கு என்ன சொல்வது?’’ - சாயி கேட்டார்.

‘‘சாயீ...’’
‘‘என்ன மகல்சாபதி?’’
‘‘நீங்கள் சொன்னதின் அர்த்தம் புரியவில்லை. பாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?’’

‘‘தேவிதாஸ்! நீ நிறைய படித்திருக்கிறாய். ஞானம் வளர வேண்டும் என்பதற்காக, பல்வேறு நூல்களைப் படித்திருக்கிறாய். இதைத்தான் நான் பாரம் என்கிறேன். நிறைய நூல்களைப் படித்தால் வரும் ஞானம், புத்தியை பலவீனப்படுத்தும். எதை நீ ஞானம் என்று நினைத்திருக்கிறாயோ, அதை நீ சரியாக அர்த்தம் புரிந்துகொள்ளவில்லை. எனவே உன் தலையில் பல பிரச்னைகள் முளைத்துக் குழப்புகின்றன. அந்தக் குழப்பங்களைத்தான் நீ அடியோடு ஒழிக்க வேண்டும். எந்த ஞானம் உன்னைக் குழப்பி விடுகிறதோ, அது ஞானமே இல்லை. பாரமாக இருக்கும் அதைத் தூக்கி எறி. அவற்றைக் கற்று அறிந்ததினால் உண்டான கர்வத்தை விட்டொழி. நாம் நிறைய படித்திருக்கிறோம், எனவே ரொம்ப அறிவாளி என்கிற மாயத்தை உடனே விட்டு விடு.’’

ஜானகிதாஸ் இதைக் கேட்டு ஸ்தம்பித்தார். தான் ஞானம் மிகுந்த அறிவாளி என்று எதைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாரோ, அது வெறும் குப்பை என்கிற உண்மையை சாயியின் மூலமாகத் தெரிந்துகொண்டார். மிகுந்த கர்வத்துடன் நிமிர்ந்து இருந்த அவர் மார்பு, இதைக் கேட்டு, ‘இவ்வளவுதானா?’ என்று லஜ்ஜையுடன் குனிந்தது.

‘‘ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு மாயையில் சிக்கித் தவிக்கிறான். இதனால் அவனும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றுகிறான். சிலர் தன்னைத்தானே மகான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். சிலர் பரமஞானி என்று நினைக்கிறார்கள். இப்படி தன்னைத்தானே புகழ்ந்துகொள்வதில், நினைப்பதில், நடந்துகொள்வதில் என்ன பிரயோஜனம்? உண்மையிலேயே உயர்ந்தவர்கள், தான் இன்னார் என்று பறைசாற்றிக் கொள்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. சூரியன், ‘நான் சூரியன்’ என்று சொல்வதில்லை. அதனுடைய ஒளிக் கிரணங்கள் உலகம் முழுதும் பரவி அதன் தன்மையை அறிவிக்கிறது. அதே போல் சந்திரன், தன்னைச் சந்திரனாக நினைப்பதில்லை. அவனுடைய அமைதியான, குளிர்ந்த, மிதமான ஒளி அவன் இருப்பதை உறுதிப்படுத்து
கின்றன.’’

தேவிதாஸ், ஜானகிதாஸ் மற்றும் மகல்சாபதி மூவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் சாயி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மனதின் உள்ளே ஏதோ ஒரு ஜோதி தூண்டிவிடப்பட்டது போல் உணர்ந்தார்கள்.

‘‘ஜானகிதாஸ்! ஞானம் என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. எப்படி ஒரு விதையிலிருந்து மரம் முளைக்கிறதோ அப்படித்தான் மனிதருக்குள் ஞானம் துளிர்விடுகிறது. ஆனால் அதை நாம் வெளியில் தேடுகிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் ஞானம் மட்டுமல்ல... அமைதி, சுகமான வாழ்க்கை எல்லாம் இருக்கிறது. கடவுளும் கூட இருக்கிறார். இதை மறந்துவிட்டு இவற்றைத் தேடி வெளியே அலைகிறோம். அது எப்படிக் கிடைக்கும்? சிலர் பண்டிதர்களிடமும் ஜோசியர்களிடமும் யோகிகளிடமும் சென்று புராணங்களைக் கேட்டும் படித்தும் அமைதியை நாடுகிறார்கள். இவற்றின் உதவியினால் நமக்குள் இருக்கும் ஆத்ம ஞானத்தை வெளிக் கொணரவேண்டும்.’’
‘‘அப்படியானால் கிரந்தங்களைப் படிப்பது உபயோகமற்றதா?’’ - ஜானகிதாஸ் கேட்டார்.

