குட்டிப் புலி : விமர்சனம்





எந்த நேரத்திலும் எதிரி தாக்கலாம் என பகையை எதிர்கொண்டபடியே இருக்கும் குட்டிப் புலிதான் சசிகுமார். நம்மை நம்பி வரும் பெண்ணின் வாழ்க்கை குலைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் கல்யாணத்தை மறுத்து காட்டாறாய் சுற்றும் சசிகுமார், புதிதாக அதே வீதியில் குடிவரும் லட்சுமி மேனனின் மனதில் விழுகிறார். வில்லன்களின் படுபயங்கர துரத்தலில் நாயகன் தப்பிக்கிறாரா, நாயகியை கைப்பிடிக்கிறாரா என தடதடக்கும் கேள்விகளுக்கு ஆக்ஷன் சென்டிமென்டில் பதில் சொல்லும் அதிரிபுதிரி படம்தான் ‘குட்டிப்புலி’.

வெற்றிக் கணக்கில் வரவு வைத்திருக்கும் அறிமுக இயக்குனர் முத்தையாவின் முதல் அடியே துல்லியம். ஸ்ரீவில்லிபுத்தூர் வாசம் வீசும் பேச்சு... மனம் முழுக்க வீசும் காதல்... இப்படி ரசிகர்களை ஏமாற்றாத தனது ட்ரேட் மார்க் கலகலப்பில் அதகளம் பண்ணியிருக்கிறார் சசிகுமார். ஊர் முழுக்க முரட்டுக் காளையாய் வலம் வருபவர், நாயகியிடம் காதல் கடிதம் கொடுக்க கை நடுங்குவதும், கொடுத்துவிட்டு தெறித்து ஓடுவதும் அழகு முரண். அசல் சண்டியராக சலம்பித் திரியும் இளைஞனுக்கான முகவெட்டும் உருவமும் அட்டகாசமாகப் பொருந்துகிறது சசிக்கு. சரக்கு மயக்கத்தில் புலம்புவதும், காதல் மயக்கத்தில் கிறங்குவதுமாக அசத்துகிறார். பெண்மையின் சிறப்பைச் சொல்வதிலும்... போலீஸே தப்பு செய்தாலும் வெகுண்டு தண்டிப்பதிலும் சசிகுமார் காட்டுவது ருத்ரதாண்டவம்.



‘கலசம் இல்லாத கோபுரத்தையும் கலவரம் இல்லாத மதுரையையும் பார்த்தாலும் நல்லாயிருக்காது... படிச்சாலும் நல்லாயிருக்காது...’ என்று வரிந்து கட்டி சிலம்பம் ஆடுவது, காதல் வந்ததும் காஸ்ட்யூம் மாறி ரஜினி ஸ்டைலில் பந்தா காட்டுவது, அம்மா சரண்யாவின் பாசத்தில் உருகிப் பரிதவிப்பது என பாசமகனின் உருவத்தில் சசிகுமார், அடடா!

குட்டிப்புலியின் மனசில் குடிபோகும் கிளியாக லட்சுமி மேனன் செம ஃபிரஷ். ‘‘நான் உங்களைக் காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்’’ என்று சசியிடம் மனம் திறப்பது, வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடும் சசியை, நகைகளை விற்றுக் காப்பாற்றத் துடிப்பது என டிபிகல் தமிழ் மேனனாக வாழ்கிறார்.



சரண்யாவுக்கு எத்தனை முறை அம்மா வேஷம் கொடுத்தாலும் அது சும்மா வேஷம் இல்லை. மகனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் தாயாராக சரண்யா. க்ளைமாக்ஸில் குழப்பத்தோடு அழுது, அரற்றி, பொங்கி, வெடித்து அவர் எடுக்கும் ஒரு முடிவு, யூகிக்க முடியாதது. அது மனதையும் உலுக்கிப் போடுகிறது. எளிய மனிதர்களின் பிரியங்களை அச்சு அசலாகக் காட்டிய பரிவில், சோகத்தில் ஒளி விடுகிறார். வில்லனாக ராஜசிம்மன், பார்வையிலேயே பயமுறுத்துகிறார்.

சசியின் நண்பராக வரும் ‘ஆடுகளம்’ முருகதாஸ், லட்சுமி மேனனை ஒன்சைடாக லவ்வி ஒவ்வொரு முறையும் தோற்கும் பாலா கூட்டணி, ஒயின்ஷாப்பில் அலப்பறை கொடுத்து அடி வாங்கிச் செல்லும் நமோ நாராயணன், டெய்லராக தலை காட்டும் ஞானசம்பந்தம் என அதிரும் ஆக்ஷனுக்கு நடுவே காமெடி ஒத்தடம் + கலகலப்பு.

ஜிப்ரான் இசையில் வைரமுத்து எழுதிய ‘அம்மாவின் சேல’ பாடல், சென்டிமென்ட்டில் உயிரை உருக்குகிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு, பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போல் தெளிவு. அதிரடி சண்டைக் காட்சியில் கேமரா காட்டியிருப்பது, மூச்சு முட்ட வைக்கும் சுறுசுறு அதிரடி.
‘குட்டிப்புலி’ - சூப்பர் ஹிட் பாய்ச்சல்!
- குங்குமம் விமர்சனக் குழு