உப்புக் காற்றின் வலி!





‘‘புகைப்படக்கலை என்பது காலத்தைப் பதிவு செய்கிற விஷயம். ஒவ்வொரு புகைப்படமும் சமூகத்தை பிரதிபலிக்கிற உயிருள்ள ஆவணம். சமூகதளத்தில் இயங்கும் ஒரு போட்டோகிராபர், தன் கேமரா மூலம் வரலாற்றை எழுதுகிறார். கலைத்தன்மையும் அழகியலும் அந்த வரலாற்றுக்கு உயிர் கொடுக்கிறது...’’

- மென்மையாகப் பேசுகிறார் ந.செல்வன். இவரது களம் ‘டாகுமென்டேஷன் போட்டோகிராபி’. தமிழகத்தின் பல்வேறு சமூகங்களின் வாழ்க்கைப்பாட்டை புகைப்படங்களாக பதிவு செய்திருக்கிறார். உப்பளத்து மனிதர்களின் உழைப்பு வலியைச் சொல்லும் இவரின் அண்மைக்கால புகைப்படத் தொகுப்பு மிகவும் ஜீவன் நிரம்பியது.

நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்று கிறார் செல்வன். ‘‘போட்டோகிராபி மிகுந்த வளம்கொழிக்கும் துறையாக மாறியிருக்கிறது. ஆனால், போட்டோகிராபருக்கும் வரலாற்றை எழுதுகிற கடமை உண்டு. வரலாற்றாசிரியனைக் காட்டிலும் உயிர்ப்போடு போட்டோகிராபர் வரலாற்றைப் பதிவுசெய்ய முடியும். டிஜிட்டல் புரட்சி அந்தப்பணியை எளிமைப்படுத்தி உள்ளது. பத்து பக்கங்களில் எழுதப்படும் சரித்திரத்தை ஒரு புகைப்படத்தில் நிறைவு செய்யலாம்’’ என்கிற செல்வன், கும்பகோணம் கவின் கலைக்கல்லூரியில் பி.எஃப்.ஏ படித்திருக்கிறார்.



‘‘இயல்பில் நான் ஒரு ஓவியன். கல்லூரிக் காலத்தில், அமர்ந்து வரைய முடியாத இடங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்து வரைய வேண்டிய அவசியம் இருந்தது. வயது ஆக ஆக, மனதுக்குள் கலைக் காதல் வளரத் தொடங்கியது. தேடல் விரிந்து புகைப்படக்கலை மீது ஒரு பிடிப்பு வந்தது. அதற்குக் காரணம் பாலுமகேந்திரா. அவருக்கு முன்பு ஒளிப்பதிவு என்பது சம்பவத்தை முன்னிறுத்துவதாக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்தான் சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள காட்சியை ரசிகனின் கண்களுக்கு முன்னால் கொண்டு வந்தார். ரசிகன் சொக்கிப் போனான். அதையே என் பாதையாக அமைத்துக் கொண்டேன். அவரைப் போலவே சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம், என் போட்டோகிராபி தேடலை அதிகமாக்கியது. ஆனால் காலம் வேறு பாதையை அமைத்துக் கொடுத்தது.

விஷுவல் போட்டோகிராபி, போர்ட்ரெய்ட் போட்டோகிராபியில் எனக்கு தீவிர ஆர்வம் இருந்தது. போர்ட்ரெய்ட் போட்டோகிராபி என்பது, மன உணர்வுகளை காட்சிவழியாக துல்லியமாக வெளிப்படுத்துவது. அதற்கு ஊடகமாக இருப்பது ஒளி. ஒளிக்கு மொழி உண்டு. அந்த மொழிக்குப் பெயர் மௌனம். ஒளியைக் கையாளத் தெரிந்து விட்டால் புகைப்படக்கலை கைவந்துவிடும். ஒளி, உணர்வு, புகைப்படக்கருவி மூன்றும் ஒரு புள்ளியில் கூடுமிடத்தில்தான் நல்ல புகைப்படம் உருவாகிறது. காட்சியின் உச்சகட்ட தருணம்தான் அந்தப் புள்ளி. புகைப்படக் கலையின் சகல பிரிவுகளுக்கும் பொருந்தும் இலக்கணம் இது...’’ என்கிற செல்வன், உப்பள மக்களின் வாழ்க்கையைத் தொகுத்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.



‘‘என் மனைவியின் ஊர் வேதாரண்யம். அங்கு செல்லும்போதெல்லாம் ஆறுகாட்டுத் துறையின் கடற்கரை அழகில் கரைந்துபோவேன். அப்படியான ஒரு தருணத்தில், அகஸ்தியம்பள்ளி உப்பளத்தைப் பார்க்க நேர்ந்தது. மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்களும் கடல் சார்ந்து வாழ்பவர்கள்தான். இரு தரப்புக்குமே உழைப்புக்கேற்ற கூலி கிடைப்பதில்லை. உழைப்புக்குத் தொடர்பில்லாத இடைத்தரகர்களின் கையில் தொழிலின் மூக்கணாங்கயிறு சிக்கியிருக்கிறது. அவர்களே உழைப்பைத் தீர்மானிக்கிறார்கள்; கூலியையும் தீர்மானிக்கிறார்கள். இதை யெல்லாம் கேள்விப்பட்டதும் ஆவணப்பணியைத் தொடங்கிவிட்டேன். ஓரிரு நாள் விடுமுறை கிடைத்தாலும் உப்பளம் நோக்கிச் சென்றுவிடுவேன்.

கடலோரப் பகல் மிகவும் உக்கிரமானது. அதனால் பகல்நேரத்தில் உப்பளத்தில் எளிதான வேலைகளே செய்யப்படும். உப்பு வாருவது போன்ற கடினப்பணிகள் இரவு நேரத்தில்தான் நடக்கும். உப்புக்குள்ளேயே நிற்கும் தொழிலாளர்களின் கால் அரித்துப் போயிருக்கும். உப்புக்காற்று முகத்தின் தன்மையைக்கூட மாற்றிவிடும். உப்பளத் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு நோய்க்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். வலியும் வார்த்தையுமாக அவர்கள் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தினேன்’’ என்கிறார் செல்வன்.



நெய்வேலி வட்டாரத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களைத் தேர்வுசெய்து ஒரு ஃபேஸ்புக் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ள செல்வன், டாகுமென்டேஷன் போட்டோகிராபி பற்றி இணையம் வழியாக வகுப்பெடுக்கிறார். களப்பயிற்சிக்கும் அழைத்துச் செல்கிறார். ‘இருட்டறையில் வெளிச்சம்’ என்ற தலைப்பில் புகைப்படக் கலையின் வரலாறு பற்றிய ஒரு ஆவணப் படத்தையும் உருவாக்கியுள்ளார்.
- வெ.நீலகண்டன்