அக்கறை : கு.அருணாசலம்




‘‘ஏம்ப்பா சுந்தர், நேத்து கூட உன்னை டாஸ்மாக் பக்கம் பார்த்தேன். சின்ன வயசு. இன்னும் நிறைய எதிர்காலம் இருக்கு. ஏம்பா இப்படி தண்ணி அடிச்சு உடம்பைக் கெடுத்துக்கறே. இதுக்குப் பழகிட்டா ஆபீஸ்ல பேரும் இல்ல கெட்டுப் போயிடும்?’’ - அக்கவுன்டன்ட் ஆறுமுகம் கேட்டார்.

‘‘சார்! நானும் தண்ணி அடிக்கக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, முடியலையே...’’ என்றான் சுந்தர்.

‘‘இதுக்கு ஒரு நல்ல வைத்தியம் இருக்கு. ஆபீஸ்ல பத்து பைசா கூட லஞ்சம் வாங்காம இருந்து பாரு... நிச்சயமா நீ டாஸ்மாக் பக்கம் போகவே மாட்டே!’’

‘‘அதேப்படி சார்! லஞ்சப்பணம் இல்லாட்டி என் சம்பளப் பணத்தில் குடிக்க மாட்டேனா?’’
‘‘சொன்னதை செஞ்சுதான் பாரேன்... அப்புறம் பேசு’’ என்று நகர்ந்தார் ஆறுமுகம்.

ஒரே மாதத்தில் சுந்தரின் முகத்தில் ஏக தெளிவு. உற்சாகமாக ஆறுமுகம் சீட்டுக்கு வந்தான்.
‘‘இந்த ஒரு மாசமும் எனக்கு குடிக்கவே தோணலை. எப்படி சார் இது?’’

‘‘சுந்தர், எல்லா பணமும் ஒண்ணு இல்ல... சுலபமா வர்ற பணம்தான் கண்டபடி செலவு பண்ணவும் தண்ணி அடிக்கவும் சொல்லுது! ஆனா, நம் உழைப்புக்குக் கிடைக்கிற சம்பளம், வீட்டுல பொண்டாட்டி பிள்ளைகளுக்கு கொடுக்கணும்னு ஒரு அக்கறையை கொடுக்கும். இது என் வாழ்நாள் அனுபவம்’’ என்றார் ஆறுமுகம்.