நிழல்களோடு பேசுவோம்





உள்ளாடை  அரசியல்

இந்திய அரசியலில் பெண்களின் உடலும் உடைகளும் விவாதப் பொருளாகிவிட்டன என்பதைவிட, வேடிக்கைப் பொருளாகிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் காரணம், அவர்களுடைய ஆடைகள்தான் என்று முடிவுகட்டி பஞ்சாயத்து தலைவர்கள், அரசியல்வாதிகள், சாமியார்கள் என்று எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தீர்ப்பு வழங்கி வருகிறார்கள். அது இப்போது அடுத்த விபரீத கட்டத்திற்குச் சென்றுவிட்டது.

மும்பை மாநகராட்சியின் பா.ஜ.க பெண் கவுன்சிலர் ரிது தாவ்டே, ‘ஆயத்த ஆடையகங்களில் இருக்கும் பொம்மைகள் உள்ளாடைகளுடன் காட்சியளிப்பது பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரங்கள் மற்றும் வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கிறது’ என்ற புரட்சிகர கண்டுபிடிப்பைச் செய்துள்ளார். மேலும் டி.வி மற்றும் பத்திரிகைகளில் உள்ளாடை விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். மும்பை மாநகராட்சியின் 227 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர். தீர்மானம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ரிது தாவ்டே அதற்குள்ளாகவே துணிக்கடைகளில் உள்ளாடைகளுடன் காட்சியளிக்கும் பொம்மைகளை அகற்றும் பணியில் இறங்கிவிட்டார். அவரது மிரட்டலுக்குப் பயந்து பல கடைக்காரர்கள் பொம்மைகளை அகற்றி வருகின்றனர்.

‘‘பாலியல் குற்றங்கள் நிகழாமல் இருக்க நாம் எல்லோரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிவதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அது அவர்கள் சுதந்திரம். ஆனால் இதுபோன்ற பொம்மைகள்தான் ஆண்களின் தவறான செயல்களைத் தூண்டுகின்றன. வெற்று உடலில் உள்ளாடைகள் மட்டும் இருப்பது ஆண்களின் மனதை பாழ்படுத்தி அவர்களை குற்றங்களுக்குத் தூண்டுகிறது’’ என்பதுதான் ரிது தாவ்டேயின் வாதம்.

அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளும், அது ஊடகங்களில் பெறும் கவனமும் மக்களிடம் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த அச்ச உணர்வைப் பயன்படுத்தி சில உடனடி ஆதாயங்களை அடைவதற்காக இதுபோன்ற முட்டாள்தனமான உளறல்கள் பல்வேறு நபர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணமான உண்மையான பிரச்னைகளை இவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்வதே இல்லை. கற்பனையான, போலியான காரணங்களைக் கண்டுபிடித்து, பைத்தியக்காரத்தனமான தீர்வுகளைத் தொடர்ந்து முன்வைக்கின்றனர். ஒருவிதத்தில் பெண்களின் உடல் தொடர்பான மத்தியகால ஒடுக்குமுறை கருத்துகளுக்கும் இதுபோன்ற சிந்தனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெண்களின் உடலை ஒடுக்குவது அல்லது உடலின் வெளிப்பாட்டை ஒடுக்குவதன் மூலமாக பெண்களையும் ஒழுக்கத்தையும் பாதுகாக்கலாம் என்பது நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு ஆபத்தான கருத்து. தலிபான்கள் இதைத்தான் பல இஸ்லாமிய நாடுகளில் அமல்படுத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவில் இந்த விஷயத்தில் எல்லா தரப்பு மத அடிப்படைவாதிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

நிர்வாணத்தைக் கண்டு அஞ்சுவது, அதைக் கண்டு குற்ற உணர்வடைவது, பாலியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட திரிபுபட்ட மனங்களின் செயல்பாடு. இதை பொது அளவுகோல்களாக வைத்து சட்டங்களை உருவாக்குவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே மனநோயாளிகளாகவும் குற்றமனப்பான்மை கொண்டவர்களாகவும் பார்க்கும் செயல்.

எங்கள் ஊர் கோயிலின் முன்னே பிரமாண்டமான குதிரை சிலை ஒன்று இருக்கிறது. பால்ய காலத்தில் அந்த சிலை இருக்கும் மேடையில் அமர்ந்தபடி கோயில் குளத்தை எவ்வளவோ நாள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். அந்தக் குதிரையின் கால்களில் சிறு சிறு பெண் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அந்த சிற்பங்களின் அந்தரங்கப் பகுதிகள் சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் சிறுவனாக இருந்ததால், அதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.

