நீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையிலேயே இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் என்பது எல்லாம் எனக்குத் தெரியும்.
பாபா மொழி
குல்கர்னி ஆர்ப்பரித்ததைக் கேட்டதும் எல்லோரும் மௌனமானார்கள். யாரும் பேசவில்லை.
குல்கர்னி வெற்றிப் புன்னகையுடன் மீண்டும் கேட்டார்... ‘‘என்னப்பா? யாராலும் தூக்க முடியாத இந்தக் கல்லை சாயி தூக்கினால் அதிசயம். நான் தூக்கினால் அதிசயமில்லையா? இதில் என்ன வெவ்வேறு அபிப்ராயம்? கபட நாடகம் போடுகிறீர்கள்? சொல்லுங்கப்பா... இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதாக இருந்தால் நான் தூக்குகிறேன். என்ன, சொல்லுங்கள் வாயைத் திறந்து...’’
‘‘உங்கள் நிபந்தனைக்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். போகட்டும்... நீங்கள் கல்லைத் தூக்காவிட்டாலும் பரவாயில்லை.’’
‘‘பார்த்தீர்களா? அந்த பக்கீரை விரட்ட இங்கு யாருக்கும் தைரியமில்லை... சரி அந்த வேலையை நான்தான் செய்யணும் போலிருக்கிறது’’ என்று தன் குடுமியை முடிந்துகொண்டு செல்ல ஆரம்பித்தார் குல்கர்னி.
‘‘நில்லுங்கள்...’’ - கர்ஜனைக் குரலைக் கேட்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றார் குல்கர்னி.
‘‘யார் நீ?’’
‘‘நான் தேவிதாஸ்...’’
‘‘சொல்! நீ என்னுடைய நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறாயா? நான் இந்தக் கல்லைத் தூக்கினால், அந்த சாயியை கழுத்தைப் பிடித்து இங்கிருந்து வெளியில் விரட்டணும். சொல்...’’
‘‘குல்கர்னி... அதற்கு நான் தயார். நீ கல்லைத் தூக்கினால் நான் சாயியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை...’’
‘‘என்ன அது?’’
‘‘நீ கல்லைத் தூக்கினால் சாயி ஷீரடியை விட்டுப் போவார். ஆனால், நீ தூக்கவில்லை என்றால்?’’
‘‘நான் தூக்குவேன்.’’
‘‘தூக்கவில்லை என்றால்?’’
‘‘சரி, என்ன செய்யணும்?’’
‘‘சாயி காலில் விழுந்து அவருடைய சிஷ்யனாகணும். இதற்கு சம்மதமா?’’
‘‘சரி... சரி... சம்மதிக்கிறேன். அவர் காலில் விழுந்து தேஜோமயமான முகத்தைக் கிட்ட இருந்து தரிசிக்க நான் தயார். ஆனால் அவருக்கு சிஷ்யனாக மாட்டேன்.’’
‘‘சரி, வாருங்கள் கிட்டே... தூக்குங்கள் அந்த உருண்டையான, பலம் வாய்ந்த கல்லை’’ என்றார் தேவிதாஸ்.
‘‘என்ன பிரமாதம்... சமையற்காரி வெண்ணெய் உருண்டையைப் பாத்திரத்தில் வீசி எறிவதுபோல, நான் இந்தக் கல்லைத் தூக்கி வீசுகிறேன் பார். என்ன பெரிய வித்தை? நான் தினமும் ஆயுர்வேத புஷ்டி லேகியம் சாப்பிடுபவனடா, படவா. அதன் உபயோகம் இப்பொழுது தெரியும்டா... இந்த வைத்தியனின் சக்தியைப் பாருங்கடா...’’
உருண்டைக் கல்லை இரண்டு கைகளாலும் தடவிக் கொடுத்தான். ‘‘இப்பொழுது தூக்குகிறேன், பாருங்கடா...’’
‘‘முதலில் தூக்குங்கள். ஜெய் பஜரங்கபலி’’ - சிரித்துக்கொண்டே இளைஞர்கள் கேலி செய்தார்கள்.

பயில்வான்கள் உடற்பயிற்சி செய்வதற்காக இருந்த உருண்டையான அந்தப் பெரிய கல்லை எவ்வளவு ‘தம்’ பிடித்தும் இம்மியும் அசைக்க முடியவில்லை. அது இருந்த இடத்திலேயே இருந்தது.
‘‘வைத்தியரே, இன்னும் பலத்தைக் கூட்டுங்கள்...’’
