டி.எம்.எஸ்: தமிழ் வாழ்க்கையின் தனிக்குரல்டி.எம்.எஸ். மறைந்த அன்று தமிழ் வாழ்வின் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான அடையாளம் ஒன்று மறைந்து போனதாகவே உணர்ந்தேன். உண்மையில் அது மிகக் கடுமையான இழப்புணர்ச்சி. கடந்த நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக தமிழர்களின் கலாசார உணர்வில் பெரும் பங்கு வகித்தவர்கள் மூன்று பேர். கண்ணதாசன், இளையராஜா, டி.எம்.எஸ். ஒரு சராசரி தமிழனின் வாழ்க்கையில் இவர்கள் சம்பந்தப்படாத தருணங்கள் வெகு அரிது. ஒரு தமிழனின் மிக அந்தரங்கமான உணர்ச்சியை இந்த மூவரில் ஒருவர் எப்போதாவது தொட்டுத் திறந்திருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தமிழர்களின் வாழ்வியல் நோக்கு, தத்துவ நோக்கு, கலையுணர்வு ஆகியவற்றில் பெரும் பகுதி இவர்களின் வழியாகவே வெளிப்பட்டு வந்திருக்கிறது. கண்ணதாசனின் ஏதாவது ஒரு வரிகளினூடே தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை கண்டுகொள்ளாதவர்களோ, இளையராஜாவின் இசையின் ஏதேனும் ஒரு பகுதியோடு தங்களுடைய வாழ்வின் ஒரு பருவத்தை இணைத்துக்கொள்ளாதவர்களோ, டி.எம்.எஸ்ஸின் ஏதோ ஒரு பாட்டை தாங்கள் பாடி மனம் கசிந்து அழாதவர்களோ தமிழர்களில் வெகு அரிது.
டி.எம்.எஸ்ஸின் குரல் தமிழர்களின் அந்தரங்கத்தின் குரலாக, மனசாட்சியின் குரலாக இருந்தது. ஒரு மலையின் உச்சியிலிருக்கும் கோயில் மணியிலிருந்து கேட்கும் குரல் அது. அது மேலிருந்து இறங்கி வரும் காட்சியை நம் மனக் கண்ணில் எத்தனை முறை கண்டாலும் சலிப்பதில்லை. டி.எம்.எஸ் ஒரு நளினமான பாடகர் அல்ல. குழைவும் நெகிழ்வும் நாடகப் பாங்கும் அவரது குரலில் ஒருபோதும் இழைந்ததில்லை. உண்மையில் அது தீர்க்கமும் உக்கிரமும் மிகுந்த குரல். அந்தக் குரலால்தான் பக்தி, காதல், குதூகலம், துயரம், முழக்கம், வீழ்ச்சியின் தனிமை என அத்தனை உணர்ச்சிகளையும் அவர் உருவாக்கிக் காட்டினார். ஒரு மிகப்பெரிய காலகட்டம் நெடுக, பிரமாண்டமான நதியைப் போல டி.எம்.எஸ்ஸின் குரல் ஓடிக்கொண்டிருந்தது. எண்ணற்ற உணர்ச்சிகளின், சுழல்களின் நதி அது. அந்தக் குரல் நெஞ்சில் பெரும் விம்முதலை உருவாக்கக் கூடியது. கேட்பவனின் குரலாக தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியது. எந்த உணர்ச்சியைப் பாடுவதற்கு எடுத்துக்கொண்டாலும் அதை தன் குரலால் முழுமையாக நிரப்புகிறவர் டி.எம்.எஸ். சங்கீதத்தின் பொது விதிகளை உடைத்துக்கொண்டு உணர்ச்சியின் பிரவாகங்களை மேலெழச் செய்பவர். தவிப்பையும் கண்ணீரையும் எந்த எல்லை வரை கொண்டு போகலாம் என்று இடைவிடாமல் முயற்சித்துக்கொண்டே இருப்பார். காதலையும் சோகத்தையும் இவ்வளவு கம்பீரமாக பாடிய ஒரே பாடகர் டி.எம்.எஸ்ஸாகத்தான் இருக்க முடியும்.
