கர்ணனின் கவசம் 14





திகைப்பு, ஆச்சர்யம், அதிர்ச்சி கலந்த உணர்வில் ஒன்பது பேரும் நின்றார்கள்.  ஆயியிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே புன்னகை. சரஸ்வதி நதியை, தாங்கள் கண்டுபிடிப்பதாகச் சொன்னதும் கண்கள் கசிய எந்த வகையான நெகிழ்ச்சிக்கு ஆளானாளோ, அதே உணர்வுடன்தான் அப்போதும் நின்று  கொண்டிருந்தாள்.
துரிதமாக செயல்பட்டவன் குள்ள மனிதன்தான். விநாடிக்கும் குறைவான நேரத்தில் குப்தேஸ்வரர் குகையின் மறுமுனைக்கு பாய்ந்தவன், துப்பாக்கியால் ஆயியை சுட்டவனை வளைத்துப் பிடித்து இழுத்து வந்தான்.

அந்த மனிதன் ஐந்தரை அடி உயரமிருந்தான். ஒல்லியான, அதே நேரம் இறுக்கமான உடல் வாகு. நரம்புகள் துருத்திக் கொண்டிருந்தன. கண்களில் குழி விழுந்திருந்தது. அவன் திமிறவில்லை. தப்பிக்க முயற்சிக்கவும் இல்லை. சர்வ வல்லமை படைத்த ஒன்பது பேருக்கு மத்தியில், தான் தனித்து நிற்பது குறித்து அவன் கவலைப்படவும் இல்லை. ஆயியின் பார்வை தன்னை அலசி ஆராய்வதையும் அவன் கணக்கில் கொள்ளவில்லை. அவன் கண்கள் ஆயியின் வலது கையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
குறி பார்த்து சுடுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்றுதான் அதுநாள் வரையில் நம்பி வந்தான். அந்த நம்பிக்கையுடன்தான் ஆயியின் நெற்றியை நோக்கி துப்பாக்கியின் முனையைத் திருப்பினான். சரியான நேரத்தில் சுடவும் செய்தான். குண்டும் பாய்ந்தது. ஆனால், எப்படி இதை ஆயி உணர்ந்தாள்... தன்னை நோக்கி வந்த குண்டை எப்படி தன் ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் பிடித்தாள் என்பதைத்தான் அவனால் கற்பனை செய்ய முடியவில்லை.

‘‘பரமேஸ்வர பெருந்தச்சன் நல்லா இருக்காரா..?’’ - அமைதியாகக் கேட்ட ஆயிக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. அவனை இறுக்கிப் பிடித்திருந்த குள்ள மனிதன், தன் பிடியைத் தளர்த்தினான். உயரமான மனிதன் அவன் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கினான்.
நிராயுதபாணியாக தான் நின்று கொண்டிருப்பதை அந்த மனிதன் உணர்ந்தான். எந்த நிமிடமும் தன் உயிர் போகலாம். அது நொடியிலும் நிகழலாம்; அல்லது சித்திரவதை செய்யப்பட்டு அணு அணுவாகவும் பிரியலாம். எப்படி இருந்தாலும் மரணம் நிச்சயம். இறப்புக்கு அவன் அஞ்சவில்லை. ஆனால், நம்பி ஒப்படைக்கப்பட்ட வேலையை தன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்ற துக்கம்தான் அவன் தொண்டையை அடைத்தது.


மாறாத புன்னகையுடன் தன்னை ஆராய்ந்து கொண்டிருந்த ஆயியின் கண்களை ஏறிட்டான். ஆயியின் பார்வை தனது கழுத்தில் பதிந்திருப்பதைக் கண்டான். குறிப்பாக கறுப்புக் கயிற்றில் கட்டப்பட்டிருந்த தாயத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தண்டனை என்னவென்று அவனுக்குப் புரிந்தது. தாமதிக்கவில்லை. தாயத்தை அப்படியே கடித்தான். நுரை தள்ளி தரையில் விழுந்தான். இறந்தான்.
அதன் பிறகு அந்த சடலத்தை அங்கிருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை.
‘‘போகலாமா..?’’
‘‘ஒரு நிமிஷம்...’’ - புறப்பட்ட ஆயியை உயரமான மனிதன் தடுத்து நிறுத்தினான். ‘என்ன...’ என்பது போல் ஆயி ஏறிட்டாள்.
‘‘முக்காலமும் உணர்ந்த உங்களுக்கு கண்ணுக்கு தெரியாம சரஸ்வதி நதி எங்க ஓடிட்டு இருக்குனு நல்லாவே தெரியும். அப்படியிருக்கிறப்ப அதை நாங்கதான் கண்டுபிடிக்கணும்னு ஏன் விரும்பறீங்க?’’
‘‘நன்றிக்கடன்...’’
‘‘புரியலை...’’ குள்ள மனிதன் இடைமறித்தான்.