‘‘மறுபடியும் நீ குழம்பாதே! விதையிலிருந்து மரம் முளைக்கிறது என்ற உதாரணம் உனக்கு சரியாகப் புரியவில்லை. விதை தன்னுடைய சூட்சுமமான உருவத்திலிருந்து மரமாக வளர்வதற்கு வெயில், காற்று, மழை இவற்றின் உதவியை நாடுகிறது. இதைப் போலவே மனிதனும் கிரந்தங்கள், ஞானிகள், யோகிகள், பெரியோர்களின் போதனைகளை உதவியாகக் கொண்டு தன்னுடைய பூரணத்துவத்தை அடைய வேண்டும். ஆனால் ஒன்றை நினைவில் வை. விதை ஒருபொழுதும் தண்ணீரைத் தனது தலையில் சுமந்தோ, சூரிய கிரணங்களை கிரீடமாகக் கொண்டோ, காற்றை சுவாசித்து கர்வத்துடனோ அலைவதில்லை! அது மிகவும் சாமர்த்தியமாகவும் பணிவுடனும் அவற்றை உபயோகித்துக்கொள்கிறது. ஆனால், மனிதனோ தான் என்கிற அகம்பாவத்தோடும் கர்வத்தோடும் வாழ்கிறான். இப்படிப்பட்ட மாயையில் வாழும் வாழ்க்கை கனவின் வாழ்க்கையாக அமையும். இதையே உண்மையான வாழ்க்கை என்று நினைப்பது மூடத்தனமாகும். இதை முதலிலேயே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். படித்தவன் என்கிற கர்வத்தைத் தூக்கியெறிந்து நிம்மதியாக இரு.’’

இப்போது ஜானகிதாஸ் மனசு லேசாகியிருந்தது. சாயியின் கால்களில் அவர் சாஷ்டாங்கமாக விழுந்தார். சாயி அவர் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். தேவதாஸும் மகல்சாபதியும் தன்னை மறந்து நின்றிருந்தார்கள்.

வழக்கமாக பூஜை செய்ய கண்டோபா கோயிலுக்கு வந்தார் மகல்சாபதி. யாரோ மூலையில் உட்கார்ந்து முனகும் சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்தார். முனகியது, கோயில் பூசாரி!
‘‘என்ன ஆச்சு?’’
‘‘தலைவலி. மருந்து சாப்பிட்டேன். அப்பப்ப வரும், போகும். இன்று அதிகமாக இருக்கிறது. பொறுக்க முடியவில்லை’’ - தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
‘‘யாரிடம் மருந்து சாப்பிட்டீர்கள்?’’
‘‘நம் வைத்தியர் குல்கர்னி
யிடம்தான்.’’

‘‘கொஞ்சமும் குணமாகவில்லையா?’’
‘‘இல்லை. மாறாக வலி அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.’’
‘‘அப்படியானால் வைத்தியரை மாற்றுங்கள்.’’
‘‘வேறு யார் இங்கே இருக்கிறார்கள்?’’
சற்று யோசனை செய்து, மகல்சாபதி சொன்னார். ‘‘இப்படிச் செய்யுங்களேன் பூசாரி... சாயியிடம் காண்பியுங்களேன்!’’
‘‘யாரிடம்?’’

