ரஜினி படத்தைப் புறக்கணித்தேன்! விஜயலட்சுமி Open Talk





தடதடத்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் கிராஸிங்கில் காத்து நின்றது போல, விஜயலட்சுமியின் கரியரில் விழுந்திருக்கிறது திடீர் கேப். ‘‘என்னாச்சு மேடம்?’’ என விசாரிக்க போன் அடித்த நம்மை, ‘‘பிரசாத் டப்பிங் ஸ்டூடியோவுக்கு வாங்க, பேசலாம்’’ என அழைத்தார்.

‘வெண்ணிலா வீடு’ படத்துக்காக திருத்தமாக தமிழ் பேசிக்கொண்டிருந்தவரை பிரேக்கில் சந்தித்தோம். கழுத்தில், காதில் எதுவும் அணியாத சிம்பிள் அழகில் ஈர்த்தார்.
‘‘ஏன் இந்த கேப் என்றுதானே கேட்டீங்க? சொல்றேன். இது தானா அமைஞ்சதல்ல... நானா அமைச்சிக்கிட்டது. பணம் சம்பாதிக்கிறதுக்காக நான் சினிமாவுக்கு வரல. அந்த அவசியமும் எனக்கு இல்ல. படம் பண்ணினா அட்லீஸ்ட் ஆயிரம் பேராவது என்னோட நடிப்பைப் பாராட்டணும். ஆனா, நான் கேட்ட கதைகள் எனக்கே பிடிக்காதப்போ, மத்தவங்க எப்படி ரசிப்பாங்க? அதான் வந்த வாய்ப்புகளுக்கெல்லாம் ‘நோ’ சொல்லிட்டேன். ‘ரெண்டாவது படம்’ படத்தில் கமிட் ஆன சமயத்தில் ‘வெண்ணிலா வீடு’ கதை கேட்டேன். என் கரியரில் மறக்க முடியாத ஒரு படமா இருக்கும் என்கிற நம்பிக்கை, கதை கேட்ட நொடியிலேயே வந்துடுச்சு. பாரதிராஜா சாரோட அசிஸ்டென்ட் வெற்றிமகாலிங்கம்தான் இயக்குனர். மிர்ச்சி செந்தில் ஹீரோ.



ராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு குடியேறும் ஒரு இளம் தம்பதிக்கு, பக்கத்து வீட்டுடன் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பால் வரும் பிரச்னைகளும் அதன் அடுத்தடுத்த கட்டங்களும்தான் கதை. இதில டீச்சர் டிரெய்னிங் படிக்கிற வெண்ணிலாங்கிற கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். படத்தில் எனக்கு ஒன்றரை வயசில் ஒரு குழந்தைகூட இருக்கு. இது மறக்க முடியாத அனுபவம். இப்போ படங்கள் புதுப்புது கான்செப்ட்டோட வருது. அந்த வகையில் இதுவும் யதார்த்தம் மாறாத படமா இருக்கும்.’’

‘‘அதுக்குள்ள ஏங்க அம்மாவா எல்லாம் நடிக்கிறீங்க?’’
‘‘குழந்தைக்கு அம்மாவா நடிக்கிறதில என்ன இருக்கு? கதைக்குத் தேவைன்னா பத்து வயசு குழந்தைக்கும் தாயா நடிக்கத் தயார். ஹீரோவோட நாலு டூயட் ஆடுறதோட திருப்திப்பட்டுட்டா, நடிக்கிறதுக்கு சந்தர்ப்பமே இல்லாம போயிடும். சவாலான கேரக்டர்களை பண்ணும்போதுதான் நம்ம திறமையை வெளிப்படுத்த முடியும். இன்னும் கூட வரலாற்றுக் கதையிலும், சுதந்திரப் போராட்ட வீராங்கனை கேரக்டரிலும் நடிக்கணும்னு ஆசையெல்லாம் இருக்கு.’’

‘‘ ‘சென்னை 28’ டீம், ஜெய்னு நிறைய நட்பு வட்டம் இருந்தும் அவங்களோட படங்கள்ல கூட நீங்க இல்லையே?’’
‘‘அதுக்கு என்ன பண்ண முடியும்? நான் யாரோட முதுகிலும் ஏறி சவாரி செய்ய நினைக்கல. அப்படி ஒரு வாய்ப்பும் எனக்கு தேவையில்லை. அப்பா அகத்தியன் இயக்குனரா இருந்தும்கூட சினிமாவில் அவரோட சிபாரிசோ, உதவியோ கேட்டதில்ல.’’

‘‘இப்ப உங்களோட டீப் ஃபிரண்ட் யாரு?’’
‘‘நான் எல்லோருடனும் குளோஸா பழகுவேன். ஆனா, அதை தப்பான கண்ணோட்டத்தோட பார்க்கிறதுதான் தப்பு. ஆரம்பத்தில் ஜெய்யோட இணைச்சி கிசுகிசு வந்திச்சி. அப்புறம் கிருஷ்ணாவோட சேர்த்து கிசுகிசு. எங்களுக்கு நாலு வயசுல குழந்தை இருக்குன்னுகூட எழுதினாங்க. போன வாரம்கூட ஒரு ரிப்போர்ட்டர் போன் பண்ணி, ஒரு பெரிய இயக்குனரோட மகன் பேரைச் சொல்லி, அந்த நடிகரைத் திருட்டு கல்யாணம் பண்ணிட்டீங்களாமேன்னு கேட்டார். உண்மையை சொல்றேங்க. எனக்கு இன்னும் ஒரு தடவைகூட கல்யாணம் நடக்கல...’’



‘‘ ‘கோச்சடையானி’ல் இருக்கீங்களா?’’
‘‘ ‘நாயகன்’ கமல் சார் மாதிரி, ‘தெரியலயேப்பா...’ன்னு தான் இதுக்கு பதில் சொல்லணும். ‘அஞ்சாதே’ முடிச்ச கையோட, ரஜினி சாரோட நடிக்க வந்த வாய்ப்பு அது. புதுசா காதலில் விழுந்தவங்க சாப்பாடு, தூக்கம் இல்லாம இருப்பாங்களே... அந்த மாதிரி ஃபீல்தான் அப்ப எனக்குள்ள! ரஜினி சாருக்கு ஜோடியான்னு என்னை நானே கிள்ளிப் பார்த்து சந்தோஷப்பட்டேன். ஒரு வாரம் ரஜினி சாரோட நடிச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ளே போறதுக்கே பயங்கர செக்கப், ஏகப்பட்ட செக்யூரிட்டின்னு இருந்தப்ப, நான் ரஜினி சாருக்கு பக்கத்தில் நின்னு நடிச்சுக்கிட்டு இருந்தேன்.

அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல... அழைப்பே இல்ல. சமீபத்தில்தான் ‘டப்பிங் பேசணும்... வாங்க’ன்னு கூப்பிட்டாங்க. எனக்கு அந்தப் படத்தால சில வருத்தங்கள் இருக்கறதால ‘நான் வரமுடியாது’ன்னு சொல்லிட்டேன். படத்தில நான் வருவேனா, மாட்டேனான்னுகூட தெரியல... பார்ப்போம்!’’
- அமலன்