கவிதைக்காரர்கள் வீதி





சினேகம்
ஒரு சரிவு தந்த
சினேகத்தைத் துண்டித்து
விடைபெற
வெகுநேரம் எடுத்துக்கொண்டது     
சற்றுமுன் பழக்கமான
இலையை விட்டுப் பிரியும்
கடைசி மழைத்துளி!


நமஸ்கரித்தல்
கும்பிட்டுத் திரும்புகையில்
கடவுளுக்கு முன்
அஷ்டாங்க நமஸ்காரம் செய்யச் சொல்லி
ஒரு தடவைதான்
குழந்தைக்குச் சொன்னோம்
ஒன்பது தடவை
குழந்தையை நமஸ்கரித்து எழுந்தார்
கடவுள்

விடியல்

பச்சைப்புல் அடை காக்கும்
பனிமுட்டை உடைந்ததும்
பிறந்தது பகல்

அஞ்சலி
அடையாளம் தெரியாதவர்
ஆதரவற்ற பெரியவர்
யார் இறந்தாலும்
முதலில் கூடி மொய்க்கின்றன
மௌன அஞ்சலிக்கு வரும் ஈக்கள்
போதை
மதுப்புட்டியில்
வேர் விட்ட கொடி
வளைந்து நெளிந்து வளர்கிறது
குடிபோதை குரோட்டன்ஸ்

இருள் மழை
எரியும் விளக்குடன் விளையாடி
ஏமாறும் ஈசல்களின்
இறகுகள் உதிர்வதில்லை
இருள் மழையில்

கிரகம்
எழுதி வைத்த கிரகத்தை
அதன் ஓடுபாதையில்
சுழற்றி விட
உதவும் கிரகம் எதுவென
உட்கார்ந்திருக்கும் கிரகங்களில்
ஒன்றைத் தேடிச் சுழல்கிறாள்
வெள்ளிக்கிழமைதோறும்
பிள்ளையார் கோயிலில் அக்கா!
கொ.மா.கோ.இளங்கோ