‘‘அசோக சக்கரவர்த்தியால உருவாக்கப்பட்ட ரகசியக் குழுவோட வம்சத்தைச் சேர்ந்தவங்க நீங்க. உங்க மூதாதையரோட உழைப்பு, ஆயுதக் கண்டு
பிடிப்பு... எதுவுமே உலகுக்கு தெரியாது. தலைமுறை தலை
முறையா நீங்களும் தலைமறைவாவே வாழ்ந்துட்டு இருக்கீங்க. இப்ப நீங்க வெளிச்சத்துக்கு வர வேண்டிய நேரம் வந்தாச்சு. அது சரஸ்வதி நதி மூலமா நிகழணும்னு விரும்பறேன்...’’
‘‘அதாவது உங்க உதவி இல்லாம நாங்களே அதைக் கண்டுபிடிச்சு எங்க திறமையை நிரூபிக்கணும்னு நினைக்கறீங்க..?’’ சிரித்தபடி குள்ள மனிதன் கேட்டான்.
‘‘ஆமா...’’
‘‘இதுக்கும் பொக்கிஷத்துக்கும் என்ன சம்பந்தம்?’’ - உயரமான மனிதன் உரையாடலில் புகுந்தான். ‘‘புதையலுக்கான வரைபடம் கோயில் சிற்பங்களா செதுக்கப்பட்டிருக்கு. காலம் காலமா பெருந்தச்சர்கள் குழு உங்க தலைமைல அதைப் பாதுகாத்துட்டு வருது. அப்படியிருக்கிறப்ப சரஸ்வதி நதில புதைக்கப்பட்ட ‘கர்ணனோட கவச’த்தை எதுக்காக நாங்க எடுக்கணும்?’’ கேட்டவனின் கைகளை குள்ள மனிதன் பிடித்தான்.

‘‘இன்னுமா உனக்கு புரியலை? வெளிநாட்டுக்காரங்க தேடி வந்திருக்கிற பொக்கிஷம் ‘கர்ணனின் கவசம்’ இல்ல. ஆனா, புதையலுக்கும் ‘கர்ணனின் கவச’த்துக்கும் தொடர்பிருக்கு. அது என்ன இணைப்புன்னு இவங்களா சொல்ல மாட்டாங்க. நாமளேதான் தெரிஞ்சுக்கணும்...’’ - சொல்லி முடித்த குள்ள மனிதனின் அருகில் வந்த ஆயி, அவன் தலையைக் கோதி ஆசீர்வதித்தாள்.
புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக ஒன்பது பேரும் ஆயியை வணங்கி விடைபெற்றார்கள்.
அவர்கள் சென்றதும் ஆயி, தன் வலது கால் கட்டைவிரலால் தரையை அழுத்தினாள். பாறை பிளந்து வழிவிட்டது. நுரை கக்கி இறந்த துப்பாக்கி மனிதனின் சடலத்தை அந்தப் பள்ளத்தில் தள்ளினாள். கீழே ‘சலப் சலப்’ என சுழித்து ஓடிய நீர், அந்த சடலத்தை தன்னுள் மறைத்துக் கொண்டது.   
பூமிக்கடியில் ஓடிய அந்த நீர், ஒரு நதியின் நீர். அந்த நதி, சரஸ்வதி நதி.
‘‘நிறுத்து... நிறுத்து...’’ - பதற்றத்துடன் டிரைவருக்கு கட்டளையிட்ட ருத்ரன், காரை விட்டு இறங்கினான். ‘‘நான் அப்புறமா வரேன்...’’ என விஜயலட்சுமியிடம் சொல்லிவிட்டு ஜாடையில் தெருவோரம் இருந்த இடிந்த கோயிலைக் காட்டினான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அவள் தலையசைத்தாள்.
கார் புறப்பட்டுச் சென்றதும் ருத்ரன் சாலையைக் கடந்தான். அது, தஞ்சாவூர் - விக்கிரவாண்டிக்கு இடையில் இருந்த மணப்பாடி கிராமம். இங்குதான் ஆயிரம் வருட பழமையான கோயில் இருக்கிறது. ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அந்தக் கோயிலை சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப் போவதாகவும், அதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  

அப்படிப்பட்ட பழமையான கோயிலைத்தான் ஓர் இளைஞன் தயங்கித் தயங்கி பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த கல்வெட்டுக்களை திருட்டுத்தனமாகப் படி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கைகளில் ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ நூல் இருந்தது. கூடவே ஒரு டைரி.
எதுவும் தெரியாதது போல் அந்த இளைஞனின் அருகில் சென்ற ருத்ரன், அவன் தோளைத் தட்டினான்.
திடுக்கிட்டுத் திரும்பிய அந்த இளைஞன் வேறு யாருமல்ல. ஃபாஸ்ட்டுக்கு துணையாக ‘பசுமை உலக மன்ற’த்தால் நியமிக்கப்பட்ட அதே ஆனந்த்தான். அவன் தோளில் கைபோட்ட
படியே நிதானமாக அந்தக் கேள்வியை ருத்ரன் கேட்டான்.

