பட்டினியை ஒழிக்குமா உணவுப் பாதுகாப்பு மசோதா?





‘பசியையும் பஞ்சத்தையும் வறுமையையும் இந்தியாவிலிருந்து ஒழிக்கப் போகிற சட்டம் இது’ என்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி. தங்கள் கட்சிக்கு ஓட்டுகளை அள்ளிக் குவித்து, மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்தும் அஸ்திரமாக இதைப் பார்க்கிறது காங்கிரஸ். அதனால்தான், ‘இதை எதிர்ப்பவர்கள் ஏழைகளுக்கு துரோகம் செய்கிறார்கள்’ என்கிறது அந்தக் கட்சி. இதனால் பதைபதைத்துப் போன பாரதிய ஜனதா கட்சி, ‘‘நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுங்கள்’’ என அதிரடியாக அறிவித்து, பெயர் தட்டிச் செல்லப் பார்க்கிறது. இந்த சட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டு, இந்தியாவில் பட்டினியையும் பட்டினிச்சாவுகளையும் தடுக்கலாம் என நினைக்கிறது மத்திய அரசு. ஆனால், ‘‘இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும்’’ என எச்சரிக்கிறார்கள் சமூகப் பொருளாதார நிபுணர்கள்.

‘ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் உலகின் மிகப்பெரிய பரிசோதனை’ என்று சொல்லப்படும் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா கடந்த 2011ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக இதை அமல்படுத்த துடிக்கிறது காங்கிரஸ் கட்சி. ‘‘இது மட்டும் சட்டமாகிவிட்டால், இந்தியாவில் ஏழைகள் யாரும் பட்டினியால் சாக மாட்டார்கள்’’ என்கிறது அந்தக் கட்சி. நோபல் பரிசு வாங்கிய பொருளாதார மேதை அமர்த்தியா சென் இந்த சட்டத்தை வரவேற்று இருக்கிறார். இதை அமல்படுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. இந்த வாரம் முழுக்க இது விவாதப் பொருளாகி இருக்கிறது.

இந்தியாவின் 120 கோடி மக்களில் 67.5 சதவீதம் மக்களுக்கு அரிசி, கோதுமை என உணவுப் பொருட்களை வழங்க இந்த சட்டம் வகை செய்யும். கிராமத்து மக்களில் 75 சதவீதம் பேரும், நகர மக்களில் 50 சதவீதம் பேரும் இதனால் பயன் பெறுவார்கள். ஒவ்வொரு நபருக்கும் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும். அரிசி கிலோ 3 ரூபாய், கோதுமை கிலோ 2 ரூபாய், இதர தானியங்கள் ஒரு ரூபாய் என வழங்கப்படும். இது தவிர கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும்.

ஒரு ஆண்டுக்கு 4 கோடியே 56 லட்சம் டன் அரிசியும் கோதுமையும் இப்படி ஏழைகளுக்கு மானிய விலையில் தரப்படும். சராசரியாக ஒரு குடும்பத்துக்கு மாதம் 25 கிலோ தானியங்கள் வழங்கப்படும். மாதத்துக்கு வெறும் நூறு ரூபாய் சம்பாதிக்கிறவர்கள்கூட பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பிரச்னையே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. வறுமைக்கோடு என்பது எது என்பதிலோ, யார் யார் ஏழைகள் என்பதிலோ ஒவ்வொரு துறையிடமும் வெவ்வேறு கணக்குகள் இருக்கின்றன. மத்திய அரசிடம் இருக்கும் புள்ளிவிவரங்கள் அரதப்பழசானவை. உதாரணமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே 90 சதவீதம் குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை கிடைக்கிறது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தினால், அங்கு நிறைய பேருக்கு இதைத் தர முடியாமல் போய்விடும். தமிழகத்தில் அரிசி ஒரு ரூபாய்க்குத் தரப்படுகிறது. மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நல்ல திட்டங்களும் ஏற்கனவே இருக்கிறது. உணவுப் பாதுகாப்பு சட்டம் இதையெல்லாம் குழப்பிவிடும். இதனால் தமிழகம் இதை எதிர்க்கப் போவதாக சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியது. சட்டீஸ்கர் மாநிலம் தங்களுக்குத் தனியாக ஒரு உணவுப் பாதுகாப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் போட்டுக் கொண்டது.

இப்படி பல மாநிலங்கள் எதிர்க்கின்றன. ‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு ஏழைகள் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக மத்திய அரசிடம் சரியான தகவல் இல்லை. இதனால் மத்தியத் தொகுப்பிலிருந்து அவர்கள் குறைவாகவே அரிசியும் கோதுமையும் தருவார்கள். பட்டியலில் விடுபட்டுப் போனவர்களுக்கு நாங்கள் தராமல் இருக்க முடியாது. இதனால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்’’ என்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.



