+2 வுக்குப் பிறகு... கல்விக்கடன் வாங்குவது உங்கள் உரிமை





பொருளாதார பின்புலமற்ற மாணவர்களும் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டதுதான் கல்விக்கடன் வழங்கும் திட்டம். இதன்படி, வேலை உத்தரவாதமுள்ள படிப்பைப் படிக்கும் ஒரு மாணவன் எந்தப் பிணையும் இன்றி 4 லட்ச ரூபாய் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியும். வட்டியும் குறைவு. படிப்பு முடிந்து, வேலைக்குச் சென்றபிறகு கடனை அடைக்கலாம். ரிசர்வ் வங்கி, இந்திய வங்கியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் விதிமுறைகளின் கீழ், மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படுகிறது இந்த கல்விக்கடன் திட்டம். இதற்கென ஆட்சியர் அலுவலகங்களில் ஒரு அலுவலகமே செயல்படுகிறது. ஆனாலும் இதில் ஏகப்பட்ட பிரச்னைகள்.

‘‘உங்க ஏரியாவுக்கு நாங்க கடன்கொடுக்க முடியாது... வேற பேங்க் போய்ப் பாருங்க!’’
‘‘எங்க டார்கெட் முடிஞ்சிடுச்சு. வேற பேங்க்ல டிரை பண்ணுங்க...’’
‘‘இந்த படிப்புக்கெல்லாம் கடன் தரமுடியாது!’’
‘‘செக்யூரிட்டி இருக்கா... இல்லைன்னா கடன் இல்லை!’’
‘‘இப்போ கொடுக்கிறதில்லை. ஆறு மாசம் கழிச்சு வந்து பாருங்க...’’
சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போல், பல வங்கி மேலாளர்கள் இதுபோன்ற ரெடிமேட் வார்த்தைகளைச் சொல்லி விண்ணப்பம் கூட கொடுக்காமல் விரட்டுகிறார்கள். பல வங்கிகளில் பெரிய மனிதர்களின் பரிந்துரை அவசியமாக இருக்கிறது. ஆனால், ‘‘வங்கியாளர்கள் சங்கம், ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, விண்ணப்பத்தில் குறைபாடு இருந்தாலோ, சட்டபூர்வ ஆவணங்கள் விடுபட்டிருந்தாலோ ஒழிய எந்த விண்ணப்பத்தையும் நிராகரிக்க வங்கி மேலாளருக்கு உரிமையில்லை. வங்கிக்கடன் என்பது ஒவ்வொரு மாணவனுக்குமான உரிமை’’ என்று அடித்துச் சொல்கிறார், இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளைக் கையாண்டவரும், ‘இந்தியன் குரல்’ அமைப்பின் நிறுவனருமான வேலூர் எம்.சிவராஜ்.

‘‘80 சதவீத இந்தியர்கள், தங்களின் உரிமைக்காக குரல் எழுப்ப சக்தியற்றவர்கள். அதுபோன்ற மக்களுக்காகக் கொண்டு வரப்பட்டதுதான் கல்விக்கடன். பல மேனேஜர்கள் கடன் கேட்டுச் செல்பவர்களை அவமானப்படுத்துகிறார்கள். விண்ணப்பத்தை வாங்கி வைத்துக்கொண்டு அலைய விடுகிறார்கள். ஆட்சியர்களின் பரிந்துரையைக் கூட மதிக்க மறுக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களை ஒப்பிடும்போது, சென்ற ஆண்டுதான் ஓரளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது’’ என்கிறார் சிவராஜ். கடந்த மார்ச் மாத நிலவரப்படி சுமார் 45 ஆயிரத்து 787 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கல்விக்கடன் தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி எளிமைப்படுத்திக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு வரை, நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்ற மாணவர்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற விதிமுறை இந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களும் விதிமுறைக்கு உட்பட்டு கடன் பெறமுடியும்.

யாரெல்லாம் கல்விக்கடன் பெறலாம்?
‘‘மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மெடிக்கல், பாரா மெடிக்கல், பார்மசி படிப்புகள், பொறியியல், விவசாயம், பி.எட், பி.சி.ஏ, எம்.சி.ஏ, எம்.பி.ஏ மற்றும் தொழிற்கல்வி பயிலுவோர் கடன் பெறலாம். சுருக்கமாகச் சொன்னால், படித்தவுடன் வேலை கிடைக்க ஏதுவான படிப்புகள். பிளஸ் 2வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பது கூடுதல் தகுதி. முன்பு, குறிப்பிட்ட பகுதிக்கென்று ஒரு வங்கி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வங்கியில் மட்டுமே கடன்கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த ஆண்டு அந்த விதிமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட 27 பொதுத்துறை வங்கிகளிலும் கடன் பெறலாம். உள்நாட்டில் படிப்பதற்கு ரூ.10 லட்சம், வெளிநாட்டில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். 4 லட்சம் வரை கடன்பெற எந்த பிணையும் செலுத்தத் தேவையில்லை. 4 லட்சத்துக்கு மேல் பிணை தேவை.

