குப்பையில் முடியும் வாழ்க்கை!





‘‘எங்கே பெறந்தேன், இங்கே எப்படி வந்தேன்னு எதுவும் நினைவுல இல்லை. இப்போ இங்கே நிக்குறேன். அப்புறம் எங்கே இருப்பேன்னு சொல்லமுடியாது. இதுக்கு முன்னாடி லாட்ஜ்ல வேலை செஞ்சேன். அதுக்கு முன்னாடி எங்கே வேலை செஞ்சேன்னு நினைவில இல்லே. எல்லாத்தையும் மறந்திருவேன். ஞாபகம் வச்சுக்கிறது ஒரு நோயி. உடம்பையும் மனசையும் பாதிக்கிற நோயி. அதனால எதையும் ஞாபகம் வச்சுக்கிறதில்லை. கிடைக்கிறத திம்பேன். பொறுக்குறதை விப்பேன். தேவைப்பட்டா குடிப்பேன். நினைச்ச நேரத்துல நடப்பேன். கிடைக்கிற இடத்துல படுப்பேன். இந்தியா முழுவதும் என்னோடதுதான்...’’

- படபடவென பேசிவிட்டு நடக்கிறார் ஜான். குப்பைத்தொட்டியைக் காணும் இடங்களில் இயல்பாக நிற்கின்றன கால்கள். கைவிட்டுத் துழாவி காகிதங்களையும், பிளாஸ்டிக் டப்பாக்களையும் எடுத்து சாக்கில் நிரப்புகிறார். உள்ளே கிடக்கும் உணவுப்பொட்டலத்தை ஆர்வமாகப் பிரித்து அள்ளி ருசிக்கிறார். தேவையும் தேடலும் முடிந்ததும் அடுத்த குப்பைத்தொட்டியை நோக்கி நீள்கிறது அவரது பயணம்.

குப்பை பொறுக்குபவர்களின் உலகம் விசித்திரமானது. உடம்பைப் போலவே வாழ்க்கையும் அழுக்காகிவிடும். எல்லா தவறுகளுக்கும் அந்த வாழ்க்கையில் நியாயமிருக்கும். ‘‘எங்கள்ல பல ரகங்கள் உண்டு சாமி. வெளியூர்ல இருந்து பிழைக்க வந்து, சரியா தொழில் அமையாம குப்பை பொறுக்க வர்றவங்க ஒரு ரகம். இவங்களுக்கு குடும்பம், வீடெல்லாம் இருக்கும். பெரிசா கெட்ட பழக்கங்கள் இருக்காது. இன்னொரு ரகம், குப்பை பொறுக்கிகளாவே பெறக்கிறவங்க. குப்பை பொறுக்கிற பொம்பளைங்க சில நேரம் தப்பாப் போயி புள்ளை பெத்துக்குவாங்க. அந்தப் புள்ளைகளும் அவங்க வழியிலயே வளருவாங்க. இதுதவிர குடும்பத்துல இருந்து விரட்டப்பட்டவங்க, உறவுகளோட துரோகத்தால பாதிக்கப்பட்டவங்க, மன பாதிப்புக்கு உள்ளானவங்க, போதைக்கு அடிமையானவங்களும் இந்த தொழிலுக்கு வர்றாங்க. எத்தனை பேர் வந்தாலும் இல்லைன்னு சொல்லாம வாழ்க்கை குடுக்கிற தொழில் இது. முன்னாடி பள்ளிக்கரணை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளுக்குப் போய் தொழில் செய்யிறதுண்டு. இப்போ அங்கே யாரையும் அனுமதிக்கிறதில்லை. தெருவோர குப்பைத்தொட்டி, ரயில்வே தண்டவாளங்கள நம்பித்தான் தொழில். முறையா செஞ்சா ஒரு நாளைக்கு 500 ரூபா எடுக்கலாம்...’’ - பள்ளிக்கரணை சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைக்குவியலில் இரும்புகளை சேகரித்தபடியே பேசுகிறார் அர்ஜுனன். வயது 60.

