காதல் மணி அடித்ததும் கல்யாணம்!






அண்ணா யுனிவர்சிடி கவுன்சிலிங் போக காத்திருக்கும் மாணவி போல, இப்போதும் இளமையில் மிளிர்கிறார் த்ரிஷா. ஜெயம் ரவியோடு ‘பூலோகம்’, ஜீவாவோடு ‘என்றென்றும் புன்னகை’, எம்.எஸ்.ராஜு டைரக்ஷனில் ‘ரம்’, ‘ப்ரியம்’ பாண்டியன் இயக்கத்தில் ஒரு படம் என்று நிற்க நேரமில்லாமல் ஷூட்டிங். சுவிட்சர்லாந்து போய் வந்தவரை கத்திரி வெயில் தணிந்த ஒரு காலை வேளையில் சந்தித்தோம்...

‘‘ரொம்ப பிஸியாகிட்டீங்க போல?’’
‘‘உண்மைதான். கால்ஷீட் மெயின்டெயின் பண்றதுக்குள்ளேயே போதும் போதும்னு ஆகிடுது. இதுல ‘என்றென்றும் புன்னகை’ கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு. ஜீவாவோட முதல் முறையா நடிக்கிறேன். ஜாலியும் வித்தியாசமும் கலந்த ஃபீல்குட் படமா இருக்கும். இந்தப் படத்துக்காகத்தான் சுவிட்சர்லாந்து ட்ரிப்.

‘ரம்’ படத்தில் என்னைத் தவிர நிகிஷா படேல், சார்மியும் இருக்காங்க. படத்தில ஆக்ஷனும் இருக்கு. ‘ப்ரியம்’ பாண்டியன் இயக்கும் படத்தில் நான், பூனம் பஜ்வா, ஓவியா மூணு பேரும் ஃபிரண்ட்ஸா வர்றோம். காலேஜ் முடிச்சிட்டு கோவா போற மாதிரியான ஒரு கதை. இந்த ரெண்டு படமுமே, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகுது. ‘என்றென்றும் புன்னகை’கூட தெலுங்கில் டப் ஆகும்னு நினைக்கிறேன். ஆக, தெலுங்கிலும் என்னோட பட கணக்கு ஏறிட்டுதான் இருக்கு.’’



‘‘பெரிய ஹீரோக்களோட ஜோடின்னு போயிட்டிருந்தீங்க... இப்ப மூணு ஹீரோயின்கள் கதையில் நடிக்கறீங்க?’’
‘‘நான் ஹீரோயினாகி 11 வருஷமாச்சு. பெரிய ஹீரோக்களோட நிறைய படங்கள் நடிச்சிட்டேன். ஒரே மாதிரி பண்ணிட்டே இருந்தா எனக்கும் போரடிக்கத்தானே செய்யும்? விஜய், அஜித், விக்ரம், சூர்யான்னு ஒவ்வொருத்தருடனும் மூணு, நாலு படங்கள் சேர்ந்து நடிச்சாச்சு. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அபியும் நானும்’ மாதிரி, எனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிச்சாச்சு. ஜோடி மாறிக்கிட்டே இருந்தாதான் ஆடியன்ஸும் ரசிப்பாங்க. புதுசா வர்ற ஹீரோயின்கள் ரெண்டு வருஷம்கூட சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியலைன்னு சொல்றாங்க. ஆனா, இன்னும் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருப்பதற்கு காரணம், வெரைட்டியான கதைகளைத் தேர்வு செஞ்சு நடிக்கிறதுதான். கூடவே அதிர்ஷ்டமும் அமைஞ்சிருக்கு.’’

‘‘அப்போ நீங்க சொன்ன ஹீரோக்களோட இனி நடிக்க மாட்டிங்களா?’’
‘‘இந்த வம்புதானே வேணாங்கிறது... நான் அப்படிச் சொன்னேனா? கதை அமைஞ்சா, நிச்சயமா இன்னும் நாலு படம் கூட அவங்களோட சேர்ந்து நடிப்பேன்...’’
‘‘பங்கி ஜம்ப், ஸ்கூபா டைவிங், பாரா கிளைடிங், ஸ்கை டைவிங்னு விபரீத விளையாட்டுகளில் இறங்கிட்டீங்களே..?’’
‘‘சின்ன வயசிலிருந்தே அட்வென்சர் ஸ்போர்ட்ஸ்ல எனக்கு ஆர்வம் அதிகம். வாழ்க்கையில் ஒரு முறைதான் பிறக்கிறோம். எல்லாத்தையும் அனுபவிச்சிப் பார்த்திடணும். சமீபத்தில் மாலத்தீவு போயிருந்தேன். அங்கே ஸ்கூபா டைவிங் கத்துக்கிட்டு, சான்றிதழ் வாங்கிட்டு வந்தேன். இப்ப சுவிட்சர்லாந்துல பாரா கிளைடிங் போவதா இருந்தது. க்ளைமேட் சரியா இல்லாததால் போக முடியலை. அம்மா இதுக்கெல்லாம் பயப்படுவாங்க. கண்டிச்சுப் பார்த்தாங்க. நான் கேட்க மாட்டேன்னு தெரிஞ்சதும் கண்டுக்காம விட்டுட்டாங்க.



இந்த துணிச்சல்தான் என்னைப் பற்றி மீடியா எவ்வளவு எழுதினாலும் தாங்கிக்கற தைரியத்தைக் கொடுத்திருக்கு. நான் நடிச்ச படம் ஓடினாலும் ஓடாட்டாலும் ஒரே மாதிரிதான் இருப்பேன். நோ ரீயாக்ஷன். காதல், கல்யாணம்னு இத்தனை வருஷத்தில் என்னைப் பற்றி வந்த செய்திகளையே பெரிய புத்தகமா போடலாம். பிரபலமா இருப்பதற்குக் கொடுக்கும் விலைன்னு சில நேரம் நினைச்சிக்குவேன். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால் இப்படி எழுதுறாங்கன்னு நினைக்கிறேன். ஆனா, நான் பார்ட்டிக்கு போறதா இருந்தாலும் என் வீட்டுக்குத் தெரியாம போனதில்ல. மனசில எந்த ரகசியமும் வச்சிக்கறதில்லை. ஒருவேளை இப்படி வெளிப்படையா இருக்கறதும் தப்போன்னு தோணுது!’’

‘‘வருங்காலக் கணவரும் தமிழ்நாட்டுக்காரராவே இருப்பாரோ?’’
‘‘எந்த நாட்டுக்காரரா இருந்தாலும் என மனசுக்குப் பிடிக்கணும். இவரோட சேர்ந்து வாழ்ந்தா வாழ்க்கை சொர்க்கமா இருக்கும்னு எனக்குள் எப்போ தோணுதோ... யாரைப் பார்த்தால் காதல் மணி அடிக்குதோ... அப்போ என்னோட கல்யாணம் நடக்கும். அதுவரைக்கும் என்னை ஃப்ரீயா விடுங்க!’’
- அமலன்