நியூஸ் வே





*  வடிவேலு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, அவரே பாடி, அவரே ஆட... ஆரம்பமாகிவிட்டது. களேபரமாக இசையமைத்திருப்பது இமான். ‘தெனாலிராமனாக’ ஆட்டம் போட்டார் வடிவேலு. ‘‘ஸ்டெப் தவறலையே’’ என அடிக்கடி கேட்டுக்கொண்டார்.

*  கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்திற்கு தனுஷ் கொடுத்திருக்கும் கால்ஷீட் 150 நாட்கள். முதலில் ஆனந்த் இத்தனை நாட்கள் கேட்டதும் ஆடிப் போன தனுஷ், கதையைக் கேட்டதும் கூலாகிவிட்டார். சம்பளமும் கொஞ்சம் உசத்திதானாம். சமர்த்துங்க!

*  ‘தங்க மீன்கள்’ பார்த்துவிட்டு சென்சாரில் பாராட்டித் தள்ளி விட்டார்கள். ‘‘இப்படியெல்லாம் பார்க்கவே முடியவில்லை’’ என கண்கலங்கினாராம் ஒரு பெண் உறுப்பினர்.

*  தமிழ் ‘கஜினி’யில் நயன்தாரா நடித்த கேரக்டரில் இந்தியில் நடித்த ஜியா கான் தற்கொலை செய்துகொண்ட செய்தி கடந்த வாரம் ஆந்திர தேசத்தில் வேறு மாதிரி கசிந்துவிட்டது. நயன்தாராவுக்கு நெருக்கமானவர்களுக்கு பலரும் போன் செய்து துக்கம் விசாரிக்க, ‘‘நான் உயிரோடுதான் இருக்கேன்’’ என விளக்குவதற்குள் நொந்து நூலாகி விட்டாராம் நயன்.

*  ‘மரியான்’ படத்திலும் யுவன்ஷங்கர் ராஜா பாடினாலும் பாடினார்... யுவனுக்கு ஒரு புது சங்கடம் வந்திருக்கிறது. ‘ஏ.ஆர்.ரஹ்மானை பாடச் சொல்லி ஒரு பாட்டை நம்ம படத்தில் கேட்டு வாங்கிவிடலாமே’ என அத்தனை டைரக்டர்களும் நச்சரிக்கிறார்களாம். நல்ல பாட்டாகப் போட்டு, அவரிடம் கேட்டு வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் யுவன். அனேகமாக அஜித் படத்தில் யுவன் இசையில் ரஹ்மான் பாடக்கூடும்!

*  அஞ்சலியும் அவரது சித்தியும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். சமாதான முயற்சியில், இரண்டு தரப்பிலும் வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார்களாம். ஆனால் இன்னும் எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை. அனேகமாக அடுத்த சந்திப்பில் எல்லாம் சரியாகி பிரஸ்மீட்டில் ‘ஸாரி’ சொல்லக்கூடும். இந்த தடவை ‘டைரக்டருக்கு’ தடா!

*  தமிழில் இரண்டு டைரக்டர்கள் நண்பர்களாக இருப்பதே அரிது. பார்த்தால் ‘ஹலோ சொல்லிவிட்டு அடுத்த வார்த்தை பேசாமல் நழுவுவார்கள். கேரளாவில் 5 இயக்குநர்கள் சேர்ந்து ‘5 சுந்தரிகள்’ என்ற படத்தை இயக்குகிறார்கள். ஐந்து கதைகள்; ஒரே படம். ஒரு இயக்குநருக்கு அரை மணி நேரம் வீதம் படம் 21/2 மணி நேரம் ஓடும். முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் ஆக அடுத்த தலைமுறைதான் வரணும் பாஸ்!

*  ஆதரவற்ற குழந்தைகளை மையமாக வைத்து சந்தோஷ்சிவன் இயக்கி இருக்கும் படம் ‘இனம்’. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தயாராகும் படத்தில் அரவிந்த்சாமி பின்னணிக் குரல் கொடுக்கிறாராம்.

*  அப்பா மாதிரியில்லாமல் படங்களை அள்ளிப் போட்டுக்கொண்டு ஒப்புக்கொள்கிறார் கௌதம் கார்த்திக். ஆனால் அப்பா மாதிரியே படப்பிடிப்புக்கு கொஞ்சம் லேட் என்டரிதான். புதுசு என்பதால் விட்டுப் பிடிக்கிறார்கள் டைரக்டர்கள்.



