ஹெல்த் பிட்ஸ்





இதயத்தின் வயசைக் குறைக்கலாம்!

நமக்கு வயதாக ஆக... நம் இதயத்துக்கும் வயதாகிறது. இதயம் இயல்பை விடப் பெரிதாகி, அதன் சுவர்கள் தடிமனாகவும் இறுக்கமாகவும் ஆகிவிடுகின்றன. இதனாலேயே முதியவர்களுக்கு இதயம் செயலிழந்து மரணம் நேர்கிறது. இதைத் தவிர்த்து, இதயத்தை இளமையாக வைத்திருக்கும் ஒரு புரோட்டீனை ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எலிகளிடம் அவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். குட்டி எலிகளின் ரத்தத்தில் நிஞிதி11 என்ற புரதம் மிக அதிக அளவில் இருந்தது. வயதான எலிகளின் ரத்தத்தில் இது குறைந்து காணப்பட்டது. இந்தப் புரதத்தை தனியாகப் பிரித்தெடுத்து ஊசி மூலம் அந்த எலிகளுக்குச் செலுத்தினார்கள். சில வாரங்களிலேயே அதிசயிக்கத்தக்க மாற்றங்களை கண்டனர். சுவர்கள் மெலிந்து, தளர்ந்து, இதயமும் சுருங்கி இளமையான அதிசயம் நிகழ்ந்தது. மனிதர்களுக்கும் இப்படி ஊசி போட்டு இதயத்தை இளமையாக்க, ஆராய்ச்சி தொடர்கிறது.

கேன்சரை விரட்டுது ஏரோபிக்ஸ்!
‘‘ரெகுலராக ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்துவரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து குறைகிறது’’ என்கிறது ஒரு ஆய்வு. ‘கேன்சர் எபிடெமியாலஜி’ என்ற இதழில் இந்த ஆய்வு வெளியாகி இருக்கிறது. இந்த உடற்பயிற்சி, ஈஸ்ட்ரோஜெனை உடைத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தை நன்றாக ஆக்குகிறதாம். வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்த 391 பெண்களிடம் இந்த ஆராய்ச்சி நடந்தது. உடற்பயிற்சியின் விளைவாக, கெட்ட கொழுப்பு குறைந்து உடலும் ஸ்லிம் ஆகிறதாம். ஆனாலும், ‘‘ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்தால் புற்றுநோய் ஆபத்து குறையும் எனக் கண்டுபிடித்த முதல் ஆய்வு எங்களுடையதுதான்’’ என்கிறது இந்த டீம்.

மனநலம் கெடுக்கும் ஜுரம்!

‘ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவருக்கு ஃப்ளூ ஜுரம் தாக்கினால், பிறக்கும் குழந்தைக்கு ‘பைபோலார் டிஸார்டர்’ என்ற மனச்சிதைவு நோய் வரும் ஆபத்து நான்கு மடங்கு அதிகரிக்கிறது’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

முடியும் இதயமும்
உச்சந்தலையில் வழுக்கை ஏற்பட்டவர்களுக்கு, தலைநிறைய முடி உள்ளவர்களை விடவும் இதய நோய் தாக்கும் ஆபத்து 32 முதல் 84 சதவீதம் அதிகம் உள்ளது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஆய்வு ஒன்று இதைத் தெரிவிக்கிறது.

பசியா கடைக்குப் போகாதீங்க!
கடும் பசி வயிற்றைக் கிள்ளும்போது ஷாப்பிங் போக வேண்டாம் என்கிறது ‘ஜாமா இன்டர்னல் மெடிசன்’ இதழ் வெளியிட்டிருக்கும் ஆய்வு ஒன்று. பசி வேட்கை அவர்களை அதிக கலோரி நிறைந்த துரித உணவுகளாகப் பார்த்து வாங்கத் தூண்டுகிறதாம். பலரை பட்டினி போட்ட பிறகு ஷாப்பிங் செய்ய வைத்தும், மதிய உணவுக்குப் பிறகு ஷாப்பிங் செய்ய வருபவர்களைப் பார்த்தும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் நிபுணர்கள்.