தமிழகத்தின் இரண்டு மாபெரும் நடிகர்களின் குரலாக டி.எம்.எஸ் இருந்தார். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் டி.எம்.எஸ். இல்லாமல் கற்பனை செய்வதே கடினம். முற்றிலும் நேரெதிரான நடிப்பும் பாவங்களும் நோக்கங்களும் கொண்ட இரண்டு நடிகர்களின் ஆதாரப் பாடகராக டி.எம்.எஸ் இருந்தது மிகப் பெரிய ஒரு சாகசம். எம்.ஜி.ஆர் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், அடித்தட்டு மக்களுடைய நாயகனாக தன்னை முன்னிறுத்தும் படங்களில் நடித்தபோது, டி.எம்.எஸ் உண்மையில் ஒரு புரட்சிகர மக்கள் பாடகனாகவே மாறினார். எம்.ஜி.ஆரை அடித்தட்டு மக்களின் நாயகனாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் டி.எம்.எஸ் எடுத்துச் சென்றார். ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ என்ற சுதந்திர முழக்கமாகட்டும்... ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், ஏழைகள் வேதனை படமாட்டார்’ என்ற அரசியல் முழக்கமாகட்டும்... அது டி.எம்.எஸ்ஸின் குரல் வழியே எம்.ஜி.ஆரின் அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பியது. ‘தரைமேல் பிறக்க வைத்தான், எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற வரிகளைக் கேட்டு பெண்கள் மனமுடைந்து அழுதார்கள். எம்.ஜி.ஆரின் நடிப்பினால் உருவாக்க முடியாத மிக ஆழமான உணர்ச்சியின் அலைகளைக்கூட டி.எம்.எஸ். தன்னுடைய குரலினால் உருவாக்கினார். டி.எம்.எஸ்ஸின் குரல் ஒரு அரசியல் இயக்கத்தின் குரலாகவே மாறிப் போனது. அது தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு அங்கம் ஆனது.
சிவாஜி கணேசன் இன்னொரு எல்லையில் இருந்தார். தமிழர்களின் குடும்ப வாழ்க்கையின் உணர்ச்சிப் பெருக்குகளையும் சிக்கல்களையும் அதீதமான நிலையில் சிவாஜி கணேசன் படங்கள் கையாண்டன. அன்பு, பாசம், காதல், துரோகம், தனிமை, சுயநிந்தனை, வெறுப்பு என சிவாஜி எந்தப் பாத்திரத்தில்தான் நடிக்கவில்லை? இந்த உணர்ச்சிகள் அனைத்தையும் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு பெரும் சக்தியாக டி.எம்.எஸ், சிவாஜியுடன் இணைந்திருந்தார். மிகவும் நாடகத்தனமானது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட சிவாஜியின் நடிப்பும், டி.எம்.எஸ்ஸின் குரலும்தான் தமிழ் வாழ்க்கையின் கொந்தளிப்பான தருணங்களை நேரடியாக மீட்டு உயிர்பெற்று எழச் செய்தன. மிகையுணர்ச்சியும் நாடகப் பாங்கும் நமது பண்பாட்டின், குடும்ப வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கம். அதன் மகத்தான நாயகர்களாக சிவாஜியும் டி.எம்.எஸ்ஸும் திகழ்ந்தார்கள்.
இதை நாம் ஒரு மேற்குலக அழகியல் நுண்ணுணர்வோடு பார்த்துப் புரிந்துகொள்ள முடியாது. ‘வசந்த மாளிகை’யில் ‘யாருக்காக...’ என்று வெடித்துச் சிதறும் டி.எம்.எஸ் குரல், தமிழர்களை மனமுடைய வைத்தது. அந்தப் பாடலுக்குப் பின்னே இருந்த இழப்புணர்வின் துக்கம் கடுமையானது. அதேபோல ‘அவளா சொன்னாள்? இருக்காது’ என்று டி.எம்.எஸ் கதறும்போதும், ‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க’ என்று சொல்லும்போதும், இதைச் சொல்ல ஒருவருக்கு இவ்வளவு உச்சஸ்தாயி தேவையா என கேள்வி எழலாம். டி.எம்.எஸ் உணர்ச்சிகளை வரையறுத்துக்கொண்டு பாடுகிறவர் அல்ல. அதை எப்போதும் மீறிச் செல்ல விரும்புகிறவர். இதே டி.எம்.எஸ்தான் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்று பாசத்தின் தத்தளிப்பில் நெகிழ்ந்து உருகும்போதும், ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ என்று காதலில் கசியும்போதும் ஒரு மனிதன் தொட்டுணர முடியாத மிக ஆழமான இடங்களுக்கு இட்டுச் செல்கிறார்.
