பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எங்காவது சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஏதாவது அசம்பாவிதம் செய்தால், உடனே அங்கு போலீஸ் போகும். செய்தது யார் என்று விசாரிக்காது. அந்த வட்டாரத்தில் யாரெல்லாம் சுதந்திர தாகத்தோடு இருக்கிறார்களோ, அத்தனை பேர் மீதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளும். அதற்கு ஏற்றபடி சாட்சிகளை உருவாக்கிக் கொள்ளும். வெள்ளைக்காரன் போய் 66 ஆண்டுகள் ஆனபிறகும் போலீஸ் மட்டும் அப்படியே இருக்கிறது. அதன் விளைவுதான் தாக்குதல்கள். இந்த ஆண்டின் மிகக் கோரமான தாக்குதலாக சட்டீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தேசமே அதிர்ந்து போயிருக்கிறது.
சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் என ஐந்து மாநில எல்லைகள் சந்திக்கும் வனப் பிரதேசங்களில் மாவோயிஸ்ட்கள் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவில் வளர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாநில அரசும் உருவாக்கியிருக்கும் சிறப்புக் காவல் படைகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை என காவலர்கள் இங்கு குவியக் குவிய, மாவோயிஸ்ட்கள் படை வலுவாகிக் கொண்டே இருக்கிறது.
உண்மையில் போலீஸ் இங்கு எதைச் செய்ய வேண்டுமோ, அதற்குத் தலைகீழாக வேறு வேலைகளைச் செய்கிறது. அதுதான் பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருக்கிறது.
பழங்குடியினர்தான் மாவோயிஸ்ட்களின் பலம். இந்த வனங்களில் இருக்கும் கனிம வளங்களை எடுக்கும் உரிமை பல தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், வனங்களிலிருந்து பழங்குடிகளை விரட்டும் முயற்சி ஒரு பக்கம் நடக்கிறது; தங்கள் உரிமைக்காக அவர்கள் எழுப்பும் சிறு குரல்கூட, இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் போலீஸும் தனியார் சுரங்க நிறுவனங்களோடு கைகோர்த்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியை எதிர்க்கும் யாரும் மாவோயிஸ்ட் ஆக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவார்.
வனங்களை நம்பி இனி வாழமுடியாது என்ற உண்மையைப் புரிந்துகொண்ட ஒரு தலைமுறை பழங்குடியினர், பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கள் உரிமைகள் பற்றியும் அவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன. தங்களுக்காக இருக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர்களால் அபகரிக்கப்படுவது கண்டு கொதிக்கிறார்கள். வினீல் கிருஷ்ணா, அலெக்ஸ் பால் மேனன் போன்ற கலெக்டர்கள் இதைப் புரிந்துகொண்டு மக்கள் நலத் திட்டங்களை பழங்குடிகளின் வீடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால், எல்லோரும் அப்படி இல்லையே!
இப்படி அரசு நிர்வாகம் அருகில் வந்தாலும், பழங்குடிகளை போலீஸ் தொலைதூரத்தில்தான் வைக்கிறது. எங்காவது போலீஸ் படை மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினால், அந்த வட்டாரத்தில் இருக்கும் கிராமங்கள் அமைதியிழந்துவிடும். முதலில் போலீஸால் வளைக்கப்படுவது படித்தவர்கள்தான்; ஏரியா அரசியல் தலைவர்களுக்கு யாரை எல்லாம் பிடிக்கவில்லையோ... அவர்கள் அத்தனை பேரும் இந்த வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.
அப்பாவிகள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்கு ஆளாவதும் நின்றால், மாவோயிஸ்ட் படைக்கு ஆள் கிடைப்பது குறைந்துவிடும். சும்மா இருக்கும்போதே சிறையில் தள்ளினால், அவர்கள் மாவோயிஸ்ட்டாக வெளியில் வருகிறார்கள்.
சோனி சோரியை உங்களுக்குத் தெரியுமா? காந்தி ஆசிரமத்தில் படித்து ஆசிரியை ஆன பழங்குடி பெண். தன் கிராமத்தில் நிகழ்ந்த அநீதிகளை தட்டிக் கேட்டதால் இன்றும் சிறையில் இருக்கிறார். போலீஸ் அவருக்கு நிகழ்த்திய பாலியல் வன்முறைகள் பயங்கரமானவை. மருத்துவப் பரிசோதனையில் அவரது பிறப்புறுப்பில் கற்கள் திணிக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து எடுத்தார்கள். இந்தக் கற்காலத்திலிருந்து வெளியில் வராதவரை மாவோயிஸ்ட்களை ஒழிக்க முடியாது!
- அகஸ்டஸ்