‘‘பொதுவா, காதல் நம்மை வசீகரிக்கும். அந்தப் பேரலையில் பாதம் தொடாதவர்களைப் பார்ப்பதே அரிது. என்றைக்கும் வாழும் காதலை மேலும் சொல்கிற படம்தான், ‘வாராயோ வெண்ணிலாவே’. ஆனால், அது சராசரியா நீங்க பார்க்கிற ரகம் இல்லை. நம்ம ஜெமினி சார் ‘மிஸ்ஸியம்மா’வுக்காக வாயசைத்த வரிகள்தான் இவை. ஒன்றிரண்டு வரிகளில் காதல் ஏக்கத்தைச் சொல்லும். திறமைமிக்க கவிஞர்கள் இன்னும்கூட தவிக்கிறது காதலைச் சொல்லத்தான். எல்லாமே பழசான இந்த உலகத்திலே காதல் மட்டும்தான் தன்னை புதுப்பித்துக் கொண்டே வருகிறது. என் படமும் அதில் ஒரு வகை!’’
- காதல் குழைத்துப் பேசுகிறார் டைரக்டர் சசிதரன். ‘சென்னை 28’க்கு திரைக்கதை, வசனம் தீட்டியவர்.
‘‘ ‘அட்டக்கத்தி’க்குப் பிறகு எல்லோரும் வரிசையில் நின்றபோது, தினேஷ் தேர்ந்தெடுத்தது உங்கள் கதையை... எப்படி?’’
‘‘அப்படி ஒரு மாயம் இந்தக் கதையில் இருக்கு. நிச்சயமா இதில் ‘அட்டக்கத்தி’யின் சாயல் இருக்காது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வின் ரொமான்ஸ் ஃபீல் இருக்கலாம். தினேஷ் அருமையான நடிகர். ஒரு படத்தோட வெளிச்சத்திலே அவருக்குக் கிடைச்சது பெரிய இடம். இன்னும் கிடைக்கும் என்பதற்கான அச்சாரம்தான் இந்தத் தொடக்கம். அது என்ன கணக்கோ தெரியவில்லை, இந்தப் படத்தில் தினேஷ்தான் முதலில் கவனம் கவர்கிறார். அதற்கான முழுத்தகுதியும் அவருக்கு இருக்கிறது. அசல் காதல் படத்திற்கான அத்தனை விஷயங்களும் இதில் இருக்கிறது. இதில் கல்லூரியும் வருகிறது. ஆனால் அதுவே முழுப்பகுதியையும் பெறவில்லை.’’

‘‘ ‘ரொம்ப’ சொல்லப்பட்டுட்ட காதலில் இன்னும் என்ன புதுசா..?’’
‘‘காதல் மாதிரி மனசை சுத்தப்படுத்துறது எதுவும் கிடையாது. சுயநலமில்லாமல் நம்முடைய மொத்த சிந்தனையும், ஒரு பெண்ணின் நலம் பற்றி மட்டுமானதாகத்தான் இருக்கும். வேறு எந்த உணர்ச்சியிலும் வராத தன்மை இது. கனவின் தீராத பாதைகளில், காலத்தின் முடியாத பயணங்களைக் கடந்து காதல்தான் முன்னேறிக்கிட்டே இருக்கு. எங்க தாத்தா பார்த்த காதலும், எங்க அப்பா கண்ட காதலும், இன்னிக்கு நான் பார்த்த காதலும் வேறு வேறல்ல... ஆனால், உணர்வதில் நிச்சயம் வேறுபாடானது. அப்படி, சில விஷயங்களை இளைஞர்களுக்குக் காட்டியிருக்கோம். என் சொந்த வாழ்க்கையில் யாராலும் தீர்மானிக்க முடியாத... சொன்னாலும் நம்ப முடியாத... ஒரு விஷயம் நடந்தது. அதையும் கேரக்டரில் சொல்லியிருக்கேன். படிப்பு புரியாது, வாழ்க்கை தெரியாது, நடப்பு விளங்காது... ஆனால் காதல் வராமல் யாருக்கும் வாழ்க்கை இருந்ததில்லை. அதையும் சொல்லியிருக்கேன். ‘சென்னை 28’ல் ஒரு புது ஏரியா... இருந்ததா, இல்லையா? இதில் காதல் அப்படி இருக்கும்.’’
‘‘ஹரிப்பிரியா எப்படி இருந்தாங்க?’’
‘‘ ‘முரண்’ படத்தில் ஏனோ அவங்க கவனம் தொடலை. எனக்கு அது ஆச்சரியம். தினேஷுக்கு சரியான ஜோடி. ரெண்டு பேரும் கேமராவுக்கு முன்னாடி நின்னு பார்க்கும்பொழுது தீ பத்திக்கிச்சு. சும்மாவே தினேஷுக்கு அலை பாய்கிற கண்கள். இதில் காதல் பாய்ந்து கலகலப்பு ஆக்கிவிட்டது. இந்தப் படத்தில் இரண்டு பேரின் காதலில் பெரிய கவர்ச்சி...’’

‘‘மீண்டும் கார்த்திக் ராஜாவை கொண்டு வந்திருக்கீங்க..?’’
‘‘இந்தப் படத்தில் தினேஷ், கதை, இசைன்னு மூணு இடம் பெரிய அளவில் இருக்கு. இசை கனிவாகவும், தெளிவாகவும், மனதைத் தொடுகிற மாதிரியும் இருக்க வேண்டிய படம் இது. எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது கார்த்திக் ராஜாதான். உலகத்துக்கே புரியாத விஷயம், இன்னும் அவருக்கான இடத்தை அவர் ஏன் அடையவில்லை என்பது தான். அவரை அன்பாக இசையமைக்க அழைத்தோம். எங்க எதிர்பார்ப்பை அருமையாக செய்திருக்கார். மிகவும் தன்மையான பாடல்களுக்கு முழுக்க அவரே பொறுப்பு. புதிதான கதைக்கு புதிய இசையை இட்டு நிரப்பியிருக்கார் கார்த்திக். புலிக்குப் பிறந்தது புலிதான்.’’
- நா.கதிர்வேலன்