ரஜினியை நினைச்சுக்கிட்டு வராதீங்க!





‘‘ ‘அருவி ஓர் அதிசயம், ஆறு ஓர் அற்புதம், வாய்க்கால் ஒரு வரப்பிரசாதம்’னு கவிஞர் விக்ரமாதித்யன் கவிதை எழுதியிருப்பார். எனக்கு ‘தில்லுமுல்லு’ பண்ணக் கிடைச்சதுகூட அதிசயம் தான், அற்புதம்தான். எவ்வளவு பெரிய ஸ்டார் நடிச்ச படம்... அதில் கே.பி சார், எவ்வளவு அருமையா ரஜினிக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்திருப்பார். போன பிறப்பில ஏதோ நான் புண்ணியம் செய்திருக்கணும்னு தோணுது. மிகையாக சொல்லலை. என் மனசிலிருந்து வருகிற வார்த்தை’’ - உணர்ச்சியோடும் உண்மையாகவும் பேசுகிறார் டைரக்டர் பத்ரி. டைரக்டர் சுந்தர்.சியின் அத்யந்த சீடர்.

‘‘ஆரம்பத்தில் பேசியிருக்கோம். இப்ப முதல் பிரதி பார்க்கிற நிலையில் எப்படி வந்திருக்கு?’’

‘‘அன்னிக்கு தேதியில் ரஜினி சாருக்கே ‘தில்லுமுல்லு’ முக்கியமான படம். நாமெல்லாம் ரஜினியை அப்படிப் பார்த்ததேயில்லை. இப்ப எவ்வளவோ மாறிப் போச்சு. அதனால் இந்த ‘தில்லுமுல்லு’வில் இன்னும் வகைவகையா காமெடி பண்ணியிருக்கோம். நடிகர்கள் பங்களிப்பு இதில் பெருமளவு இருக்கு. ரஜினி, கமல், சௌகார் ஜானகி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ்னு இருந்த இடத்தில் சிவா, சந்தானம், கோவை சரளா, பிரகாஷ்ராஜ், சூரி, சத்யன்னு இருக்காங்க. சிவா இப்ப எது சொன்னாலும் நகைச்சுவையா இருக்கும். ரஜினியைப் பார்க்கப் போன இடத்தில் கூட சிவா கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘சிவா... உங்க காமெடி சூப்பர் சூப்பர்’னு ரெண்டு தடவை சொன்னார் ரஜினி சார். சிவா கண்களில் அவ்வளவு மயக்கம். தரையில் கால் தொட்டுட்டிருந்துச்சான்னு எனக்கே சந்தேகம். எங்களுக்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரிப்பு தாங்க முடியலை. சரமாரியா அவர் அடிச்ச ஜோக்குகளுக்கு நிச்சயமா ரெஸ்பான்ஸ் இருக்கும். தேங்காய் இடத்தை யார் நிரப்புவதுன்னு பெரிய சந்தேகம். ஏகப்பட்ட மிமிக்ரி பேசுவார். அந்த இடத்தில் பிரகாஷ்ராஜ் பொருந்தி வந்ததுதான் பெரிய ஆச்சரியம். தேங்காய் இடத்திற்கு சற்றும் குறையாமல், அவர் பேசின டயலாக் இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது...’’

‘‘இப்ப காமெடி சீசன்னு நினைச்சு செய்தீர்களா?’’



‘‘அட, காமெடிக்கு சீசனே இல்லைங்க. எங்க குரு 25 படங்களுக்கு மேலே செய்திட்டார். அதுல ஒவ்வொரு சீனும் இப்ப காமெடி சேனல்களுக்குத் தீனி போட்டுட்டு இருக்கு. சிரிக்கறது யாருக்காவது பிடிக்காமல் போகுமா? வி.ஜி.பியில் நிறுத்தி வச்சிருக்கிற உம்மணாமூஞ்சி காவலாளி கூட, இந்தப் படம் பார்த்த அஞ்சாவது நிமிஷம் சிரிக்க ஆரம்பித்து விடுவார். உன்னதத்தை எப்போதும் தேடி அலைந்து கொண்டே இருப்பது கஷ்டம். அதனால நகைச்சுவை தமிழ் உலகில் எப்போதும் 100% கியாரண்டி. அதுவும் ரஜினி படத்தை எடுத்திட்டு பண்றது இன்னும் நம்பிக்கை. ரஜினியே, ‘இந்தப் படத்தை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன். எடுத்திட்டு சொல்லுங்க’ன்னு முன்னாடி சந்திக்கும்போது சொன்னார். அவருக்கேத்த ஒரு தேதியில் அழைத்து வந்து காட்டணும்.’’

