கடைசி பக்கம்

குழந்தை இரண்டு வயதைத் தாண்டி மூன்றாவது வயதைத் தொட்டதும் எல்லா அப்பாவுக்கும் வரும் பயம், அவருக்கும் வந்தது. நடக்கவும் ஓடவும் கால்கள் துடிதுடிக்க, ஒரு இடத்தில் நிலைகொள்ளாமல் சுழன்று கொண்டிருந்தது குழந்தை. வீட்டுக்குள் பயமில்லை; தோட்டத்திலும் முன் வாசலிலும் கூட பயமில்லை. ஆனால், காம்பவுண்ட் கதவைத் திறந்துகொண்டு ரோட்டுக்குப் போய்விடுவதுதான் அவருக்கு அச்சம் தந்தது.
வீட்டுக்கு வெளியே பிரதான நெடுஞ்சாலை. எந்த நேரமும் அதிவேகத்தில் கனரக வாகனங்கள் போய்க் கொண்டிருக்கும். வாகனங்கள் பற்றியோ, சாலை பற்றியோ அறிமுகமில்லாத குழந்தை அங்கு போவது ஆபத்து. ஆனால் வீட்டில் வழக்கமாகப் பார்க்கும் காட்சிகளைவிடவும், சாலையில் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும் புதிய காட்சிகளே குழந்தையை ஈர்த்தன. கதவை எத்தனை முறை தாழிட்டாலும், திறந்துகொண்டு செல்ல பழகிவிட்டது குழந்தை.
காம்பவுண்ட் கேட் கதவை புதுமையாக மாற்ற முடிவு செய்தார் அப்பா. இரட்டைக் கதவுகள். ஒன்று குழந்தையின் கழுத்தளவு உயரத்துக்கு இருக்கும். அதை நிரந்தரமாகப் பூட்டி விட்டால், அதன் உட்புறமாக நின்றுகொண்டு குழந்தை வேடிக்கை பார்க்கும்; இரவில் மேல் கதவையும் பூட்டிவிட்டால் வீட்டுக்குப் பாதுகாப்பு.
கதவுகள் வந்ததும் அப்பாவே பொருத்தினார்; குழந்தை சுவாரசியமாக வேடிக்கை பார்த்தது. கீழ்க்கதவை பொருத்தி மூடிவிட்டு, மேல் கதவுக்கான கீல்களைப் பொருத்தும்போது சுத்தியல் வெளியில் விழுந்துவிட்டது. கதவைத் திறந்தால், கீல்கள் பலமிழந்துவிடும். என்ன செய்வது என அப்பா யோசிக்கும்போதே, ‘‘நான் போய் எடுத்துட்டு வர்றேன் டாடி’’ என குழந்தை ஓடியது. காம்பவுண்ட் சுவரில் உடைந்திருந்த ஒரு இடம் வழியே வெளியே போய் சுத்தியலை எடுத்தது. அப்பா திகைத்து நின்று விட்டார். ஒரு வழி அடைபடும்போது பல வழிகள் திறக்கும்!
|