‘‘பாழாப்போன குடிப்பழக்கத்தால, என் கதி இப்படி ஆச்சி. சாப்பாடு இருக்கோ இல்லையோ, நமக்கு ராவானா ஒரு குவாட்டரு வேணும். பையன்கிட்ட கேட்டா திட்டி விரட்டிருவான். அதான் இந்தத் தொழில்ல இறங்கிட்டேன். காலையில 7 மணிக்கு கிளம்பி இப்பிடியே ரோட்டைப் பாத்துக்கிட்டு வருவேன். எங்காவது எதுனா புதுக்குப்பை தென்பட்டா அதுக்குள்ள புகுந்திருவேன். அட்டை, பிளாஸ்டிக், இரும்பு சாமாங்க கிடைக்கும். 1 மணி வரைக்கும் பொறுக்கிட்டு, கிடைச்சதை காயிலான் கடை மாரிகிட்ட குடுப்பேன். இரும்புக்கு 10 ரூவா, பிளாஸ்டிக்குக்கு 16 ரூவா கிடைக்கும். அப்படியே காசை வாங்கிக்கிட்டு டாஸ்மாக் போயி ஒரு குவாட்டரு, மிச்சமிருக்கிற காசுக்கு சைடு டிஷ் வாங்கி இடுப்புல சொருகிக்கிட்டு வீட்டாண்ட போயிருவேன். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிச்சா, பதினோரு மணி வரைக்கும் உள்ளே இறங்கும். அப்பிடியே உறங்கிருவேன். இந்தா இன்னிக்கு இங்க ஸ்க்ரூ, டப்பால்லாம் தேறுச்சு. இன்னிக்கு குவாட்டருக்கு ஓகே. நாளைக்குப் பொழப்பு எந்தக் குப்பையிலயோ...’’ - கண்களை இடுக்கியபடி எதிர்பார்ப்போடு நகர்கிறார் அர்ஜுனன்.

வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள குப்பைத்தொட்டியை துழாவிக்கொண்டிருக்கிற லட்சுமிக்கு 50 வயதிருக்கும். 4 பிள்ளைகளோடு நிர்க்கதியாய் விட்டுவிட்டு 7 வருடங்களுக்கு முன்னால் கணவர் போய்ச் சேர்ந்து விட்டார். குப்பைத்தொட்டிதான் எல்லோருக்கும் சோறு போடுகிறது.



‘‘வீட்டுக்காரரு இருக்கும்போது ரெண்டு பேரும் சேந்து தொழிலுக்குப் போவோம். காலையில 6 மணிக்குக் கிளம்புனா, மத்தியானம் 2 மணிக்குள்ள ரெண்டு சாக்கும் நிறைஞ்சிடும். காயிலான் கடைக்குப் போயி இரும்பு, தகரம், பொம்மை, கேன், அட்டை, வெள்ளைப் பேப்பரை தனியாப் பிரிப்போம். அறுநூறு ரூபா கிடைக்கும். மனுஷனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அப்படியே எல்லாத்தையும் எங்கையில குடுத்துருவார். திடீர்னு இடுப்பு வலிக்குதுன்னார். டாக்டர்கிட்ட காட்டியும் புண்ணியம் இல்ல. மூணு மாசத்துல போய் சேந்துட்டாரு. அதுக்குப் பெறகு ரெட்டைப் பை, ஒத்தைப்பை ஆயிடுச்சு.

முன்ன மாதிரி அலைய முடியல. உடம்பு ஒத்துழைக்கல. பேக்டரிங்க இருக்கிற தெருவில உள்ள குப்பைத்தொட்டிக்குப் பக்கத்துல போய் உக்காந்திருவேன். இரும்பு, தகடுங்க கிடைக்கும். சனி, ஞாயிறுகள்ல பேக்டரிகளை சுத்தம் பண்ணுவாங்க. அன்னிக்குக் கொஞ்சம் கூடுதலா கிடைக்கும். கிடைக்கிறதை வித்துப்புட்டு நேரத்தோட வீட்டுக்குப் போயிடுவேன். புள்ளைகள்லாம் பள்ளிக்கூடம் போவுதுக. தப்பித்தவறிக் கூட புள்ளைக இந்த நாத்தம் புடிச்ச தொழிலுக்கு வந்துரப்புடாது...’’ - கவலை தொனிக்கப் பேசுகிறார் லட்சுமி.

ராஜா அண்ணாமலைபுரம் பிளாட்பாரத்தில் அமர்ந்து, குப்பையில் கிடந்த இனிப்பை எடுத்து ருசித்துக் கொண்டிருக்கிற அமீதுக்கு 62 வயது. வயதுக்கு மீறிய முதுமை உடம்பில் தள்ளாடுகிறது. குடும்பம் இருக்கிறது; ஆனாலும் ஆழ்வார்பேட்டையில் ஒரு பிளாட்பாரம்தான் அமீதுக்கு இப்போது வீடு.