தெய்வ பக்தியை வெளிப்படுத்தும் பாடல்களில் டி.எம்.எஸ்ஸின் குரல் பித்து நிலையின் உச்சத்திற்குச் சென்று விடுகிறது. ‘தெய்வமகனி’ல் ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்ற டி.எம்.எஸ்ஸின் கண்ணீர் மல்கிய பிரார்த்தனைக் குரலை எத்தனை முறை என் வாழ்வில் கேட்டிருப்பேன் என்று எண்ணிக்கையில்லை. ‘கோயிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா, கிருஷ்ணா... கொடையருள் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற வரிகள், இந்த உலகின் ஒட்டுமொத்த பிரார்த்தனையாகவே என் மனதில் ஒலித்திருக்கிறது.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கோலோச்சிய எல்லா முன்னணி நடிகர்களுக்கும் டி.எம்.எஸ் பாடியிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி அல்லாமல் பிற நடிகர்களுக்காக அவர் பாடிய பாடல்களில் அவர் குரலின் வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் அந்த நடிகர்கள் பின்தங்குவதைக் காணலாம். பிற்காலத்தில் அந்த நடிகர்களின் முகங்கள் மறக்கப்பட்டு, டி.எம்.எஸ்ஸின் குரலாக மட்டுமே அந்தப் பாடல்கள் எஞ்சின.
எண்பதுகளில் எம்.எஸ்.வியின் யுகம் முடிந்து இளையராஜாவின் யுகம் தொடங்கியது. தமிழ் சினிமா மிகையுணர்ச்சிகளிலிருந்து எதார்த்தத்தை நோக்கி நகர முற்பட்டது. தமிழ் திரையிசையினை இளையராஜா ஒரு புதிய யுகத்தை நோக்கிச் செலுத்தியபோது ரஜினிகாந்த்தும் கமலஹாசனும் எம்.ஜி.ஆர்., சிவாஜியின் இடத்தை முற்றாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அதே சமயத்தில் எஸ்.பி.பி ஒரு பெரும் புயலென வளர்ந்து தமிழ் திரையிசைப் பாடல்களை ஆக்கிரமித்தார். அந்த காலகட்டத்தில் இந்த புதிய தலைமுறை நடிகர்களுக்கு டி.எம்.எஸ். பாடிய சில பாடல்களை இப்போது கேட்கும்போது, அவர் முற்றாக தனித்து விடப்பட்ட ஒரு மனிதராக தோற்றமளிக்கிறார். கர்நாடக இசைப் பாடகர்களுக்கு நேராத, ஆனால் திரையிசைப் பாடகர்களுக்கு எப்போதும் நேரக்கூடிய வீழ்ச்சி இது.
டி.எம்.எஸ் பாடிய பத்தாயிரம் பாடல்களில் ஒரு 500 பாடல்களாவது எந்த காலமாற்றத்தாலும் பின்னுக்குத் தள்ள முடியாத உணர்ச்சிகளின் நெருப்பை தமக்குள் வைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த நெருப்பு ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் எப்போதும் தணல் மூட்டிக்கொண்டே இருக்கும்.
(பேசலாம்...)
மனுஷ்ய புத்திரன் பதிகள்
கிரிக்கெட் என்றால் இப்போதெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருவது எது?
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
சில தமிழ் நடிகைகள், சில மாடல் அழகிகள்.
தைரியமான பெண் அரசியல்வாதிகளில் தே.மு.தி.க பிரேமலதாவுக்கு இடம் கிடைக்குமா?