எனது வீட்டில் நீண்டகாலமாக ஒரு அழகான பெண் பொம்மை இருந்தது. ஒரு நிஜப் பெண் போலவே மிக வசீகரமான பொம்மை. அதன் கண்கள் எனக்கு உயிருள்ள ஒரு பெண்ணின் கண்களைப் போலவே தோன்றியிருக்கிறது. திடீரென அந்த பொம்மை ஒரு நாள் காணாமல் போய்விட்டது. நீண்டகாலத்திற்குப் பிறகு அதை நான், பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையின் ஒரு மூலையில் கண்டுபிடித்தேன். அந்த பொம்மையின் மேலிருந்த அழகான ஆடை காணாமல் போயிருந்தது. அதன் செப்பமான பிளாஸ்டிக் மார்பகங்களில் நகக்கீறல்களைக் கண்டேன். பின்னர் அந்த பொம்மையைப் பற்றி ‘நிர்வாண பொம்மை’ என்ற கவிதையையும் எழுதினேன்.

பெண்களின் உள்ளாடைகளை ரகசியமாகத் திருடுகிறவர்கள் இருக்கிறார்கள். பெண்கள் பயன்படுத்துகிற சில அந்தரங்கமான பொருட்களைத் திருடுகிறவர்கள் இருக்கிறார்கள். பாலியல் சார்ந்த மனநோய்களில் எத்தனையோ விசித்திரங்கள் உண்டு. இந்த மனநோய் கொண்ட மனிதனுக்கு துணிக்கடையில் நிற்கும் குறைந்த ஆடையுள்ள பொம்மையும் ஒன்றுதான்; அந்த துணிக்கடையில் வேலை செய்யும் பெண்ணும் ஒன்றுதான். அந்த துணிக்கடைக்கு வெளியே சாலையில் நடந்துசென்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களும் ஒன்றுதான்.

இந்த விளம்பரங்கள் இச்சையைத் தூண்டிவிடும் என்றால், உணவுப் பொருட்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் பெரிய விளம்பர தட்டிகளைப் பார்த்துவிட்டு பசித்த மனிதர்கள் அந்த உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை கொள்ளையடிக்கத் தயாராகிவிடுவார்கள் என்று சொல்வதுபோல் இருக்கிறது. மேலும் இவர்கள், ஏதோ பொதுவெளியில் இப்போதுதான் குறைந்த ஆடையுடைய உருவ பொம்மைகளைப் பார்ப்பது போன்ற ஒரு பாவனையை மேற்கொள்கிறார்கள். அந்த உருவங்கள் மேற்கத்திய கலாசாரத்தின் விளைவுகள் என்று ஒரு போலி நியாயத்தையும் கண்டுபிடிக்கிறார்கள். கஜுராஹோ சிற்பங்கள் இந்தியாவின் உடல் சார்ந்த சிற்பக்கலையின் மாபெரும் கொண்டாட்ட வெளியாகப் போற்றப்படுகின்றன. இந்தியா முழுக்க கோவில்களில் செதுக்கப்பட்டிருக்கிற பெண் சிற்பங்கள் காம இச்சையைத் தூண்டுவதற்காக படைக்கப்பட்டன என்றால், அதைவிட இந்தியப் பண்பாட்டை அவமதிப்பதற்கு வேறெதுவுமே இல்லை.

ஏதோ பாலியல் உணர்வுக்கு ஆட்பட்டதும் உடனடியாக பாலியல் செயல்களில் இறங்கி விடும் உயிரினம்போல இவர்கள் மனிதனை சித்தரிக்கிறார்கள். உண்மையில் இது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான ஒன்று. ஒரு சிம்பன்ஸி குரங்குக்குக்கூட பாலியல் உணர்வு தூண்டுதலுக்கும் அது செயலில் இறங்குவதற்கும் இடையே பல்வேறு விதிகள் செயல்படுகின்றன என்று சொல்கிறார்கள். மனிதனோ ஒரு கலாசார விலங்கு. அவன் எந்த இயற்கையான உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டாலும், உடனடியாக அதன் கலாசார, சமூக விளைவுகளைப் பற்றி சிந்திக்கத் துவங்கிவிடுகிறான். மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டின்மீதும் மிகக் கடுமையான சமூக விதிகளும் சமய விதிகளும் ஒழுக்க விதிகளும் செயல்படுகின்றன. அரைகுறை ஆடையணிந்த ஒரு பொம்மையைக் காட்டி அவனை பாலியல் வன்முறைக்குத் தூண்டலாம் என்பது எவ்வளவு விபரீதமான கற்பனை!

இன்று இணையத்தின் வழியாகவும் தொலைக்காட்சியின் வழியாகவும் பத்திரிகைகளின் வழியாகவும் எண்ணற்ற நிர்வாண உடல்கள் எந்நேரமும் பெருகியவண்ணம் இருக்கின்றன. ஒரு நிர்வாண உடலை ஒரு மனிதன் சந்திப்பதற்கு அவன் கையிலிருக்கிற ஒரு மொபைல் கருவி போதும். அவன் அரைகுறை ஆடையணிந்த உருவத்தைத் தேடி துணிக்கடைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நிர்வாணம் என்பது இன்று நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதைக் கற்பனை செய்யவேண்டிய அவசியம் இல்லை. அது கண்முன்னால் ஒவ்வொரு கணமும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஒரு பெண் பொம்மையைக் கண்டு ஆண்கள் உணர்வெழுச்சி அடைவார்கள் என்றால், ஆண் பொம்மைகளைக் கண்டு பெண்கள் என்ன உணர்ச்சியடைவார்கள் என்று ரிது தாவ்டே சொல்லவே இல்லை.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

