கவுன்சிலிங்கில் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?





பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நடக்கவுள்ளது. 2.35 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனதில், 1.89 லட்சம் பேர் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார்கள். ‘‘கவுன்சிலிங் ஏற்பாடுகள் துரிதமாகவும், சிறப்பாகவும் நடந்து வருகின்றன. மாணவர்களும், பெற்றோரும் எவ்வித பதற்றமுமின்றி, பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் அரசின் பரிசீலனையில் இருப்பதால், மொத்த இடங்கள் பற்றிய நிலவரம் ஜூன் 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்’’ என்கிறார் பொறியியல் கல்லூரி சேர்க்கைப்பிரிவு செயலாளர் ரேமண்ட் உத்தரியராஜ்.  
 
‘‘கவுன்சிலிங் கடிதம் வந்துவிட்டாலே மாணவரும், பெற்றோரும் மிகவும் பதற்றமாகிவிடுகிறார்கள். கவுன்சிலிங் வளாகத்தில் நிறைந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தவுடன் அந்தப் பதற்றம் இரட்டிப்பாகி விடும். கல்லூரியைத் தேர்வுசெய்து, சேர்க்கை உத்தரவைப் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே செல்வது வரை அந்த பதற்றம் நீடிக்கும். கவுன்சிலிங் நடைமுறைகள் மிகவும் எளிமையானவை. லட்சக்கணக்கான இடங்கள் இருப்பதால் எல்லோருக்கும் சேர்க்கை நிச்சயம். கடந்த ஆண்டு 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. அதனால் பதற்றம் தேவையில்லை’’ என்கிறார் கல்வியாளர் வசந்தி.

கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால் டிக்கெட், முதல் தலைமுறை பட்டதாரி மாணவராக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இலங்கைத் தமிழ் அகதியாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ்... அனைத்துக்கும் அசல் பிரதிகளை கவுன்சிலிங் அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்த்ததும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அரங்குக்குள் மாணவரோடு பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். மாணவரோடு செல்பவர் ஓரளவுக்கு விபரம் தெரிந்தவராக இருப்பது நல்லது’’ என்கிறார் வசந்தி.



‘‘கவுன்சிலிங் செல்வதற்கு முன்பாக 5 கல்லூரிகளையும், 5 படிப்பு களையும் வரிசைப் படுத்தி ஒரு விருப்பப் பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள். கவுன்சிலிங் அரங்கில் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கமுடியும். நீங்கள் விரும்பிய கல்லூரியோ, படிப்போ கிடைக்காத பட்சத்தில், உடனடியாக வேறொன்றைத் தேர்வு செய்தாக வேண்டும்.

கவுன்சிலிங் வளாகத்திற்கு வந்தபிறகு வெளியாட்கள் சொல்லும் செய்திகளை வைத்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாதீர்கள். தேவையற்ற குழப்பத்தை உருவாக்கிவிடும். கல்லூரி இட நிலவரங்கள் ஒருநாளைக்கு 8 முறை அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu   என்ற இணையதளத்தில் அப்டேட் செய்யப்படும். கவுன்சிலிங் நடக்கும் நாட்களில் ஒவ்வொரு பேட்ச் முடிந்த பிறகும் அப்டேட் ஆகும். எனவே இணைய வசதியுள்ளவர்கள் அதை ஃபாலோ செய்யலாம். கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின்போது, எந்த கட்-ஆஃப்புக்கு எந்த கல்லூரி கிடைத்தது, எந்த பாடப்பிரிவு கிடைத்தது என்ற விவரமும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உத்தேசமாக எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.



