பிஸி : எஸ்.ராமன்





‘‘மாப்பிள்ளைக்கு உன்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சும்மா. எம்.என்.சியில் மார்க்கெட்டிங் வேலை. அடிக்கடி வெளியூர் டூர், அலவன்ஸ் அது, இதுன்னு கை நிறைய சம்பாத்தியம்... நீ என்னம்மா சொல்றே?’’ - மகள் செல்வியிடம் கேட்டாள் செல்லம்மா.

‘‘அவர்கிட்ட என் செல் நம்பரைக் கொடுங்கம்மா... நாலைஞ்சு தடவை பேசிட்டு முடிவு சொல்றேன்’’ என்று புதிர் போட்டாள் செல்வி. எதுவும் கேட்காமல், மகளின் நம்பரை மாப்பிள்ளையிடம் கொடுத்தாள் செல்லம்மா.
ஒரு வாரம் ஓடியது.

‘‘இப்பவாவது உன் முடிவைச் சொல்லும்மா’’ என்றாள் செல்லம்மா.

‘‘அடிக்கடி வெளியூர் டூர் போற வேலை... அதனால நானும் அவரும் நேர்ல பேசிக்கறதை விட செல்போன்லதான் அதிகம் பேசிக்க வேண்டி வரும். அதனால்தான் போன் நம்பரைக் கொடுக்கச் சொன்னேன். வேணும்னே, அவர் கூப்பிடும் நேரமாப் பார்த்து என் போனை நான் பிஸியா வச்சுக்கிட்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘ஏன் இவ்வளவு நேரம் பிஸி? யார்கிட்ட பேசிட்டிருந்தே?’ன்னு ஒரே கேள்வி. இவ்வளவு சந்தேக குணம் உள்ளவர், நாளைக்கு வெளியூர் போயிட்டு வரும்போதெல்லாம் சந்தேகமா பார்ப்பார். ஒருத்தருக்கொருத்தர் நம்பிக்கை இல்லாத வாழ்க்கை, சிம்கார்டு இல்லாத செல்போன் மாதிரிம்மா. எதுக்கும் உதவாது! இந்த சம்பந்தம் வேண்டாம்மா’’ என்றாள் செல்வி.
மகளின் புத்திசாலித்தனத்தை நினைத்து பெருமைப்பட்டாள் செல்லம்மா.