கல்விக்கடனுக்கு சராசரியாக 12 முதல் 13 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. முன்பு, படிக்கும் காலத்திற்கு உரிய வட்டியை அரசே மானியமாக செலுத்தும் என்றார்கள். ஆனால் அது வெறும் பேச்சோடு நின்றுவிட்டது. மாணவரே வட்டியைக் கட்டியாக வேண்டும். படிக்கும் காலத்திலேயே வட்டியை சரியாகக் கட்டிவந்தால், கல்வி முடிந்து பணம் கட்டும்போது வட்டி விகிதத்தில் சில சலுகைகள் வழங்கப்படும்’’ என்கிறார் சிவராஜ்.

‘‘குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தருவோம் என்று சில வங்கிகள் சொல்கின்றன. கல்விக்கடன் என்பது குடும்பத்திற்கான கடன் அல்ல. தனி நபர் தொடர்பானது. குடும்பத்தில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் அனைவருக்கும் கடன் பெறலாம். அண்ணனுக்குக் கொடுத்த கடன் நிலுவையில் இருக்கிறது என்று கூறி தம்பிக்கு கடன் வழங்க மறுக்கமுடியாது. அதேபோல், தந்தை வாங்கிய வேறொரு கடன் நிலுவையில் இருக்கிறது என்று கூறி மாணவனுக்கு கல்விக்கடன் மறுக்கக்கூடாது. ஆனால் மொத்தத் தொகை 4 லட்சத்தைத் தாண்டினால் சொத்துப்பிணை தரவேண்டும்’’ என்கிறார் மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன்.  
 
‘‘கடன் பெறும் மாணவர்களுக்கு நிச்சயம் பொறுப்பு கூடுகிறது. செமஸ்டர்களில் ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக்கான கடனை நிறுத்தி விடுவதுண்டு. அந்தப் பாடத்தை மீண்டும் எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும். படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் வழங்கப்படாது. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும். படிப்பு முடித்து 1 வருடம், அல்லது வேலைக்குச் சென்று 6 மாதம்... இதில் எது முதலில் வருகிறதோ அதிலிருந்து கடனைக் கட்டத் தொடங்க வேண்டும். கடன்பெற்ற காலத்தில் இருந்து 7 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும்’’ என்கிறார் பாலசுப்பிரமணியன்.

பல வங்கிகளில் மேலாளர்கள் கல்விக்கடன் விண்ணப்பம் வழங்க மறுக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து அபிவிருத்திப் பிரிவில், கல்விக்கடன் பிரிவைக் கவனிக்கும் அதிகாரியிடம் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் எல்லா வங்கிகளுக்கும் பொருந்தும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அல்லது கவனிக்கப்படவில்லை என்றால் வங்கியின் மண்டல மேலாளரிடம் புகார் செய்யலாம். அவர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அவ்வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். ரிசர்வ் வங்கியிலும் இது தொடர்பான புகார்களை விசாரிக்க சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

  The Officer in charge Banking Service Grievances Cell, RBI Complex, Chennai600001.
(தொலைபேசி எண்கள்: 044-25399170, 25395963, 25395488)

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டுப் படிப்பு ஏழைகளுக்குச் சாத்தியமா..?
அடுத்த வாரம் அலசுவோம்.  
- வெ.நீலகண்டன்

கல்விக்கடன் மறுக்கப்பட்டால்?
‘‘உரிய காரணமின்றி கல்விக்கடன் மறுக்கப்பட்டால் தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி கேள்வி எழுப்ப முடியும்’’ என்கிறார் சிவராஜ். ‘‘விண்ணப்பித்த 15 முதல் 20 தினங்களுக்குள் வங்கியில் இருந்து உங்களுக்குத் தகவல் வராவிட்டால், ‘என் விண்ணப்பத்தின் நிலை என்ன, ஒருவேளை நிராகரித்து இருந்தால் எந்த விதிமுறைப்படி என் விண்ணப்பத்தை நிராகரித்தீர்கள், இதுவரை எத்தனை பேருக்குக் கடன் கொடுத்துள்ளீர்கள், என் விண்ணப்பத்தைப் பரிசீலித்த மேலாளர் பெயர், முகவரி, இது தொடர்பாக நான் புகார் செய்ய வேண்டிய மேலதிகாரியின் முகவரி, கடன் விதிமுறைக்கான அரசாணை... இதையெல்லாம் அனுப்புங்கள்’ என்று கோரி மண்டல அலுவலகத்தில் இருக்கும் மத்திய பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் உரிமை சட்டப்படி கடிதம் எழுதவேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு இதன்பிறகு கடன் மறுக்கப்படாது. இல்லாதபட்சத்தில் டெல்லியில் உள்ள தலைமை பொது தகவல் அலுவலருக்கு புகார் செய்து இதற்கென நஷ்ட ஈடே வாங்கமுடியும்; அல்லது வழக்கும் தொடுக்கமுடியும். இதுதொடர்பான உதவிகளுக்கு 94443 05581, 94434 89976 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என்கிறார் சிவராஜ்.