என்றும் இறவாத குரல்





‘‘வத்தலக்குண்டு அருகே இருக்கும் என் பண்ணை வீட்டில் எடுத்த இந்தப் படமும் அந்த நிமிடங்களும் என் நெஞ்சில் இப்போதும் ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன’’ - டி.எம்.எஸ் என்ற காந்தக் குரல் மன்னனுடன் கழித்த பொக்கிஷத் தருணங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார் கவிப்பேரரசு வைரமுத்து...

‘‘மதுரையில் ஒரு பாராட்டு விழாவுக்கு வந்திருந்த டி.எம்.எஸ், பி.சுசீலா இருவரையும் என் பண்ணை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தேன். பதினாறு வகையான காய்கறிகளுடன் சைவ உணவு பரிமாறப்பட்டது. ‘என் வாழ்க்கையில் சாப்பிட்ட நல்ல சாப்பாட்டில் இதுவும் ஒன்று’ என்று டி.எம்.எஸ் சொன்னபோது, என் மனசு நிறைந்தது. விருந்து முடித்து மாடிக்குப் போனோம். என் மன அழுத்த நேரங்களில் இந்த ஊஞ்சல்தான் இளைப்பாற்றும்.

அந்த ஊஞ்சலில் நான் இப்போது டி.எம்.எஸ்ஸுடன். பழைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டவர், சில பாடல்களைப் பாடி செவிக்கு விருந்து வைத்தார். டி.எம்.எஸ் ஒரு குழந்தை மாதிரி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத, அந்த குணம்தான் அவரை சிறந்த கலைஞனாகவும் வைத்தது; திரையுலகில் சில பிணக்குகளையும் சம்பாதித்துக் கொடுத்தது.
ஆறாம் வகுப்பு முதலே என் வாழ்வின் கூடவே வந்தது அவரது பாடல்கள்தாம். 60களில் ஜி.ராமநாதன், எஸ்.என்.சுப்பையா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, நவ்சாத், எஸ்.டி.பர்மன், ஸ்ரீராமச்சந்திரா, மன்மோகன் போன்றவர்கள் கொடி கட்டிப் பறந்த அந்தக் காலம்தான் இந்திய இசையுலகின் பொற்காலம். தங்கக் கலசத்தின் உச்சத்தில் மாணிக்கம் பதித்தது போல, இசைக்கும் மொழிக்குமான பொற்காலத்தின் உச்சத்தில் இருந்தவர் டி.எம்.சௌந்தரராஜன்.

ஒரு பாடகரின் குரல் 6 மாதங்களில் சலித்துவிடுகிறது என்ற கருத்து இப்போது இருக்கிறது. ஆனால், இத்தனை இசையமைப்பாளர்கள், இத்தனை நடிகர்கள், இத்தனை தலைமுறைக்கும் சலிக்காமல், 40 வருடங்களாக பாடிக்கொண்டிருந்த பாடகர் டி.எம்.எஸ் மட்டுமே. இது மிகப் பெரிய வரம். அவரை எந்த வட்டத்துக்குள்ளும் அடைத்துவிட முடியாது. பகுத்தறிவுப் பாடல்களை பாடும்போது, பகுத்தறிவாளர்கள் கொண்டாடினார்கள். பக்திப் பாடலை பாடும்போது, பக்தி உலகம் கொண்டாடியது. ‘பாவாடை தாவணியில்...’ பாடியபோது, இளைஞர்கள் கொண்டாடினார்கள். நடிகர்கள், இயக்கம், சாதி, மதம் என்று எல்லா வட்டத்துக்கும் பொதுவானவராக இருந்தார்.

டி.எம்.எஸ்ஸின் தாய்மொழி சௌராஷ்டிரா. அவரது தந்தை மதுரையில் கோயில் புரோகிதராக இருந்தபோதுதான் அவருக்கு இசை ஆர்வம் பிறந்திருக்கிறது. அன்றைய சூப்பர்ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதர்தான் டி.எம்.எஸ்ஸின் உந்துசக்தி. ஒருமுறை மதுரைக்கு தியாகராஜ பாகவதர் வந்தபோது, ‘இவர் உங்களைப் போலவே பாடுவார்’ என்று டி.எம்.எஸ் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். டி.எம்.எஸ்ஸை பாடச் சொல்லிக் கேட்ட பாகவதர், அவர் குரலில் மயங்கி ‘என்னுடன் வந்து விடுகிறாயா?’ என்று அழைத்திருக்கிறார். ‘இவருடன் சென்றால் இவர் குழுவில் ஒரு சேவகராகவேதான் இருக்க வேண்டும்’ என்று நினைத்து மறுத்திருக்கிறார் டி.எம்.எஸ். ஆரம்பத்தில் தியாகராஜ பாகவதரை நகலெடுத்தது போலவே பாடியவர், பிற்பாடு தனக்கென தனி பாணி அமைத்து பாடத் தொடங்கினார்.