‘‘என்ன... கல் கொஞ்சங்கூட அசையவில்லையே...’’
‘‘மூர்க்கப்பசங்களா? கல் நகராமல் சண்டித்தனம் செய்கிறது... இப்பொழுது பாருங்கள். அதை அப்படியே தூக்கித் தோளில் வைத்து, சாயியிடம் ஓடிப் போய் அவருடைய தலையிலேயே போடுகிறேன். வேலை முடிந்துவிடும்...’’
‘‘தூக்குங்கள் முதலில்...’’
குல்கர்னி கல்லைத் தூக்க மறுபடியும் பிரயத்தனம் செய்தார். எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். குல்கர்னியின் நெற்றி, வியர்வையால் வழிந்தது. கை, கால்கள் வெடவெடவென்று நடுங்கின. பல்லைக் கடித்து, கல்லை நகர்த்தப் பார்த்தார். ஒரு உபயோகமும் இல்லை. கல் அசையவில்லை. பலமுறை முயன்றும் கல்லை நகர்த்தக்கூட முடியாததால், வெறுப்புடன் நகர்ந்தார்.
‘‘என்ன ஆயிற்று?’’
‘‘போங்கடா படவா... அந்தக் கல்லுக்கு என்ன ஆச்சோ, தெரியவில்லையே? கபட சந்நியாசி சாயி ஏதாவது மந்திரம் கிந்திரம் போட்டுட்டானா? நான் தினமும் புஷ்டி லேகியம் சாப்பிட்டும் என்னால் அசைக்கக்கூட முடியலையே. நாயைப் போல வெறும் காய்ந்த ரொட்டித் துண்டைச் சாப்பிடும் பிச்சைக்கார சாயி, எப்படி சர்வ சாதாரணமாக இதைத் தூக்கினான்?’’ என்ற குல்கர்னி வானத்தைப் பார்த்து, ‘‘பிரபோ! இதென்ன நியாயம்... இதில் ஏதோ சூதுவாது இருக்கிறது. இதில் நான் மாட்டிக்கொண்டு பலியாக மாட்டேன். சிவ சிவா... நான் போகிறேன்...’’
‘‘வைத்தியரே...’’ - தேவிதாஸ் கூப்பிட்டார்.
‘‘இன்னும் என்னப்பா..?’’
‘‘நீங்கள் கல்லைத் தூக்கவில்லையென்றால் சாயியின் காலில் விழுவதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள்...’’
‘‘அதை நீ நம்பிவிட்டாயா? வயதில் பெரியவனான நான், இளைஞனான அவன் காலில் விழ வேண்டுமா? என்னை தர்மபிரஷ்டத்திற்கு ஆளாக்கப் பார்க்கிறாயா தேவிதாஸ்? உனக்கு புத்தி தடுமாறிவிட்டதா? முதலில் நீ இங்கிருந்து சமத்தாகக் கிளம்பு. இல்லாவிட்டால் அடிக்கிற அடியில் எலும்பெல்லாம் உடையும். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’’
‘‘கல்லைத் தூக்கும்போதே உங்கள் பராக்கிரமத்தைப் பார்த்தோமே!’’ - யாரோ கேலி செய்ததும், எல்லோரும் சிரித்தார்கள்.
‘‘வைத்தியரே...’’
‘‘விடப்பா என்னை. தேவிதாஸா... நான் கண்டிப்பாகச் சொல்கிறேன், கேள். அதை மறந்துவிடு. இந்த உடலில் உயிர் உள்ளவரை, நான் அந்தப் பைத்தியக்கார முஸ்லிம் பக்கீரின் காலில் விழமாட்டேன். கொஞ்சம் பொறு, அவனே வந்து என் காலைப் பிடிப்பான். அவனைப் போல நீயும் ஒரு கபடக்காரன், அதனால்தான் அவன் கூடவே இருக்கிறாய்.’’
‘‘நானும் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள்... ஒரு நாள் நீங்களும் சாயியின் காலை நிச்சயமாகப் பிடிப்பீர்கள். என்னுடைய வாக்கு என்றைக்கும் பொய்க்காது...’’ என்றார் தேவிதாஸ்.
‘‘மூர்க்கர்களின் நந்தவனத்தில் விளையாடாதே தேவிதாஸ். ரொம்பவும் புத்தி கழன்றுவிட்டால் என்னிடம் வா...’’
‘‘அதைவிட மரணமே மேல்...’’