பள்ளி இறுதித் தேர்வுகளில் வழக்கம்போலவே மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற என்ன காரணம்?
- எஸ்.பி.பாபு, தூத்துக்குடி.
ஆண்கள் வேறெதில்தான் உருப்பட்டார்கள், இதில் உருப்பட?
மாதங்கள் பல ஆகிவிட்டன. அமைச்சர்கள் மாற்றம் ஏதும் காணோமே?
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

மந்திரியாக வேண்டிய அ.தி.மு.க ஆட்கள் பாக்கி இல்லாததால், அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மாற்றம் தொடரும்.
மலையாளத்துக்கும் செம்மொழி என்ற தகுதி கொடுக்கப்பட்டுள்ளதே?
- ஜாகிர் உசைன், உலகாபுரம்.

எல்லா மொழிகளையும் செம்மொழி ஆக்கிவிட்டால் தமிழை செம்மொழி என்று நாம் சிறப்பு அந்தஸ்து கொண்டாட முடியாதல்லவா... அதற்காகத்தான்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏழைகளின் வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளது என்கிறாரே பிரதமர்?
- ரேவதி ப்ரியன், ஈரோடு.

தனது அமைச்சர்களின் ‘வாங்கும் சக்தி’ அதிகரித்துவிட்டதை வைத்து அப்படி முடிவு செய்துவிட்டார் போலும்.
உலகைப் புரிந்துகொள்ள ஆங்கிலவழிக் கல்விமுறை நல்லதுதானே?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
புரிந்துகொள்வதற்கு தேவை புத்தி. ஆங்கிலமல்ல!

நெஞ்சில் நின்ற வரிகள்


தலைவனைப் பிரிந்து தலைவி வாடுவது என்பது தமிழ் சங்கக் கவிதை மரபில் ஒரு தீராத காப்பியத் துயரம். இந்தத் துயரத்தை எழுதியவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்தான் என்றபோதும், பெண்ணினுடைய பிரிவாற்றாமை தமிழ்க் கவிதையின் வழிநெடுக படர்ந்து கிடக்கிறது. யுத்தம், பொருளீட்டுதல் இரண்டின் பொருட்டும் ஆண்கள் பெண்களை விட்டுப் பிரிந்து சென்ற துயரம் நவீன யுகத்தில் துரோகத்தாலும் வெறுப்பாலும் நிகழ்ந்த பிரிவுகளாக மாறியது. ஆனால் ஒரு ஆணை நினைத்து பெண் காதலில் உருகும் சங்கக் கவிதை மரபில் அதே உச்சத்தைத் தொட்ட ஒரு பாடல், ‘படகோட்டி’ படத்தில் பி.சுசீலா பாடியது. எம்.எஸ்.வியின் துயரம் முறுக்கேறிய அவலக்குரலினூடே பி.சுசீலா பிரிவின் வெம்மையை நமது இதயத்தின் அடியாழத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறார். எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் இழப்பதற்கும் அடைவதற்கும் இடையேதான் எத்தனை பரிதவிப்புகள், நிச்சயமின்மைகள்.

என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனான்டி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவான்டி..
ஓ... ஓ... ஓ... போனவன் போனான்டி...

எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள்

சமகால நவீன கவிஞர்களில் ஒருவரான இவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிக அரிய பணி ஒன்றைச் செய்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தனது பக்கத்தில் தொடர்ந்து உள்ளீடு செய்து வருகிறார். கவிதைகளின்பால் பெரும் அலட்சியமும் பொறுப்பின்மையும் நிலவும் ஒரு காலகட்டத்தில் இந்த முயற்சி என்பது மிகப்பெரிய சேவை.
அவரது ஒரு பதிவிலிருந்து...

விமர்சனம் என்பது மிக நுட்பமான விஷயம். ஒரு படைப்பின் கூறுகளை ஆராய்ந்து விருப்பு வெறுப்பற்று கருத்துகளை முன்வைப்பதும், அது சார்ந்த ஆரோக்கியமான விவாதங்களை எழுப்புவதுமே விமர்சனத்தின் அடிப்படையான நோக்கமாக இருக்க வேண்டும். தமிழில் விமர்சனம் இரண்டு வகையாக முன் வைக்கப்படுகிறது. ஒன்று எழுதுபவரைக் கருத்தில் கொண்டு படைப்பை விமர்சிப்பது. மற்றொன்று சுயவிருப்பின் பொருட்டு படைப்பை நிராகரிப்பது அல்லது ஏற்பது.

ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்வதற்கான ஆயத்தத்தை ஏற்படுத்துவதே விமர்சனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். https://www.facebook.com/aganazhigai?fref=ts