‘‘ஃபாஸ்ட் எங்க..?’’
‘‘கிளம்புங்க...’’ - எழுந்து நின்ற ரவிதாசன், கோபத்தை கட்டுப்படுத்தியபடி வார்த்தைகளை உதிர்த்தான். ‘‘உங்களை ஒருமையில அழைக்க எனக்கு விருப்பமில்லை. ஏன்னா, நீங்க யாருனு எனக்கு தெரிஞ்சுடுச்சு. மரியாதையாவே சொல்றேன்... போயிட்டு வாங்க...’’
‘‘ரவிதாசன், ஆத்திரப்பட இது நேரமில்ல...’’ - சூ யென் அமைதியாகச் சொன்னான்.
‘‘தெரியும். அதனாலதான் இந்த இடத்தை விட்டு உங்களை போகச் சொல்றேன்...’’
‘‘சங்கரை காப்பாத்தணும்...’’
‘‘அவன் என் பையன். நான் பார்த்துக்கறேன். ஸோம்பியா அவன் மாறியிருக்கான். அவ்வளவுதான? பரவால்ல. அவனை எப்படி சராசரியா மாத்தணும்னு எனக்கு தெரியும்...’’ - இடைவிடாமல் கடப்பாரையால் மண்டபத்தை இடித்துக் கொண்டிருந்த சங்கரைப் பார்த்தான். ‘‘இதுவும் ஒரு வகைல நல்லதுக்குத்தான். சோம்பன் சாம்பனை மறந்துட்டேன். அதை ஸோம்பியா மாறி சங்கர் நினைவுபடுத்தியிருக்கான். ஆதித்த கரிகாலன் கொலைல சமபங்கு வகிச்சது சோம்பன் சாம்பனாச்சே...’’
கண்களை மூடி சற்று நேரம் அப்படியே நின்றான். மீண்டும் அவன் இமைகளைப் பிரித்தபோது, கலங்கியிருந்தது.
‘‘ஒற்றை ஆடையோட நாடு கடத்தப்படறது என்னன்னு உங்களுக்குத் தெரியாது. நெருங்கின சொந்தத்துலேந்து தூரத்து உறவினர் வரைக்கும் யாரையும் விடலை. தேடித் தேடி எங்க எல்லாரையும் இந்த சோழ நாட்டை விட்டு ‘நாடு கடத்தல்’ங்கிற பேர்ல வெளியேத்தினாங்க. வயசானவங்கள்லேந்து, பிறந்த குழந்தை வரைக்கும் இதுல அடக்கம். நாட்டு மக்கள் எல்லாம் எங்க மேல எச்சில் துப்பி... மண் வாரி தூத்தி...’’ - உதடுகள் நடுங்க மேற்கொண்டு பேசாமல் அமைதி காத்த ரவிதாசன், மெல்ல மெல்ல தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி சூ யென்னை உற்றுப் பார்த்தபோது, அவன் கண்களில் அனல் தகித்தது.

‘‘ஆயிரம் வருஷங்களா அடை காத்துட்டு வர்ற வெறி, நீங்க யாருனு தெரிஞ்சதும் மறைஞ்சிடுமா என்ன? விட மாட்டேன்... பழி வாங்கியே தீருவேன். பல்லாயிரம் வருஷங்களா பாதுகாத்துட்டு வர்ற பொக்கிஷத்தை வெளிநாட்டுக்காரங்களுக்கு கொடுத்தே தீருவேன். என் மூதாதையர்கள் கபாடபுரம் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவங்க... தெரியும்ல..?’’
‘‘ரவிதாசன்...’’
‘‘ஆமா, ரவிதாசன்தான். சூரியனோட தாசனேதான்...’’ சொல்லிவிட்டு சங்கரை நோக்கி நடந்த ரவிதாசன், சட்டென்று நின்றான்.
‘‘உண்மையான சூ யென் எங்க இருக்கான்னு கேட்க மாட்டேன். ஏன்னா, எங்க இருந்தாலும் என்னைத் தேடி அவன் வருவான்..’’ என்ற படி நின்றுகொண்டிருந்த ‘சூ யென்’னை நோக்கி வந்தான்.
‘‘ஃபாஸ்ட் இந்நேரம் தப்பிச்சிருப்பான்னு தெரியும். அதுதான் உங்க நோக்கமும் கூட. அவனை வச்சு உங்க திருவிளையாடலை ஆரம்பிச்சுட்டீங்க இல்லையா..?’’ - கேட்டவன் பதிலை எதிர்பார்க்காமல் தன் வலது கையை முன்னால் நீட்டினான்.
‘‘குருக்ஷேத்திர போர்ல ஆயுதம் எடுக்க மாட்டேன்னு நீங்க செஞ்சு கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்த விரும்பறேன். ஏன்னா, அதே குருக்ஷேத்திர யுத்தம்தான் இப்பவும் நடக்கப் போவது. இந்தப் போர்லயும் நீங்க ஆயுதம் எடுக்கக் கூடாது. கடல்ல எப்படி கோரைப்புல்லால மறைஞ்சீங்களோ அப்படியே இப்பவும் மறைஞ்சுடுங்க... இது வேண்டுகோள் இல்ல... உங்க பக்தனோட கட்டளை...’’ என்றபடி ‘சூ யென்’னின் காலைத் தொட்டு வணங்கினான்.