‘‘சாயியிடம். நீ யாரை கோயிலிலிருந்து விரட்டினாயோ, அந்த சாயியிடம்...’’
‘‘அவர் மருந்து கொடுப்பாரா?’’
‘‘நிச்சயமாக... அவர் யாரையும் கெட்டவராக நினைப்பதில்லை. உன்னுடைய தீராத தலைவலியைப் போக்கிவிடுவார். இதெல்லாம் அவருக்கு ஒரு குழந்தை விளையாட்டு!’’
‘‘உண்மையாகவா சொல்கிறீர்கள்?’’
‘‘ஆமாம். அவருடைய மகத்துவத்தை நீ இன்னும் உணரவில்லை. நீ அவரைக் கேலி செய்தாய். அதனுடைய பலனாக இந்தத் தலைவலி வந்திருக்கலாம்!’’
‘‘சாயிக்கு நான் பெரும் அவமானம் செய்துவிட்டேன். நான் அவரிடம் சென்றால், மசூதியின் உள்ளே வரவிடுவாரா?’’
‘‘சாயி என்றால் கடவுள். உண்மையில் அவர் ஒரு மகான். அவரை சரியாகப் புரிந்துகொள்ளாத உன்னைப் போன்ற அறிவிலிகள் நிறைய பேர். துன்பத்தை அனுபவித்தவர்கள் ஒவ்வொரு நாளும் அவரைக் காண வருகிறார்கள். சாயி உன்னை, என்னைப் போன்றவர்கள் மீது ஏன் கோபம் கொள்ளப்போகிறார்?’’

‘‘நான் தப்பு செய்தது இப்பொழுதுதான் தெரிகிறது. நான் அதை உணர்ந்துகொண்டேன். நானும் வருகிறேன் உங்களுடன், அவரைக் காண!’’
இருவரும் கிளம்பி வந்தார்கள். எதிரில் குல்கர்னி வைத்தியர் வந்தார்.

‘‘என்ன மகல்சாபதி! எங்கே இருவரும் கிளம்பினீர்கள்? அந்த பக்கீரைக் காணவா? இந்த கர்மத்திற்கு என்ன சொல்வேன்? நீங்கள் அவருக்கு அடிமையாகிவிட்டீர்களா?’’ - டப்பாவிலிருந்து மூக்குப்பொடி எடுத்து சர்ரென்று நாசியில் ஏற்றி, ஒரு பெரிய தும்மலைப் போட்டுவிட்டுத் தொடர்ந்தார் குல்கர்னி. ‘‘மகல்சாபதி! நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?’’
‘‘என்ன உண்மை? சொல்லுங்கள் வைத்தியரே.’’
‘‘நீங்கள் சாலச்சிறந்த பிராமணராக இருந்து என்ன பிரயோஜனம்? ஆமாம்... நீங்கள் பிராமணரா, இல்லையா?’’
‘‘பிராமணன்தான்.’’

‘‘பின் ஜாதியைக் குறித்து பெருமையோ, தன்மானமோ இருக்க வேண்டாமா? நீங்கள் பாவம் செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.’’
‘‘சரி, என்ன உண்மை சொல்ல வந்தீர்கள்?’’
‘‘நாமெல்லோரும் உயர்ந்த பிராமணர்கள். இந்த உண்மையைத்தான் சொல்ல வந்தேன். அந்தக் கேடுகெட்ட போக்கிரி பக்கீருடன் நீ ஏன் சேருகிறாய்? இப்படிச் செய்வது வெட்கங்கெட்ட விஷயமாகவும் தர்ம சாஸ்திரத்திற்கு எதிரானதாகவும் உனக்குத் தெரியவில்லையா?’’
‘‘கொஞ்சம்கூட இல்லை. இந்த சாயி இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல.’’
‘‘பின் யார்? கிறிஸ்தவனா,
பார்ஸியா?’’
‘‘எல்லா மதத்தையும் ஜாதியையும் தாண்டியவர் அவர். மனித இனத்தை உய்விக்க வந்தவர்.’’

