என் பர்சனல் எனக்கு மட்டும்தான்! : சித்தார்த் டென்ஷன்





சித்தார்த்துடன் பேசுவது சுவாரஸ்யம் தரும் அனுபவம். இந்திய சினிமாவின் நல்ல அம்சங்களோடு எப்போதும் கரம் கோர்க்கத் துடிக்கும் அனுபவத் தேர்ச்சி. எப்படி இருக்கிறார் சித்தார்த்?

‘‘பேசலாமா?’’ எனக் கேட்டால், ‘‘வாருங்கள்’’ என அழைக்கிறது பிரைவேட் நம்பர் குரல். முன்நெற்றியில் வந்து விழும் முடியைக் கோதி மேலே விட்டபடி வந்து அமர்கிறார் சித்தார்த். விரியத் தொடங்கியது உரையாடல்...
‘‘ஆச்சர்யம், நீங்கள் சுந்தர்.சியோடு இணைந்திருப்பது...’’

‘‘எனக்கு சுந்தர்.சி படங்கள் ரொம்பப் பிடிக்கும். மனசை லேசாக்குகிற வித்தையை நானே உணர்ந்திருக்கேன். எப்போதுமே சீரியஸா இருக்கிறது இதயத்திற்கும் நல்லதில்ல. நான் என்னை ஆரம்பத்தில் ஒரு நடிகனா பார்த்ததே இல்லைங்கிறதுதான் நிஜம். இப்பவரைக்கும் என் தகுதி, நல்ல ரசிகன் என்பதில்தான் போய் முடியும். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ வழக்கமான காமெடி கிடையாது. ஃபீல் குட் மூவின்னு அழகான வார்த்தை இருக்கு... அதுதான் சரியாக இருக்கும். எனக்கு ‘கலகலப்பு’ ரொம்பப் பிடிச்சது. திடீரென்று சுந்தர் சாரைப் பார்த்தேன். ‘சார் உங்க படத்தில் நடிக்கணும்’னு தமாஷா சொன்னேன். ‘என்ன தலைவா, கலாய்க்கிறீங்களா?’ன்னு கேட்டார். நாலைந்து நாட்கள் போயிருக்கும். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’வை கமிட் பண்ணிக் கொடுத்தார். ரொம்ப இஷ்டப்பட்டு நடிச்சேன்.



கூடவே, ஹன்சிகா மாதிரி பப்ளியான பொண்ணு. எங்க ரெண்டு பேருக்கும் அழகான ரொமான்டிக் சைடு படத்தில் இருக்கு. வலுக்கட்டாயமா கிச்சுகிச்சு மூட்டுற படம் கிடையாது. எங்க ரெண்டு பேருக்கும் இடையில் காதல் டாக்டர் மாதிரி ஒருத்தர் வருவார். அவர்தான் சந்தானம். ரொம்பவே அருமையான நபர் சந்தானம். கடைக்கோடி ரசிகனையும் சிரிக்க வைக்கிற இத்தனை ஜனரஞ்சகமான நகைச்சுவை நடிப்பு பெரிய விஷயமில்லைன்னு யாரும் சொன்னால் நம்பாதீங்க. ஒவ்வொண்ணுக்கும் தரவேண்டிய மரியாதையையும், தனி இடத்தையும் ஒதுக்கிட்டோம்னா சுகாதாரமான சூழல் வந்துரும். நகைச்சுவையை ஒதுக்கி வச்சுக்கிட்டே இருந்தோம். இப்ப பாருங்க... வசூலில் பின்ற இடத்தில் அதுதான் இருக்கு!’’
‘‘தமிழிலேயே இருந்திருக்கலாம். இந்தி, தெலுங்குன்னு போயிருக்க வேண்டாம்னு நினைச்சு வருந்துவீர்களா?’’

‘‘என்ன பண்றது, இங்கே யாரும் அப்ப கொடுக்கலையே. காத்துக்கிட்டே இருக்க முடியாதே... அதற்குப் பிறகுதான் அங்கே போனேன். நானும் பொழைக்கணுமே! இப்பக்கூட நான் பண்ணின இந்திப் படம் 50 கோடி வசூல் பண்ணியிருக்கு. அமீர்கானோடு இருந்த நேரமெல்லாம் எனக்கு ரொம்ப முக்கியமானது. தெலுங்கில் எவ்வளவோ நல்ல படங்கள். எந்தக் கட்டத்திலும் தெய்வம் என்னை தவிக்க விடலை. இப்ப தமிழில் வந்திருக்கிறது அருமையான இடம். இனிமே விட்டுக் கொடுத்திட்டுப் போக நான் தயார் இல்லை.’’
‘‘திடீரென்று பார்த்தால் வசந்தபாலன், கார்த்திக் சுப்புராஜ் படங்களில் கமிட் ஆகியிருக்கீங்க?’’

‘‘என்னடா நம்மளை யாரும் கூப்பிட மாட்டேங்கிறாங்களேன்னு நானே ஒரு சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சேன். இப்பப் பாருங்க, எல்லோரும் என்னைக் கூப்பிடுறாங்க. இப்ப புதுசா புறப்பட்டிருக்கிற டைரக்டர்களின் மனதில் நானும் இருக்கேன். இப்ப குழப்பம் எதுவும் இல்லை. வசந்தபாலன் படம் என்னை இன்னும் ஆழமாக போகச் சொல்லும். சுப்புராஜ் ஸ்கிரிப்ட் ரொம்ப இளமையானது. எனக்குப் பிடிச்சதை செய்யும்போது - அது ரசிகர்களின் அலைவரிசையிலும் வரும்போது, சந்தோஷமா இருக்கு. தமிழ் மக்கள் என்னை நல்லா வச்சிருக்காங்க. ‘உதயம்’ படத்தை ஓட வச்சாங்க. விட்டுட்டு ஓடின என்னைக் கூட வாழ வச்சிருக்காங்களே! நான் எதை நோக்கி உழைக்கிறேனோ, அதை அனுபவிக்கிறேன்.’’




