கவர்ச்சி விவசாயம்!





இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டிலேயே விவசாயத்தை விட்டு விலகி ஓடும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அப்படியானால் வளர்ச்சியடைந்த ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கும்? அங்கு விவசாயிகளை தொடர்ந்து நிலங்களில் உழைக்கச் செய்ய, ஏகப்பட்ட புதுமைகளைச் செய்கிறார்கள். அதில் ஒரு புதுமைதான் ‘கவர்ச்சி காலண்டர்!’
நவீன தொழில்நுட்பம், புதுமையான கருவிகள் என விவசாயமும் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை அடைந்து வருகிறது. ஆனால் பலருக்கும் இது புரிவதில்லை. விவசாயம் செய்ய கிராமத்தில் வாழ்ந்தாக வேண்டும். ‘கிராமங்களில் வசதிகள் இல்லை. அக்கம்பக்கத்தில் இருக்கும் பிற விவசாயிகளும் பழம் பஞ்சாங்கமாக இருப்பார்கள். அவர்களோடு இணைந்து வாழ்வது சாத்தியமில்லை’ என இளைய தலைமுறை நினைக்கிறது.

அந்த நினைப்பை உடைப்பதற்காக 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியா இளம் விவசாயிகள் சங்கம் ஒரு புதுமையைச் செய்தது. விவசாயிகளின் இளம் மனைவியரை, நிலங்களிலும் பண்ணைகளிலும் நவீன உடையில் கவர்ச்சிப் படங்கள் எடுத்து ஒரு காலண்டர் தயாரித்தது. தேசத்தின் முன்னணி மாடல்களை விட அழகாகவும் நவீனமாகவும் இருந்த விவசாயிகளின் மனைவிமார்களைப் பார்த்து தேசமே வாய் பிளந்தது. மூன்றே நாட்களில் காலண்டர்கள் விற்றுத் தீர்ந்தன.

இதைப் பார்த்து பக்கத்து நாடான ஜெர்மனியின் பவேரியா பகுதியில் இருக்கும் இளம் விவசாயிகள் சங்கமும் இதேபோல செய்தது. இப்போது இரு நாட்டு விவசாயிகளும் இணைந்து ஆண்டுதோறும் காலண்டர்கள் தயாரிக்கிறார்கள்.



‘‘விவசாயக் குடும்பங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வத்தோடு மாடலாக இருக்க விண்ணப்பிக்கிறார்கள். அவர்களிலிருந்து 12 பேரைத் தேர்ந்தெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிறது. முன்னணி போட்டோகிராபரை வைத்து போட்டோஷூட் செய்கிறோம். கவர்ச்சியாக போஸ் கொடுக்க யாரும் தயங்கவில்லை. இந்த காலண்டர்களால் விவசாயம் பற்றிய மனநிலையே மாறியிருக்கிறது. நகரங்களிலிருந்து இளம் குடும்பங்கள் கிராமங்களுக்கு வந்து விவசாயம் செய்யும் அளவுக்கு மாற்றம்’’ என்கிறார்கள் பவேரிய விவசாயிகள் சங்கத்தினர்.
- அகஸ்டஸ்