‘‘படத்தில் தேங்காய் சீனிவாசன், கமல் ரோல் வித்தியாசமா, எதிர்பார்க்க முடியாமல் இருக்கும். இதில் பிரகாஷ்ராஜ், சந்தானம் எப்படி?’’

‘‘படத்தின் ஹைலைட்டில் நிச்சயம் பிரகாஷுக்கு இடம் இருக்கும். சிவாவும், பிரகாஷும் சந்திக்கிற நேரம் எல்லாம் சிரிப்பு வெடிதான். மாதவி இடத்தில் இஷா தல்வார். சௌகார் இடத்தை கோவை சரளா நிரப்பியிருக்கிற விதம் அற்புதம். ‘சதிலீலாவதி’யில கமல் சாருக்கே அவங்க டஃப் கொடுத்திருப்பாங்க. இவ்வளவு நாள் சேர்ந்த அனுபவத்தோட, அவங்க இன்னும் பின்னியிருக்காங்க. கமல் சார் கெஸ்ட் ரோலில் சந்தானம் சூப்பர். ஒண்ணும் பிரமாதம் இல்லை சார்... எவ்வளவு கவலைகளோடும் வாங்க, சிரிச்சிட்டு உடம்பே லேசாகி போகலைன்னா என்னைக் கேளுங்க. நீங்க வரவேண்டியதற்கு ஒரே ஒரு தகுதி மட்டும் இருக்கு... இது ரஜினி நடிச்ச ‘தில்லுமுல்லு’ன்னு நினைச்சு வரக்கூடாது. அதை மூலக் கருவாக வச்சுத்தான் விளையாடியிருக்கோம்.’’



‘‘ ‘தில்லுமுல்லு’வில் பாட்டு பிரசித்தம்... இதில்?’’
‘‘இதிலும் அதே எம்.எஸ்.விதான் ட்யூன் போட் டார். இன்னிக்கு இருக்கிற சந்தோஷ் நாராயணனுக்குக்கூட டஃப் பைட் கொடுப் பார் போல. அத்தனை நேர்த்தி. யுவன் அதை பாடல் ஆர்க்கெஸ் ட்ரா பண்ணி வடிவமைச்சார்.

‘கைபேசி எண் கூட சொல்லாமலே கைவீசி சென்றாளே நில்லாமலே’ன்னு வாலி எழுதி எம்.எஸ்.வி ட்யூன் போட்டது, இங்கே யாருக்கும் குறையாத அழகு. ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ அப்படியே புது டிசைனில் வந்திருக்கு. இரண்டு பேரும் சேர்ந்து வேற நடிச்சுக் கொடுத்து அதகளம் பண்ணியிருக்காங்க. வேட்டி, சட்டையோடு யுவன் நெற்றியில் திருநீறு பட்டையோடு வர, எம்.எஸ்.வி. சூட் கோட்டில் வந்தார். கண்கொள்ளாக் காட்சி அது. எம்.எஸ்.வி ட்யூன் பண்ணினதை எம்.ஜி.ஆர் கூடவே இருந்து பார்த்திருக்கார். எனக்கும் அந்த வாய்ப்பு வந்ததுன்னா... அடடா என்ன சொல்ல! 80 வயசு எம்.எஸ்.வி எனக்கு 18 வயசு பையனாகத்தான் தெரிந்தார். இந்த ‘தில்லு முல்லு’வும் சிரிப்புக்கு உத்தரவாதம்.’’
- நா.கதிர்வேலன்