வாழ்த்து





ரிசப்ஷன் கிராண்டாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரபல திரைப்பாடகி திவ்யஸ்ரீ, ஆர்கெஸ்ட்ராவில் பாட்டோடு டான்ஸும் ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு இலைக்கு ஐந்நூறு என்ற அளவில் சாப்பாடு, எல்லோரையும் திகைக்க வைத்தது.
மாப்பிள்ளை ரித்தேஷை நெருங்கி வந்தார் அவன் அப்பா முருகானந்தம்.

‘‘ரித்தேஷ்... பத்து மணிக்கு அப்புறம் முக்கியமான வி.ஐ.பிக்கள் நிறைய பேர் வர்றாங்க. ஃப்ரெஷ்ஷா இரு!’’
தொடர்ந்து கைகுலுக்கி, சிரித்து, போஸ் கொடுத்து... ரித்தேஷ் களைப்பானான். புது மனைவி லேகாவும் அப்படியே!
மணி பத்து முப்பது ஆனது. அப்பா பரபரப்புடன் வந்தார். மகனையும், மருமகளையும் அழைத்துக் கொண்டு சாப்பாட்டுக் கூடத்துக்குள் பிரவேசித்தார். அருகிலுள்ள முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஆதரவற்றோர் சுமார் அறுபது பேர் பந்தியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

‘‘ரித்தேஷ், இவங்கல்லாம் அன்புக்கும் உபசரிப்புக்கும் ஏங்கறவங்க... இதுவரைக்கும் வந்த கூட்டத்துல சில பேரைத் தவிர பெரும்பாலானவங்க பிரமிப்பு, பொறாமை, வெறுப்பு... இப்படி பல குணங்களோடதான் உங்களை வாழ்த்தியிருப்பாங்க. வேற வழியில்ல... அவங்க நமக்குத் தேவைதான். ஆனா, இவங்ககிட்ட நீங்க வாங்கப்போற ஆசீர்வாதம்தான் உண்மையானது... தூய மனசுல இருந்து வருவது!’’
அப்பா சொன்னதை உணர்ந்த ரித்தேஷும் லேகாவும் அவர்களை ஆனந்தக் கண்ணீருடன் வணங்கினார்கள்!