கமல் ஆசையாக கேட்ட படம்!





‘சரஸ்வதி’ சத்தியமூர்த்தி புகைப்படம் எடுக்க வருகிறார் என்றால் ஷூட்டிங்கையே கேன்சல் செய்துவிட்டு காத்திருப்பார்களாம் நடிகைகள். அப்படி ஒரு ராசி. அவரின் கேமராக்கண் பட்டுவிட்டால் போதும்... நட்சத்திரங்களில் தானாக வெளிச்சம் பற்றிக்கொள்ளும். ஊர்வசி, மேகலா, கல்பனா, சுஜாதா, குயிலி, சித்ரா என அவரின் புகைப்படங்கள் உருவாக்கிய நடிகைகள் ஏராளம் பேர்.

இவருக்கு ‘கிளாமர்’ சத்தியமூர்த்தி என்றும் ஒரு பெயர் உண்டு. ‘மாடலிங் போட்டோகிராபி’யில் புகழ் பெற்றார். அரசுப்பணி ஆற்றிக்கொண்டே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்பட 300 பத்திரிகைகளுக்கு அட்டைப்படம் எடுத்துக் கொடுத்த புகைப்படக்காரர்.

 கொளத்தூர் பெரியார் நகரில் வசிக்கும் சத்தியமூர்த்திக்கு 74 வயது. புகைப்படம், சினிமா பற்றிப் பேசினால் 24 வயதாகி விடுகிறது.



‘‘பூம்புகார் பக்கத்துல திருவெண்காடுதான் சொந்த ஊர். என் தாய்மாமா வர்ணம், பெரிய ஆர்டிஸ்ட். தமிழ் பத்திரிகையுலகத்துல அவரைத் தெரியாதவங்க இருக்க முடியாது. கோட்டோவியங்கள் பிரபலமாயிருந்த காலகட்டத்துல ‘வாஷ் டிராயிங்’கை அறிமுகப்படுத்தியவர். அவர்தான் எனக்கு ஆசான். புகைப்படம் போலவே ஓவியம் வரையிற கலைதான் ‘வாஷ் டிராயிங்’. அதுக்காக அவர் நிறைய போட்டோ எடுப்பார். விதவிதமா கேமராக்கள் வாங்குவார். 15 வயதிலேயே எனக்கு கேமராவோடு பரிச்சியம் தொடங்கிவிட்டது. மாமாவே நுட்பங்களை சொல்லித் தருவார்.

தமிழ்வாணனும், என் மாமாவும் நண்பர்கள். நான் எடுத்த ஒரு புகைப்படத்தை மாமா தமிழ்வாணனிடம் கொடுத்தார். ‘கல்கண்டு’ தீபாவளி மலரில் படத்தை பிரசுரித்தார் தமிழ்வாணன். மிகுந்த உற்சாகமானேன். அதன்பின் என்னைக் கவரக்கூடிய பெண்கள் எங்கேனும் இருந்தால், அவர்கள் அனுமதியோடு படங்கள் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்.

பி.ஏ முடித்ததும் செகரட்ரியேட்டில் வேலை கிடைத்தது. புகைப்படக்கலை மேல் பெரும் ஈடுபாடு இருந்தாலும், என் அலுவல் அதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். என் புகைப்படத் தேடல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்தான். உறவுக்காரர் ஒருவரின் வீட்டுக்கு குல்நார்டி ராணி என்ற பெண் வந்திருந்தார். அவரைப் படம் எடுத்து ஒரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அட்டையில் வந்தது. உடனடியாக சினிமா வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பெண்தான் பின்நாளில் குயிலி ஆனார். கல்பனா, கவிதா, கலா சகோதரிகளை நான்தான் முதன்முதலில் படம் எடுத்தேன். அந்தப் படங்கள் ‘குங்கும’த்தில் வந்தன. மூவருமே நடிகையானார்கள். அதிலும் கவிதா, ஹீரோயினாகவே நடித்து புகழ்பெற்றார். அந்த கவிதாதான் ஊர்வசி.



‘குங்குமம்’ இதழுக்காக கமலையும் சாவித்ரியையும் சந்திக்க வைத்து ஒரு போட்டோஷூட் செய்தோம். கமலை சாவித்ரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். மிகவும் நெகிழ்வாக அந்த சந்திப்பு அமைந்தது. தாயன்போடு கமலின் தோள்தொட்டு சாவித்ரி தலைமோதுகிற அந்தப் படத்தை கமல் கேட்டார். இன்று வரையிலும் அந்தப் படத்தை அவருக்குத் தரமுடியவில்லை.

கிளாமர் போட்டோக்கள் எடுப்பதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. நானறிந்த வரை, தென்னிந்தியாவின் மிகச்சிறந்த கிளாமர் நடிகை என்றால் பாபிலோனாவின் அம்மா மாயாவைத்தான் சொல்வேன். கிளாமர் படங்கள் எடுக்க மிகவும் பொறுமை தேவை. சில ஆலோசனைகளை சொல்வேன். கேட்காமல் பிடிவாதமாகத் இருந்தால் வெளியேறி விடுவேன். அதன்பின் வாழ்க்கையில் அவர்களை படம் எடுக்கவே மாட்டேன். அப்படி நான் திட்டவட்டமாகத் தவிர்த்த நடிகை சில்க் ஸ்மிதா. ஒரு பத்திரிகைக்கான போட்டோ ஷூட்டுக்கு ஒப்புக்கொண்டார். போனபிறகு, ‘சேலை கட்டித்தான் போஸ் கொடுப்பேன்’ என்று விடாப்பிடியாக நின்றார். கோபமாக வெளியேறி விட்டேன்.



அதன்பிறகு பல்வேறு வாய்ப்புகள் அமைந்தும் படம் எடுக்காமல் தவிர்த்துவிட்டேன். தென்னிந்திய மொழிகளில் புகழ்பெற்ற நடிகைகளாக விளங்கிய பலரின் முதல் படத்தை எடுத்தவன் என்ற முகவரி எனக்குண்டு’’ என்கிற சத்தியமூர்த்தி பல்லாயிரம் புகைப்படங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்.  
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்