கவுன்சிலிங்கிற்கு 2 மணி நேரம் முன்னதாக சென்றுவிடுவது நல்லது. சென்றதும், கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில் உள்ள வங்கி கவுண்டரில் உங்களுக்கான அழைப்புக் கடிதத்தைக் காட்டி, எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் 1000 ரூபாயும், இதர பிரிவு மாணவர்கள் 5,000 ரூபாயும் கட்டி கவுன்சிலிங் படிவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தொகையை டி.டியாகவும் கொடுக்கலாம். இந்த கவுன்சிலிங் படிவத்தைப் பெற்றவர்கள் மட்டுமே கவுன்சிலிங் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தத்தொகை உங்கள் கல்விக்கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும்.  உங்கள் கட்-ஆஃப் தன்மைக்கேற்ப அந்த கவுன்சிலிங் படிவத்தில் ஒரு எண் இருக்கும். அந்த எண் அடிப்படையில்தான் கவுன்சிலிங் அரங்கில் முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்கிறார் கல்வியாளர் வசுதா பிரகாஷ்.

‘‘பல மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் பெற்றிருந்தால், கணிதம், இயற்பியல் அல்லது நான்காவது ஆப்ஷனல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை தீர்மானிக்கப்படும். அதிலும் குழப்பம் என்றால் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் துளியளவும் குழப்பம் நேர வாய்ப்பில்லை. பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு ‘டிஸ்பிளே ஹால்’ அமைக்கப்பட்டுள்ளது. அதில் உடனுக்குடன் காலியிட நிலவரம் வெளியிடப்படுகிறது. தங்களுக்கான நேரத்துக்கு முன்பு வந்தவர்கள் அந்த அரங்கத்திற்குச் சென்று அமர்ந்து, காலியிட நிலவரங்களை கவனிக்கலாம். சரியான நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.

உள்ளே நுழைந்ததும் முதலில், கவுன்சிலிங் விளக்க அறை. கவுன்சிலிங் நடைமுறைகள் இரு பெரிய திரைகள் மூலம் விளக்கப்படும். சான்றிதழ்களை எந்த வரிசையில் எடுத்துவர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். அதன்படி அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அங்கிருந்து, சான்றிதழ் சரிபார்க்கும் அறைக்கு மாணவர் அனுப்பப்படுவார். நவீன கருவிகள் மூலம் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படும். சரிபார்ப்பவர் கேட்கும் சந்தேகங்களுக்கு பதற்றமின்றி பதில் அளிக்கவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், மாணவர்கள் கவுன்சிலிங் அறைக்குள் அனுப்பப்படுவார்கள். கவுன்சிலிங் அறை தவிர மற்ற எல்லா அறைகளிலுமே பெரிய திரைகள் மூலம் காலியிட நிலவரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதிலும் சற்று கவனம் வைக்கலாம். கவுன்சிலிங் அறையில் 40க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இருக்கும். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு உதவியாளரும் இருப்பார். நீங்கள் விரும்புகிற கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுவார்’’ என்கிறார் வசுதா பிரகாஷ்.

‘‘கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்து முடித்ததும், மாணவர் மட்டும் மேல்தளத்தில் உள்ள அறைக்குச் சென்று ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடிதத்தில், தேர்வுசெய்த கல்லூரி, பாடப்பிரிவின் பெயர் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவேண்டும். ஒருமுறை தேர்வுக்கடிதம் பெற்ற பிறகு எதையும் மாற்ற முடியாது. எதிர்பாராத காரணங்களால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாதவர்கள் வேறொரு நாளில் பங்கேற்கலாம். ஆனால், அந்த நேரத்தில் உள்ள காலியிடங்களில் இருந்தே அவர்கள் தேர்வு செய்ய முடியும்...’’ என்கிறார் வசந்தி.

கல்லூரி, படிப்பு இரண்டையும் தேர்வு செய்தாயிற்று. அடுத்தது, பணம்... வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது எப்படி? அடுத்த வாரம் பார்ப்போம்.
- வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்


கவுன்சிலிங் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒரு ஹெல்ப் டெஸ்க்கை அமைத்திருக்கிறது. 044-2358044, 22358045, 22358265, 22358266, 22358267, 22358268 ஆகிய எண்களில் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். அல்லது tneaenq@annauniv.edu என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.