சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தை ஒட்டியிருக்கிறது திருப்பாச்சேத்தி. சுதந்திரப் போரில் தமிழகப் போராளிகளின் ஆயுத உற்பத்திக்களமாக இருந்தது இந்த ஊர்தான். இங்கு வார்க்கப்பட்ட ஆளுயர அரிவாள்களைக் கண்டால் பிரிட்டிஷ் பீரங்கிகளே தலைதாழ்த்திக் கொள்ளுமாம். இந்த ஊருக்கு தற்காலச் சிறப்பு ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் சமீபத்திய கொலைச்சம்பவங்களில் கைப்பற்றப்படும் பெரும்பாலான ‘பொருட்கள்’ இங்கு உற்பத்தி செய்யப்பட்டவைதான் என்கிறது காவல்துறை. அடுத்தடுத்து இமானுவேல் சேகரன் நினைவு நாள், மருதுபாண்டியர் திருவிழா, தேவர் ஜெயந்தி போன்ற நிகழ்வுகள் வரவிருப்பதால், ‘திருப்பாச்சேத்தியில் இனி ஒன்றரை அடி உயரத்துக்கு மேல் அரிவாள், வாள், திருகுகத்தி தயாரிக்கக் கூடாது’ என்று தடை விதித்துவிட்டார் மானாமதுரை டி.எஸ்.பி. வெள்ளத்துரை. இதனால் இயல்பு குலைந்து கிடக்கிறது திருப்பாச்சேத்தி.
நிலாப்பிறை வடிவ மூக்குதான் திருப்பாச்சேத்தி அரிவாளின் அடையாளம். பல ரவுடிகளுக்கு இந்த அரிவாளோடு சென்டிமென்ட் தொடர்புண்டு. வீச்சரிவாள், பிடியோடு சேர்த்து இரண்டரை அடி இருக்கும். அகலமும் எடையும் குறைவு. எடுத்து வீசினால் காற்றைவிட வேகமாக நகர்ந்து சீவுமாம். திருப்பாச்சேத்தி வாளும் லைட்வெயிட்தான். முனை மடங்காமல் விரிந்திருக்கும். பைப்பில் மூங்கில்கம்பைச் சொருகி, அந்தப் பிடியில் திருகி இறக்கப்பட்ட சூரிக்கத்தி என்கிற திருகுகத்தி அபாயகரமானது. வயிற்றுக்குள் விட்டுச் சுழற்றினால் மொத்தக்குடலும் பிய்த்துக்கொள்ளுமாம். இவை மூன்றும்தான் தென்மாவட்ட ரவுடிகளின் விருப்பத்துக்குரிய ‘பொருட்கள்’.
‘‘தலைமுறை தலைமுறையா அருவா அடிக்கிறோம். திருப்பாச்சேத்தியில 20 குடும்பமும், திருப்புவனத்துல 25 குடும்பமும் பாரம்பரியமா இந்தத் தொழில்ல இருக்காங்க. விறகருவா, கருதருவா, தேங்காய் உரிக்கிற அருவா, கருப்பர், முனியனுக்கெல்லாம் வைக்கிற கோயில் அருவான்னு எல்லா வகை அருவாவும் செய்யிறோம். அரை அடியில இருந்து 18 அடி வரைக்கும் செய்யிறதுண்டு. ரெண்டு வருஷம் முன்னாடி, போலீஸ்ல இருந்து எங்களைக் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டு, ‘இனிமே வீச்சரிவா, வாளு, திருகுக்கத்தி செஞ்சா, ஆயுதத் தடைச் சட்டத்துல நடவடிக்கை எடுப்போம்’னு சொன்னாங்க. ‘செய்யமாட்டோம்’னு எழுதிக் குடுத்துட்டு வந்துட்டோம். பெரும்பாலும் யாரும் செய்யிறதில்லை. எங்களுக்கு வெறகு வெட்டுற அருவாதான் மெயினு. ஆனா ஒரு சிலர் மட்டும் விடாம வீச்சரிவா செஞ்சிருக்காங்க. டிஎஸ்பி வந்து எல்லாப் பட்டறையையும் ஆய்வு பண்ணினார். ஒரு பட்டறையில மட்டும் வீச்சரிவா இருந்திருக்கு.
வீச்சரிவாளுக்கு தடை போட்டதுல எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதையெல்லாம் விட்டு பல வருஷமாச்சு. ஆனா ஒன்னரை அடிக்கு மேல அரிவாள் செய்யணும்னா போலீஸ்ல பர்மிஷன் வாங்கச் சொல்றாங்க. மாசத்துல ரெண்டு மூணு கோவில் அருவா ஆர்டர் வரும். 18 அடி வரைக்கும் செய்ய வேண்டியிருக்கும். அதுதான் பாதிப்பை உருவாக்கியிருக்கு’’ என்கிறார் நான்கு தலைமுறையாக அரிவாள் செய்துவரும் சந்திரசேகர்.
‘‘கொலை செய்யணும்னு எங்ககிட்ட யாரும் அருவா அடிச்சுக் கேக்குறதில்லை. ‘தோப்புல குடியிருக்கேன், பாதுகாப்புக்கு வேணும்’னு கேப்பாங்க. ‘கோயிலுக்கு ஆடுவெட்ட வேணும்’னு கேப்பாங்க. பின்னாடி அவங்க கொலை கேஸ்னு மாட்டுனா, நாங்க கோர்ட்டுக்கு அலையணும். ‘செஞ்சுத் தரமுடியாது’ன்னு சொன்னா, சில சமயம் ரவுடிங்க ‘போட்டுத் தள்ளிருவோம்’னு நேரடியாவே மிரட்டுவாங்க. எல்லாப் பக்கமும் பிரச்னையா இருக்கு. எங்க பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து வளர்த்து எடுத்துக்கிட்டு வந்த தொழில், எங்களோட முடிஞ்சிடும் போலருக்கு. இனி யாரும் இதைச் செய்யத் தயாரா இல்லை’’ என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கார்த்திக்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: நாகேஸ்வரன்
கார்த்திக்