*  அப்பா மாதிரியில்லாமல் படங்களை அள்ளிப் போட்டுக்கொண்டு ஒப்புக்கொள்கிறார் கௌதம் கார்த்திக். ஆனால் அப்பா மாதிரியே படப்பிடிப்புக்கு கொஞ்சம் லேட் என்டரிதான். புதுசு என்பதால் விட்டுப் பிடிக்கிறார்கள் டைரக்டர்கள்.

*  மறைந்த நடிகர் ரகுவரனின் இசைஞானம் பலரும் அறியாதது. அவர் போட்டு வைத்துச்சென்ற சில இசை கோர்ப்புக்களை ஆல்பமாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் ரகுவரனின் மனைவி ரோகிணி.

*  மகன் சிபிராஜுக்காக மீண்டும் சொந்தப் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் சத்யராஜ்.

*  சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூன்று பேருமே விளம்பரங்களில் நடிப்பதில் கிடைக்கும் பணத்தை தங்கள் கணக்கில் போட்டுக் கொள்வதில்லை. அதை அப்படியே ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கிற தங்களது ‘அகரம் அறக்கட்டளை’க்கு மாற்றிவிடுகிறார்கள். எல்லோரும் இதைப் பின்பற்றலாமே!

*  ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தில் அவரது சம்பளமாக முதலில் 14 கோடி ரூபாய் பேசப்பட்டு, இப்போது 16 கோடியாக ஏற்றப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

*  ‘‘இளையராஜா இசையில் பாடல் எழுதினால் சந்தோஷப்படுவேன்’’ என மதன் கார்க்கி சொல்லியிருக்கிறார். மகிழ்ந்த யுவன்ஷங்கர், அதற்கு அச்சாரமாக தன் படத்திலேயே எழுதச் சொல்லி விட்டார். இந்தக் கூட்டணி நிலைத்து ஜெயிக்கட்டும்!

சைலன்ஸ்

தன் மகனின் திரை அறிமுகத்துக்கு சரியான டைரக்டர் கிடைக்காமல் தடுமாறுகிறார் ஆக்ஷன் நடிகர் கம் பரபரப்பு அரசியல் தலைவர். ‘பெரிய இடத்துப் பகை’க்காக பதறுகிறார்கள் பெரிய டைரக்டர்கள். ‘புதுசே போதும்’ என, நாளைய இயக்குநர்களில் தேடத் துவங்கிவிட்டார் தலைவர். அறிமுக விழாவை பெரியதாக நடத்தத் தீர்மானித்திருக்கிறார்கள்.

‘புத்த’ நடிகரின் காதல் கிட்டத்தட்ட ஃபைனல் ஸ்டேஜுக்கு வந்துவிட்டது. ‘‘இந்த முறையாவது ஏமாற்றாமல் கல்யாணம் செய்து விடப்பா’’ என்று பெற்றோர் கெஞ்ச, நடிகரும் தலையாட்டிவிட்டார். இப்போது நடிகை புதுப்படங்களை ஒப்புக்கொள்ள யோசிக்கிறார்.

திடீரென பக்தி மார்க்கத்துக்குத் தாவிய விரல் நடிகரை தன் படத்தில் கெஸ்ட் ரோலுக்குக் கேட்டிருந்தார் ‘கரகர’ காமெடியன். 6 கோடி சம்பளத்தில் அரை கோடியாவது தருவார் என்ற எதிர்பார்ப்பில் போன ஹீரோவிடம் சம்பளப் பேச்சே எடுக்கவில்லை காமெடியன். ‘‘லண்டன்ல ஷூட்டிங் வைங்க...’’, ‘‘துபாய்ல வைங்க’’ என அலைய விட்டு கடைசியில் கோவாவுக்கு ஒப்புக் கொண்ட ஹீரோ, அங்கேயும் ஷூட்டிங் போகாமல் இமயமலை ஏறிவிட்டார். ‘‘இது உனக்குத் தேவையா...’’ என சுட்டு விரலை புருவ மத்திக்கு நீட்டி இப்போது புலம்புகிறார் காமெடி.