சம்மதம் இருந்தா எதுவும் தப்பில்ல!





‘‘கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஆசை காட்டி என்னை மோசம் பண்ணிட்டாருங்கய்யா...’’

- சினிமா நாட்டாமை முதல் சுப்ரீம் கோர்ட் வரை அடிக்கடி வரும் இந்த டைப் வழக்குகள் அதிகரிக்கின்றனவே தவிர, குறையவில்லை. காதலில் விழுந்து, திருமண வாக்குறுதி கொடுத்து, வேலி தாண்டியதும் விலகி ஓடும் ஆண்களை பெண்கள் பல நேரங்களில் வற்புறுத்தியே திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. கையில் குழந்தையோடு காதலன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் தலைப்புச் செய்தி ஆகிறார்கள்.

ஆனால், ‘ஒரு பொண்ணு, இந்த விஷயத்துல பொய் சொல்ல மாட்டா’ என இதற்கு வழங்கப்படும் வழக்கமான தீர்ப்புகள் மாறும் நேரம் வந்துவிட்டது போலும். ‘ஒரு மேஜர் பெண்ணின் சம்மதத்தோடு உறவு வைத்துக் கொண்டால், அந்த உறவு திருமணத்தில் முடியவில்லை என்றாலும் கூட அது பாலியல் குற்றமாகாது!’ என சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு தந்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இது அஜால்குஜால் ஆண்களுக்கு அட்வான்டேஜ் ஆகிவிடாதா? சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அஜீதாவிடம் கேட்டோம்...

‘‘பதினெட்டு வயதாகாத மைனர் பெண்ணாக இருந்தால், அவள் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலேயோ கொள்ளும் எந்த விதமான பாலியல் உறவுக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின்படி தண்டனை உண்டு. மேஜர் பெண்ணாக இருந்தாலும், அவள் சம்மதமில்லாமல் கொள்ளும் பாலுறவு வன்புணர்ச்சிக்கு கடுமையான தண்டனை உண்டு. ஆனால் இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது பத்தொன்பது. மேலும் அவள் குற்றம் சாட்டப்பட்டவரின் மேல் பலாத்கார வன்புணர்ச்சி குற்றச்சாட்டை வைக்கவில்லை. ஆக, திருமணத்துக்கு முன் ஆண் - பெண் இருவரிடையே ஏற்படும் முழுச் சம்மதத்துடனான பாலுறவாகத்தான் அதை ஏற்க முடியும். இந்த உறவுக்கு இருவருமே பொறுப்பு.

பொதுவாக, இப்படி அந்த உறவுகளுக்குப் பின் காதலர்கள் திருமண பந்தத்தில் இணைகிறார்களா என்பது கேள்விக்குறிதான். ஒருவருக்கொருவர் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், குடும்பம், பொருளாதாரம், சாதி, அந்தஸ்து என பல காரணங்களால் அவர்கள் பிரியலாம். அப்படிப் பிரியும் பட்சத்தில், ஆணை மட்டுமே குற்றவாளியாக்கி எப்படி தண்டிக்க முடியும்? இதுதான் அந்த வழக்கின் அடிப்படை.

இந்தத் தீர்ப்பை சாதகமாக எடுத்துக்கொண்டு எந்தப் பெண்ணையும் காதல் நாடகமாடி, திருமண ஆசை காட்டி ஏமாற்றிவிட முடியும் என்பது உண்மையல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் ஒரு நபர் பழகியதும் ஏமாற்றியதும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தண்டனை நிச்சயம். இந்தத் தீர்ப்பு அப்பாவி ஆண்களுக்கானது. நமது சாதி அமைப்பில் பெண்களைப் பெற்றவர்கள் பலர், தங்கள் பெண்ணைக் காதலித்தவனைப் பழிவாங்க வேண்டும் என்ற உந்துதலோடு செய்யும் புகார்களுக்குத்தான் இந்தத் தீர்ப்பு பதில் சொல்கிறது.

மேலும் சில வேளைகளில் பெண்களும் கூட, பாலியல் குற்ற வழக்கை ஆயுதமாக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட இயல்பு மீறிய வேளைகளில் கூட, சட்டம் நியாயத்தின் பக்கம் நிற்க இந்தத் தீர்ப்பு உதவும்.

அதற்காக இந்தத் தீர்ப்பு மோசமான முன்னுதாரணமாகிவிட முற்றிலும் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா சட்டங்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. தவறாகப் பயன்படுத்துகிறவர்கள் இருப்பார்கள். இருவரும் சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களாக இருவருக்குமான உரையாடல்கள், போன் கால்கள், போட்டோக்கள், உறவினர்களின் வாக்குமூலங்கள் போன்றவை இருக்கும். இவற்றில் உள்ள உண்மைத் தன்மையை ஊர்ஜிதம் செய்வது காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் கடமை. சொல்லப் போனால், இனிமேல் இப்படிப்பட்ட வழக்குகளில் காவல்துறையும் நீதித்துறையும் இரு மடங்கு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது’’ என்றார் அவர்.
- டி.ரஞ்சித்
படம்: தமிழ்வாணன்