அட்வான்ஸ் : கே.ஆனந்தன்





‘‘முதலாளி, என் பொண்ணுக்கு அடுத்த வாரம் கல்யாணம். எவ்வளவோ சிக்கனமா பண்ணியும் பட்ஜெட்ல ஒரு அம்பதாயிரம் குறையுது... கடன் தர்றேன்னு சொன்ன மாமா, கடைசி நேரத்துல காலை வாரிட்டாரு. நீங்க அதைக் கொடுத்து உதவினா நல்லா இருக்கும். மாசா மாசம் என் சம்பளத்துல பிடிச்சுக்கோங்க...’’ - தயக்கமாகக் கேட்டார் தோட்டக்காரர் முத்துசாமி.
கோடீஸ்வரராக இருந்தாலும் பரந்தாமன் அதற்கு இரங்கவில்லை.

‘‘அம்பதாயிரமா? என்ன முத்துசாமி... விளையாடறியா? உன் சம்பளமே மாசம் அஞ்சாயிரம்தான்... இதுல இவ்வளவு தொகையை எப்படி அடைப்பே? வேணும்னா அஞ்சாயிரமோ, பத்தாயிரமோ தர்றேன்... வாங்கிக்கோ!’’

‘‘பரவாயில்லைய்யா... நான் வேற ஏற்பாடு பண்ணிக்கறேன்’’ - ஏமாற்றத்துடன் நடந்தார் முத்துசாமி.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்... கல்யாண வேலையில் பிஸியாக இருந்த முத்துசாமி வீட்டுக்கு வந்தது அந்த கோஷ்டி.
‘‘முத்துசாமி... நம்ம ஊர் பெருமாள் கோயில்ல ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கப் போகுது. ஆண்டாள் கல்யாணத்துக்கு உதவி செய்தா, உன் பொண்ணும் நல்லா இருக்கும். ஏதாச்சும் டொனேஷன் கொடு!’’

இருநூறு ரூபாய் கொடுத்துவிட்டு பெயர் எழுதுவதற்காக டொனேஷன் நோட்டைத் திறந்தார் முத்துசாமி. நோட்டின் முதல் பக்கத்தில் முதல் வரிசையில் எழுதியிருந்தது... ‘பரந்தாமன், தொழிலதிபர் - நன்கொடை ரூ.1 லட்சம்...’