‘‘போயிட்டு வா கிருஷ்ணா... மறக்காம நான் சாகும்போது விஸ்வரூப தரிசனம் கொடு...’’
‘‘உறுதியா சொல்ல முடியும். ஆயி இந்நேரம் செத்திருப்பா. இருந்த தடையை நீக்கியாச்சு. தவிர, பொக்கிஷத்துக்கு வழிகாட்டற வரைபடத்தோட நுனியையும் சேதாரமில்லாம எடுத்துட்டேன். ஆமா... நல்லூர் சிவன் கோயில் குளத்துல இருந்த மகாபாரதக் குந்தியோட சிலைதான்... ஸோ, புதையல் நம்ம கைக்கு வந்தா மாதிரி தான். நிம்மதியா இருங்க...’’ என்று பரமேஸ்வர பெருந்தச்சன் சாட்டிலைட் ஃபோனில் சொல்லி முடிக்கவும், டுடுமா அருவியிலிருந்து ஒரு பொருள் விழவும் சரியாக இருந்தது.
அந்தப் பொருள் உச்சியில் இருந்து அருவியின் போக்கில் கீழே இருந்த பாறை மடிப்பில் விழுந்தது. பின் நீரின் வேகத்தில் அப்படியே மேலெழுந்து பரமேஸ்வர பெருந்தச்சனுக்கு அருகில் விழுந்தது.
எதிர்பாராத இந்த செயலால் ஒரு நொடி நிலைகுலைந்தார். அடுத்து நடந்த நிகழ்ச்சியோ அவரது நம்பிக்கையையே தகர்த்துவிட்டது. காரணம், அந்தப் பொருள் குந்தியின் சிலை மீது விழுந்ததுதான். இதனால் பிடிமானம் தளர்ந்து அந்தச் சிலை பாறையில் மோதி உடைந்தது.

சிதறிய சிலை யைக் குலைத்தது எது என்று பார்த்தார். கோணலாக விழுந்திருந்தது பொருளல்ல. உடல். ஆயியைக் கொல்ல அனுப்பிய மனிதனின் சடலம்.
அருவியின் குளிருக்கு நடுங்காத பரமேஸ்வர பெருந்தச்சனின் உடல், இப்போது அதிர ஆரம்பித்தது.
சிரமப்பட்டு இமைகளைத் திறந்த ஃபாஸ்ட்டுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. எங்கிருக்கிறோம்... எந்த நிலையில் இருக்கிறோம்... என்றே தெரியவில்லை. கை, கால்களை அசைக்க முடிந்தது. ஆனால், சம்மட்டியால் யாரோ அடிப்பது போல் தலை வலித்தது. எழுந்து கொள்ள முயற்சித்தான். முடியவில்லை. படுத்த நிலையிலும் உடல் தள்ளாடியது. பிடிமானத்துக்காக கையைத் துழாவினான். யாரோ அந்தக் கையைப் பிடித்தார்கள்.
கனத்த தலையை மெல்ல திருப்பி யாரென்று பார்த்தான்.

சூ யென்!
‘‘மரக்கலத்துல இருக்கோம். ஆனா, ரெண்டு பேருமே ஆபத்துல சிக்கியிருக்கோம். என்னனு நீயே பாரு...’’ என்றபடி ஃபாஸ்ட்டின் தலையைக் கைத்தாங்கலாகப் பிடித்துத் தூக்கினான். தெரிந்த காட்சியைப் பார்த்து ஃபாஸ்ட் அதிர்ந்தான். அங்கே கடற்போர் நடந்து கொண்டிருந்தது.
‘‘நாம கடற்கொள்ளையர்கள்கிட்ட சிக்கியிருக்கோம்...’’
‘‘இது... இது... எந்த இடம்..?’’
‘‘பகவான் ஸ்ரீகிருஷ்ணரோட சாம்ராஜ்ஜியம். துவாரகா...’’
(தொடரும்)