‘‘பார்க்கலாம்...’’ என்று சொல்லி வைத்தியர் சென்றுவிட்டார்.
அவன் அவசரமாக ஓடுவதைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு பொங்கியது. தேவிதாஸும் சிரித்துக்கொண்டே, சாயி போன திசையை நோக்கிக் காலெடுத்து வைத்தார்.
மசூதியில் பலகையை சுவருடன் முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்தார் சாயி. படியேறிய தேவிதாஸ், ‘‘சாயி, நான் வரலாமா?’’ என்று கேட்டார்.
‘‘யார்... தேவிதாஸா, வா வா மேலே வா... உட்கார்.’’
அவருடைய பாதங்களில் தலை வைத்து வணங்கிவிட்டு உட்கார்ந்தார் தேவிதாஸ்.
‘‘எதற்காக என் காலில் விழுகிறாய்? நீ என்னைவிடப் பெரியவன். அல்லா உனக்கு நன்மை புரிவார்...’’
‘‘சாயி, வயதில் வேண்டுமானால் நான் பெரியவனாக இருக்கலாம். அறிவில் நீங்கள் எங்கே, நான் எங்கே? நீங்கள் சூரியன். நான் வெறுமனே அதிலிருந்து வரும் ஒளி.’’
‘‘தேவிதாஸ், நீ பணிவுடன் சொல்வதே, உயரத்தில் இருக்கிறாய் என்பதற்கு அடையாளம். ஞானத்தில் நீ பரிபூர்ணமானவன். அதனால் அடக்கம் இருக்கிறது. உன்னுடைய பணிவு, என் காலில் இல்லை, இதயத்தில் இருக்கிறது.’’
‘‘உங்களுடைய இந்த கிருபை எப்பொழுதும் இருக்கட்டும்’’ - மறுபடி தேவிதாஸ் வணங்கினார்.
‘‘குல்கர்னி என்ன சொன்னான்? நீங்கள் பந்தயம் வைத்தீர்களே, அதில் தோற்றுப் போய், உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையே?’’ - சாயி மந்தகாசமாக சிரித்துக்கொண்டே கேட்டார்.
தேவிதாஸ் ஆச்சரியமடைந்தார். சம்பவம் நடந்த இடத்தில் சாயிதான் இல்லையே, எப்படி இவருக்கு விஷயம் தெரிந்தது.
‘‘சாயீ...’’
‘‘சொல்.’’
‘‘நீங்கள்தான் அங்கு இல்லையே, எப்படி இது தெரிந்தது?’’
‘‘எனக்குக் காற்றின் வழியாகச் செய்தி வந்தது. ஷீரடியில் மட்டுமல்ல, பிற இடங்களில் என்ன நடந்தாலும் எனக்குத் தெரியவரும். சரி, விஷயத்தைச் சொல், உன் வாயால் கேட்போம்...’’
‘‘அந்த குல்கர்னி ரொம்ப திமிர் பிடித்தவன். உங்களை கன்னாபின்னாவென்று திட்டினான்.’’
‘‘தேவிதாஸ், பிறரைத் திட்டி வாழ்வதற்கென்றே சில பேர் இருக்கிறார்கள். யாராவது நல்லது செய்தால் பார்க்கப் பிடிக்காது. அவர்கள் அப்படிப் பழகிவிட்டார்கள். நிறைய துர்க்குணம் கொண்டவர்கள் புத்திசாலிகளைக் கண்டு வயிறு எரிவார்கள். தரித்திரர்கள் சிலர் பணக்காரர்களைக் கண்டு பொறாமைப்படுவார்கள். பாம்பு கீரியையும் பூனை நாயையும் ஏன் எதிரியாகப் பார்க்க வேண்டும்? சமூகத்தில் படித்தவர்கள், அறிஞர்கள் பலரும் பக்கீர் மற்றும் சாதுக்களைக் கண்டால் பகை கொள்கிறார்கள். இதனால் ஒரு பலனும் இல்லை. வைராக்கியத்தினால் இன்னும் பகைதான் வளருகிறது. வைராக்கியம் எப்பொழுதும் நன்மை செய்வதில்லை. பகை செய்பவனும், பகையை விடாமல் எதிர்கொள்பவனும் ஒருநாளும் உருப்பட்டதில்லை. மாறாக, அவர்களுடைய குடும்பமே நாசமாகிப் போகிறது. ராவணன் ராமர் மீது பகை கொண்டான். அதன் பலன் என்னவாயிற்று? சொர்க்க லோகம் போன்றிருந்த இலங்கை எரிந்து சாம்பலாயிற்று! சிசுபாலன் கிருஷ்ணனை வைரியாகப் பார்த்தான். அவனுக்கும் பயங்கர முடிவு ஏற்பட்டது. பகை என்பது ஒரு சைத்தான். அல்லாவிற்கு இது பிடிக்காது. அன்பு, சாந்தி, அகிம்சை இவைதான் கடவுளுக்குப் பிடித்தமானவை. மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கான ரகசியம் இவற்றில்தான் இருக்கிறது!’’