‘‘16 வருஷமாச்சு இந்தத் தொழிலுக்கு வந்து. முன்னாடி ரிக்ஷா ஓட்டிக்கினுருந்தேன். கெட்ட சகவாசம். தண்ணி, கஞ்சாவுக்கு அடிமையாயிட்டேன். எவ்வளவு சம்பாரிச்சாலும் வீட்டுக்கு வெறுங்கையோடதான் போவேன். ஒரு கட்டத்துல ஒடம்பு வலு இழந்து போச்சு. கடன் அதிகமாகி ரிக்ஷாவை வித்தேன். எவ்வளவு கொடுமையத்தான் பொறுப்பாங்க. ஒருநாள் வீட்ல எல்லாரும் கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. ரெண்டு பசங்க இருக்கானுங்க. அவனுங்களும் கிட்டக்க சேக்கல. இதுல எறங்கிட்டேன். இது உங்களுக்குத்தான் குப்பை. எங்களுக்கு பசியை ஆத்துற தெய்வம். எத்தனை பேரு வந்தாலும் பசிக்கு சோறு கிடைக்கும்... செலவுக்குக் காசு கிடைக்கும்... இந்த இனிப்பு, யாரோ ஒரு பணக்கார வீட்டுல கெட்டுப்போச்சுன்னு வீசுனது. என்ன ருசியா இருக்கு தெரியுமா?’’ - கண்களை இடுக்கிக்கொண்டு சிரிக்கிறார் அமீது.

மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திற்கு எதிரே மரநிழலில் வண்டியை நிறுத்திவிட்டு ஆசுவாசப்படுகிற விஸ்வநாதனுக்கு 18 வயது. வண்டிக்குள் அமர்ந்திருக்கும் பார்த்தசாரதிக்கு 60. வண்டி நிறைய பிளாஸ்டிக் கேன்களும், காகிதங்களும் நிறைந்திருக்கின்றன.

‘‘சிவராஜபுரம்தான் எங்க ஊரு. முன்னாடி சித்தாளு வேலைக்குப் போவேன். பொண்டாட்டி போய்ச் சேந்து 6 வருஷமாச்சு. அதுக்கப்புறம் எதுலயும் மனசு ஒட்டலே. ரெண்டு புள்ளைக ஆயா வீட்டுக்குப் போயிருச்சுங்க. இவன் மட்டும் என்கூட கிடக்குறான். திரும்பவும் கல்லு, மண்ணு சுமக்குற அளவுக்கு மனசுலயும் உடம்புலயும் தெம்பில்லை. அதான் இதுல எறங்கிட்டேன். முதல்ல நடந்துபோய்தான் தொழில் பண்ணுனேன். இவன் தலையெடுத்தபிறகு, இந்த வண்டிய வாடகைக்குப் புடிச்சுக்கிட்டேன். ஒரு நாளைக்கு 30 ரூவா வாடகை. மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தைவெளின்னு ஒரு சுத்து சுத்துவோம். சாயங்காலம் 5 மணிக்கு காயலான் கடைக்குப் போயி பிரிச்சுப் போடுவோம். அறுநூறு ரூபாய் கிடைக்கும். நேரா வண்டிய இங்கே கொண்டாந்து போட்டுக்கிட்டு உக்காந்திருவோம். ராத்திரியானா கிடைக்கிற இடத்துல படுத்துக்குவோம்...’’ - கறைபடிந்த பற்கள் விரிய சிரிக்கிறார் பார்த்தசாரதி. தந்தைக்கு இணையாக மகனிடம் இருந்தும் பரவுகிறது மதுவாடை. 

சென்னையில் மட்டும் 2000த்துக்கும் மேற்பட்ட குப்பை பொறுக்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் மனப்பிறழ்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் போதைக்கு அடிமை. வரம்பற்ற வாழ்க்கை. அறிவுரை சொல்லவோ, அரவணைக்கவோ ஆளில்லாத காரணத்தால் மனசு மரத்துப் போயிருக்கிறது. குப்பையில் தொடங்கி, குப்பையிலேயே முடிந்துபோய் விடுகிறது இவர்களின் வாழ்க்கை.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்