இவ்வளவு எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருந்தும், அரசு ஏன் இந்த சட்டத்தில் தீவிரமாக இருக்கிறது? ஆரம்பத்தில் தானியங்களாகத் தந்துவிட்டு, எதிர்காலத்தில் இந்த மானியத்தை அப்படியே பணமாகத் தரும் திட்டத்தில் இருக்கிறது அரசு. மானியத்தை வங்கிக் கணக்கில் போட்டுவிட்டால், குப்புசாமியோ, செல்லாத்தாவோ போய் கடையில் அரிசி வாங்கிக் கொள்ளலாம். இதற்கு ஒரு சப்பைக்கட்டும் வைத்திருக்கிறது அரசு. ‘‘வெறும் அரிசியும் கோதுமையும் மட்டுமே சத்துக் குறைபாட்டைத் தீர்த்துவிடாது. பணமாகக் கொடுத்தால், அவர்கள் துவரம்பருப்பு, புளி என எதையும் வாங்கிக் கொள்ளலாம்’’ என சொல்கிறார்கள்.

‘‘ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கும் பொது விநியோகத் திட்டம் ஊழல் மலிந்ததாக இருக்கிறது. 40 சதவீதம் திருட்டுத்தனமாக வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது’’ என்கிறார் அக்ரிகல்ச்சுரல் காஸ்ட்ஸ் அண்டு பிரைசஸ் கமிஷன் தலைவர் அசோக் குலாடி. ‘‘விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி, பாதுகாத்து, வாகனங்களில் அனுப்பி வைப்பது பெரும் செலவு பிடிக்கும் வேலை. அரசே நிறைய நெல்லும் கோதுமையும் வாங்குவதால், வெளிமார்க்கெட்டில் அவற்றின் விலை அதிகரிக்கிறது. உணவுப் பணவீக்கம் அதிகரிக்க அதுதான் காரணம். ரேஷன் கடைகளை மூடிவிட்டு பணமாக மக்களுக்கு மானியத்தைக் கொடுத்தால், அரசுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்’’ என்கிறார் அவர்.

ரேஷன் கார்டுகளையே அடமானம் வைத்துக் குடிக்கும் குடும்பத் தலைவர்கள் நிறைந்த தேசத்தில், இப்படிப்பட்ட முடிவுகள் நிச்சயமாக ‘உணவுப் பாதுகாப்பை’ தராது!
- அகஸ்டஸ்

இந்தியாவும் உணவும்!
*  உலகின் மிகப்பெரிய உணவு உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும் உலகின் 25 சதவீத பசித்த ஏழைகள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.

*  இந்தியாவில் 48 சதவீதக் குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் ஊட்டச்சத்து குறைபாடால் தவிக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒன்று இந்தியக் குழந்தை.

*  மூன்று வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 47 சதவீதக் குழந்தைகள், இயல்பைவிட எடை குறைவாகவே இருக்கின்றன. 78.9 சதவீதக் குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு இருக்கிறது.

*  இந்தியாவில் நிகழும் குழந்தை மரணங்களில் 50 சதவீதம், சத்துக் குறைபாட்டால்தான் நிகழ்கின்றன.

வங்காளப் பஞ்சமும் ரேஷனும்!
பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1943ம் ஆண்டு வங்காளப் பஞ்சம் நிகழ்ந்தது. அரிசியும் கோதுமையும் தங்கம் போல விலை விற்றது. பேராசை கொண்ட வியாபாரிகள் உணவைப் பதுக்க, பட்டினியால் 15 லட்சம் பேர் இறந்தனர். கடந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான துயரம் இது. ‘உணவு நிர்வாகத்தை அரசு கவனிக்க வேண்டியது அவசியம்’ என பிரிட்டிஷ் இந்திய அரசு உணர்ந்தது. அரசே விவசாயிகளிடமிருந்து நெல்லும் கோதுமையும் வாங்கி மக்களுக்கு விநியோகிக்க முயன்றது. ஆனால் தானியங்களைப் பாதுகாக்க வசதி இல்லாததால், எல்லாம் அழுகிக் கெட்டுப் போயின.

அதன்பிறகு உணவு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் நடந்தன. பஞ்சத்தை விரட்டுவதற்காக வயல்களில் உழைத்த விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை. இடைத்தரகர்களே தானியங்களின் விலையை நிர்ணயித்து, விவசாயிகளை பட்டினியில் தள்ளினார்கள். 1957ம் ஆண்டு அசோக் மேத்தா தலைமையில் உணவு தானிய விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. நெல்லுக்கும் கோதுமைக்கும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தது அதன்பிறகுதான். இந்திய உணவுக் கார்ப்பரேஷன் வந்தது; இந்தியாவெங்கும் குடோன்கள் கட்டப்பட்டன. ரேஷன் கடைகள் வந்தன. அரசே தானியங்களை வாங்கி, ஏழைகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கிறது; ஏழைகளுக்கும் பசி போகிறது. தவறுகள், ஊழல்கள் நிகழ்ந்தாலும் இந்த சிஸ்டம்தான் பல்லாயிரக்கணக்கான பட்டினிச் சாவுகளைத் தடுக்கிறது. இதை மாற்ற நினைக்கிறவர்கள், வங்காளப்பஞ்சத்தை இந்தியாவெங்கும் நிகழ்த்தத் துடிக்கிறார்கள்.