இதைக் கேட்டு தேவிதாஸ் மகிழ்ந்தார். அந்த மசூதியெங்கும் அமைதி. அதன் நடுவே சாயியின் மதுரமான குரல்... கேட்கவே ஆனந்தமாக இருந்தது.
‘‘தேவிதாஸ், உண்மையில் குல்கர்னி புத்திசாலி. உஷார் பேர்வழி. ஆனால் அகங்காரம் கொண்டவன். அவனுக்கு ஞானம் இருப்பதால் கர்வம் ஜாஸ்தி. பிராமண ஜாதியின் மேல் அபிமானம் கொண்டவன். தன்னை உயர்ந்தவன் என்று பாவித்து, மற்றவர்களை துச்சமாக நினைப்பவன். இப்பேர்ப்பட்டவர்களைக் காட்டிலிருக்கும் புல்லைப் பிடுங்கி, தூர எறிவது போல் செய்யணும். தான் வைத்தியன் என்கிற கர்வம் அவனுக்கு இருக்கிறது. இதனால் அவன் வேதாளமாகிவிட்டான். கொழுப்பு ஜாஸ்தியாகிவிட்டது. கவலைப்படாதே... ஒருநாள் அவன் என்னிடம் வரும்படி ஆகும்!’’
‘‘நானும் அதைத்தான் சொன்னேன். நீங்களும் உங்கள் வாயால் சொல்லிவிட்டீர்கள்’’ - தேவிதாஸ் குதூகலத்துடன் சொன்னார்.
‘‘தேவிதாஸ்... எனக்கு மட்டும் என்ன தெரியும்? அவன் சுபாவத்திலிருந்து மாறி, துர்புத்தியை விட்டொழித்தால் தானாக நல்லவனாகிவிடுவான். அப்படி நிச்சயமாக நடக்கும்.’’
‘‘இன்றைக்கு நீங்கள் நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். கேட்டுத் திருப்தியடைந்தேன்’’ என்றார் தேவிதாஸ்.
‘‘தேவிதாஸ், பகை செய்பவர்கள் செய்யட்டும். நீங்கள் அவர்கள் மேல் பகை கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் அவர்கள் மேல் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். ஒருவேளை, நீங்கள் அன்பாய் இருப்பதால் அவர்களின் பகைக்குணம் மாறி, சாந்தியடையலாம். அப்படியும் மாறவில்லையென்றால், அல்லா இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார். நீங்கள் ஈஸ்வரனைப் பாருங்கள். அவரும் உங்களைக் கவனித்துக்கொள்வார். சிரத்தை, பக்தியுடன் இறைவனை அணுக வேண்டும். அப்படிச் செய்தால் எதிர்ப்படும் இன்னல்களை விரட்டி, சங்கடத்திலிருந்து காப்பாற்றுவார். சுகமான வாழ்வைக் கொடுப்பார்.’’
‘‘இன்று உங்களுடைய அறிவுரைகளைக் கேட்டு, தன்யன் ஆனேன்!’’
‘‘தேவிதாஸ்... பகை, துவேஷம், கர்வம் முதலானவை முட்கள். அவை நம் மனதைக் குத்திக்கொண்டே இருக்கும். அன்பு, கனிவு, சிரத்தை, விசுவாசம், அகிம்சை போன்ற பல வண்ணங்கள் கொண்ட ரோஜாப்பூக்களை மனம் என்னும் தோட்டத்தில் நட்டால் அவை பூத்துக் குலுங்கும். ஈஸ்வர பக்தி என்னும் பரிமள சுகந்தத்தை அதில் கலக்கிவிட்டால் பழுதில்லாமல் ஆயுள் முழுவதும் ஆனந்தமாக வாழலாம்.’’
சாயி இப்படியே பல அரிய கருத்துகளைச் சொன்னார். தேவிதாஸ் அவற்றைக் கேட்டு மனம் குளிர்ந்தார்.
(தொடரும்...)