- நாசரேத் விஜய், கோவை.
அவரை அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்ட உங்களுக்கு நிச்சயமாக தைரியசாலிகள் பட்டியலில் இடமுண்டு.
இப்போது வருகிற படங்களில் எல்லாம் நீதி போதனை என்பது துளியும் இல்லையே?
- எஸ்.கோபாலன், சென்னை.
உங்களைத் திருத்துகிற வேலை நடக்கிற காரியமில்லை என்று முடிவுக்கு வந்திருப்பார்கள்.
இலங்கைத் தமிழர்கள் ஒரே நாட்டில் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ விரும்புகிறார்கள் என்று ராஜபக்ஷே கூறியிருக்கிறாரே?
- கவியகம் காஜூஸ், கோவை.
ராஜபக்ஷேவால் கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டு, பூமிக்கடியில் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழும் தமிழர்கள் அவரிடம் அப்படிக் கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது.
கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
- எம்.மைக்கேல் ராஜ், சாத்தூர்.
‘இந்த ஜட்ஜு நம்மளை எப்படி ஒருமுறைகூட கண்டுபிடிக்காம இருக்கார்!’
நெஞ்சில் நின்ற வரிகள்வறுமையின் அவலத்தையும் கண்ணீரையும் குழந்தைகளின் வழியே கேட்பது போன்ற ஒரு துயரம் வேறு எதுவும் இல்லை. அப்படி ஒரு துயரத்தை காலங்காலமாக நம்முடைய மனதில் அலைமோதச் செய்யும் ஒரு பாடல், கலைஞர் எழுதி ‘மறக்க முடியுமா’ படத்தில் இடம் பெற்றது. கலைஞர் மிகக் குறைவான அளவிலேயே திரைப் பாடல்கள் எழுதியிருக்கிறபோதும், அவரை மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக அறியச் செய்யும் பாடல் இது...
‘காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்’
என்ற வரிகளில் அழிவின் விளிம்பில் நின்று தத்தளிக்கும் குரல்கள் கேட்கின்றன.
‘ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை’
என்ற வரிகளைக் கேட்கும்போதெல்லாம் புதுமைப்பித்தனின் ‘கைதூக்கிக் கும்பிட யாரும் இல்லை’ என்ற வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும். பி.சுசீலா இந்தப் பாடலில் தன் குரலை துயரத்தின் ஆழத்திற்குச் சென்று இழைத்திருக்கிறார்.
எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள் : எச்.பீர் முஹம்மதுமிகக் கூர்மையான அரசியல், சமூக விமர்சனங்களையும், விவாதத்தைத் தூண்டும் பல குறிப்புகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார் எச்.பீர் முஹம்மது. நமது சமூக அரசியல் சூழலின் பல சிக்கல்களையும் அபத்தங்களையும் இந்தக் குறிப்புகள் தெட்டத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன...
இந்தியாவில் / தமிழ்நாட்டில் 5 வயது, 10 வயது பெண் குழந்தைகளை வக்கிர ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் செயல்பாடுகள் கூட அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி குழந்தைகளை பலாத்காரம் செய்யும் வக்கிர மனநிலையின் குரூரம் அளவிட முடியாதது. அதே நேரத்தில் பருவமடைந்த 14 அல்லது 15 வயது பெண்ணைத் திருமணம் செய்யும் 30 வயது ஆணின் மனநிலையும் மேற்கண்ட ஆண்களை போன்றதே... இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முதல் வகை ஆண் தன் காம வக்கிரத்தின் வடிகாலாக குழந்தையை விரும்புகிறான். அதன் காரணமாக பலாத்கார எல்லையைத் தொடுகிறான். இரண்டாம் வகை ஆண், அதே வகையான ரசனையோடு திருமணம் என்ற பெயரில் அதனை சட்டபூர்வமாக்கிக்கொள்கிறான். இதுதான் வித்தியாசம். ஆண்/ பெண் திருமண வயதின் பாரதூர இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
https://www.facebook.com/profile.php?id=1504666900-hc_location=stream