அவுட்டிங் : காயத்ரி





‘‘கலா, லேட்டஸ்ட் படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன். ஈவ்னிங் வந்துடு... கப்புள்ஸ் சீட்!’’ என்றான் ரவி குரலைத் தாழ்த்தி!
செகண்ட் இயர் வகுப்பில் இருந்த கலாவுக்கு அவன் நோக்கம் புரிந்தது.
‘‘அதுக்கு முன்னால நான் சொல்ற அட்ரஸுக்கு வாங்க ரவி’’ என்றாள்.
‘‘எங்கே? எதுக்கு?’’ என்ற அவன் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல், ‘‘வாங்க... சொல்றேன்!’’ என்று முகவரியைக் கொடுத்தாள்.
மாலை... ‘டு லெட்’ போர்டு மாட்டியிருந்த அந்த முகவரிக்கு இருவருமே போனார்கள்.
‘‘வாடகை எட்டாயிரம் ரூபாய்... அட்வான்ஸ் அம்பதாயிரம். மாசா மாசம் கரெக்டா அஞ்சாம் தேதிக்குள்ள வாடகை தந்துடணும்’’ என்றார் வீட்டு உரிமையாளர்.
‘‘யோசிச்சிட்டு சொல்றோம்ங்க’’ என்று திரும்பினாள் கலா.
‘‘என்ன இது?’’ வெளியே வந்ததும் சீறினான் ரவி.
‘‘இதுதான் நிதர்சனம் ரவி. காதலிக்க காசு வேணாம்... ஆனா, குடித்தனம் பண்ண வேணும்! டிகிரி முடிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. வேலைக்குப் போய் காசு சேர்க்கணும்னு யோசிங்க..! காதலியோட சுத்தணும்னு நினைக்காம, காதலியை கல்யாணம் பண்ணிக்கிட்டா எத்தனை செலவு, தேவை இருக்குன்னு நினைக்க ஆரம்பியுங்க. அதுக்கப்புறம் என்னை அவுட்டிங் கூப்பிடுங்க...’’
ரவிக்கு பாக்கெட்டில் இருந்த டிக்கெட் பாரமாக உறுத்தியது.