‘‘வா... வ்... வா... உன்னுடைய புத்தியை முழுவதும் மழுங்க வைத்துவிட்டார். ராம்! ராம்! பகவானே! ஷீரடியையும் ஒண்ணும்தெரியாத பாமர மக்களையும் பாலயோகியிடமிருந்து காப்பாற்றப்பா!’’ - கையைக் கூப்பி, ‘‘சரிப்பா மகல்சாபதி! நீங்கள் பைத்தியமாகிவிட்டீர்கள், சரி... ஆனால் பிறரையும் அப்படி ஆக்காதீர்கள்.’’
‘‘நான் யாரைப் பைத்தியமாக்கினேன்?’’
‘‘உதாரணமா வேண்டும்? இதோ அருகிலேயே நிற்கிறானே என் நோயாளி! அவனை எங்கே இழுத்துச் செல்கிறாய்?’’
‘‘சாயியிடம்!’’
‘‘நினைத்தேன்... அப்படியே ஆகிவிட்டது. அது சரி, அவனை அவரிடம் அழைத்துப் போய் என்ன பிரயோஜனம்? அந்த பக்கீர் வைத்தியனா?’’
‘‘அவர் எல்லாம் அறிந்த ஞானி.’’
‘‘இதைத்தான் நான் சொல்ல வந்தேன். எல்லாம் தெரிந்த ஞானி என்று நீங்கள் நினைப்பதுதான் அஞ்ஞானம்.’’

‘‘இருக்கட்டுமே!’’
‘‘இதோ பாரப்பா, தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் புராணம், வேதம், சாஸ்திரம் எல்லாம் கற்றவர்கள். அதைப் போல ஆயுர்வேத சாஸ்திரத்தையும் அறிந்தவர்கள். மூதாதையர்களின் கல்வியில் எனக்கு நம்பிக்கை இருப்பதால் அவற்றைப் படித்து எனக்கு அறிவு வளர்ந்திருக்கிறது. சும்மா வைத்தியம் செய்யவில்லை. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து அவர்களை மரணப்பிடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன்’’ - குல்கர்னி மார்பை நிமிர்த்தி வைத்துக்கொண்டு, ‘‘நான் கொடுக்கும் மருந்தினால் நோயாளியை அண்ட எமன் கூட பயப்படுவான், தெரியுமா?’’ என்று கர்ஜனையிட்டார்.
(தொடரும்...)

தமிழகத்தில் சாயி பாபாவே கட்டிய கோயில்!

சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு சொந்தமானது வளசரவாக்கத்தில் உள்ள ‘விஸ்வரூப ஷீரடி சாயி மந்திர்’. திரைத்துறை வி.ஐ.பி என்றாலும் இங்கு இவரை சராசரி பக்தராகப் பார்க்க முடிகிறது.

‘‘அடிப்படையில் நான் ஐயப்ப பக்தன்தான். என் மனைவிதான் பாபா படத்தையும் சிலையையும் வீட்டில் அங்கங்க வச்சிருப்பாங்க. அதெல்லாம் ஒரு பாஸிடிவ் வைபரேஷனை உருவாக்கினதை நானே கண்கூடா உணர்ந்தேன். அப்புறம்தான் எனக்கு சொந்தமான இந்தத் தோட்டத்துல ஒரு பாபா சிலை வச்சு, சுத்தி சுவர் எழுப்பலாம்னு ஆரம்பிச்சேன். இவ்வளவு சிறப்பான கட்டிடமெல்லாம் யாரும் பிளான் பண்ணாதது. தானாவே அமைஞ்சது இந்த அற்புதம். இதை பாபாவே கட்டிக்கிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கும்’’ என்பது ஏ.எம்.ரத்னத்தின் பணிவான ஸ்டேட்மென்ட்.

அப்படியே ஷீரடி கோயிலை படி எடுத்தது போன்ற அமைப்பும், ஒன்பது அடியில் பிரமாண்ட பாபா சிலையும் இந்த ஆலயத்தின் ஸ்பெஷல்கள். ஷீரடி போலவே இங்கும் நான்கு வேளை பூஜையுடன் பிரசாதமும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் இருக்கும் வரை தாராளமாய்த் திறந்திருக்கிறது. வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடக்கின்றன.
ஆலயத் தொடர்புக்கு: 97102 82877