‘‘இப்ப முன்னணியில் இருக்கிற நடிகர்கள் பெரிசா நடிப்பில் வித்தியாசம் காட்டறது இல்லையே?’’

‘‘நான் அப்படி இல்லைங்கிறதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். சிவாஜி சார், கமல் சார் போட்டு வச்ச பாதையெல்லாம் ஏன் இருக்கு? நடந்து பழக வேண்டியதுதான். அவங்க போறப்ப புதர், முட்செடிகளை வெட்டிப் போட்டுட்டுத்தானே போயிருக்காங்க. என் ரத்தம் எல்லாம் சுத்தமா இருக்கிற வரைக்கும் என் படங்கள் நல்லதா இருக்கணும்... அதுக்குன்னு ஒரு இடத்தை அடையணும்னு நினைப்பேன். ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’னு வரும்போது இதில் கூட சில தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும். நோ பெய்ன்... நோ கெய்ன் என்று நினைப்பவன் நான்!’’
‘‘ ‘விஸ்வரூபம்’ பிரச்னையின்போது கடுமையான கோபம் காட்டினீங்க?’’

‘‘கண்டனத்தை உரக்கத்தான் சொல்லணும். அதுவும் கமல் மாதிரியானவங்களுக்கு துன்பம் வரும்போது சத்தமே போடலாம். அப்படித்தான் செய்தேன். அது தனிப்பட்ட எனது உரிமை. படைப்பு சுதந்திரத்திற்கு பிரச்னைகள் வரும்போது எதுவும் சொல்லாமல் என்னால் இருக்க முடியலை. நாங்கள் இப்ப இருக்கிற உயரத்திற்கே அவர்தான் காரணமா இருந்திருக்கார். அவர் நெருப்பிலே எங்களை மாதிரியானவங்க குளிர் காய்ந்து விட்டு, இப்ப ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் தப்பு இல்லையா!’’
‘‘இப்ப புதுசா நடிகர்கள் வந்திருக்காங்க! உங்களைத் தொட்டவர்னு...’’



‘‘விஜய் சேதுபதி... இந்த மனுஷனை நினைச்சால் ஆச்சரியம் தாங்க முடியலை. தொடக்கத்திலேயே ஹேட்ரிக் கொடுக்கிறது கூட பெரிதில்லை. ஆனால், அந்த மூணு கேரக்டர்கள். அடடா! ‘சூது கவ்வும்’ படமெல்லாம் அறிமுக இளைஞனுக்கு சாத்தியமே இல்லை. கிரிக்கெட்ல டோனி வந்த மாதிரி வந்து சேர்ந்திட்டார். இப்ப எல்லார் கவனமும் அவர் மீதுதான். ஒவ்வொரு படத்திலும் வேற வேற நேர்த்தி. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்குது. நேர்ல பார்த்துக்கூட சொன்னேன். நல்லதைப் பத்தி நாலு வார்த்தை சொன்னால்தான் அர்த்தமாகுது. எனக்கே விஜய் சேதுபதியோட சேர்ந்து நடிக்கணும்னு ஆசையாயிருக்கு. பார்க்கலாம்.’’

‘‘எல்லாம் பேசுறீங்க... ஆனா, சமந்தாவோட இருக்கிற ரிலேஷன்ஷிப் பத்தி மட்டும் பேசமாட்டேங்கிறீங்க... ஏன்?’’
‘‘எனக்குக் காதல் இருந்தாலும், அதை ஏன் சொல்லணும்? சொல்றதா இருந்தா அது அப்பா, அம்மா ரெண்டு பேருக்கு மட்டும்தான். ஏன் எல்லோரும் அவங்க வீட்டை விட்டுட்டு வெளியே எட்டிப் பார்க்கிறாங்க... எனக்குப் புரியலை. என்னோட பர்சனல் எனக்கு மட்டும்தான். அதை பகிரவே மாட்டேன். அதில் இன்னொருத்தர் லைஃப் பாதிக்கப்படுவதை ஏன் யாருமே உணர்வதில்லை? இங்கே நீங்க கேட்ட ரிலேஷன்ஷிப் பத்தி யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்குக் கிடையாது. விளக்கம் கேட்கற உரிமையும் உங்களுக்குக் கிடையாது. இதில் கர்வம் தென்பட்டால், ஸாரி... அதுதான் உண்மை. இதைத் தெரிந்து கொண்டு யாருக்கும் எதுவும் ஆகிவிடாது. அடுத்த வேளை உணவுக்கு சோறு பொங்க முடியாமல் போய் விடாது. அரிசி விலையும் குறைந்துவிடாது. ‘உனக்கு நடிக்க வரலையே’ன்னு கூட நீங்க கேட்கலாம். நடிக்கிற சினிமா பத்தி கேட்கலாம், விமர்சனத்தில் திரி கிள்ளிப் போடலாம்... ஆனால், அப்பவும் என் சொந்த வாழ்க்கை, சொந்த வாழ்க்கைதான். யாருக்கும் அட்மிஷன் இல்லாத ஏரியா அது!’’
- நா.கதிர்வேலன்