திரையுலகின் இரண்டு சக்கரவர்த்திகளாக விளங்கிய எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரே நேரத்தில் அங்கீகரித்த பாடகர் டி.எம்.எஸ்தான். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு டி.எம்.எஸ் குரலை மாற்றிப் பாடியதில், சின்ன ரகசியம் இருக்கிறது. சிவாஜி, டி.எம்.எஸ் இருவரின் குரலிலும் அடிநாதம் ஒன்றுதான். சிவாஜி பேசினால், டி.எம்.எஸ் பேசுவது மாதிரியும், டி.எம்.எஸ் பாடினால் சிவாஜி பாடுவதுபோலவும் இருக்கும். எம்.ஜி.ஆரின் குரல் சற்றே மென்மையானது. ஆண்மை தூக்கலாகவும் பெண்மை இழையோடுவது மாதிரியும் இருக்கும் குரல் எம்.ஜி.ஆருடையது. இருவருக்கும் வேறுபாடு காட்டுவதற்காக சிவாஜிக்கு பாடும்போது அடிவயிற்றிலிருந்து பாடுவார். எம்.ஜி.ஆருக்கு பாடும்போது தனது குரலில் மூக்கு ஒலியைக் கலந்துவிடுவார். அப்படிச் செய்யும்போது அடிநாதத்தின் அடர்த்தி குறைந்து, பெண்மையின் சாயலைத் தொட்டுவிட்டு வெளிவரும். அந்த வித்தையைக் கண்டுபிடித்ததும், அதை அமல்படுத்தியதும் டி.எம்.எஸ்ஸுக்கு மட்டுமே சாத்தியம். எம்.ஜி.ஆர், சிவாஜியின் உடம்புக்குள் புகுந்து ரசவாதம் பண்ணிய குரல், இசை இருக்கும்வரை இறவாமல் இருக்கும்.



எந்தப் பாடகனுடைய பாடல் சின்ன வயதிலிருந்து எனக்குள் விருட்சமாக வளர்ந்ததோ, அந்தக் குரல் என் பாடலை முதல்முறையாகப் பாட வந்தபோது, நான் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லை இல்லை. ஏ.வி.எம் தயாரிப்பில், இராம.நாராயணன் இயக்கிய ‘சிவப்பு மல்லி’ படத்துக்காக நான் எழுதிய ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்?’ என்ற பாடலை டி.எம்.எஸ் பாட வந்தார். ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடலைப் பார்த்ததுமே, ‘ரொம்ப நல்லாயிருக்குய்யா... பட்டுக்கோட்டைக்குப் பிறகு நெருப்பு பறக்குற மாதிரி எழுதியிருக்கீங்க...’ என்று பாராட்டினார். ‘நீங்கள் என் பாடலைப் பாடக் கிடைத்திருப்பது, எனக்குக் கிடைத்த பேறு’ என்றேன் நான்.

பாடும்போது மொழி வேறு, இசை வேறு, குரல் வேறு ஆகாமல், திரிவேணி சங்கமமாகிவிடுவார். முதல் நான்கு வரிக்கு சிங்கம் மாதிரி பாடியவர், ‘நாம் கண்ணீர் விற்கும் ஜாதி... இனி அழுதால் வராது நீதி...’ என்ற வரிகளில் உணர்ச்சியை இறக்கி உருக்கம் கொண்டு வந்தார்.

இவ்வளவு புகழ்கொண்ட ஒரு பாடகனை இன்றைய கணிப்பொறி தலைமுறைக்குப் போதுமான அளவுக்குத் தெரியவில்லை என்பது என் கருத்து. எனவே, சங்கீதம் கற்றுக்கொள்ள வரும் இளைஞர்களுக்கு பயிற்சிப் பாடலாக டி.எம்.எஸ்ஸின் பாடல்களை ஆக்க வேண்டும்!’’
 தொகுப்பு: அமலன்