ரயில் சாலை சுமப்பவர்கள் : அந்தர மனிதர்கள்





“முன்னெல்லாம் மாசத்துக்கு நாலஞ்சு பொணம் விழுந்தாப் பெரிசு. இன்னைக்கு பதினைஞ்சு, இருபதுன்னு விழுகுது. ராத்திரி படுக்கும்போது, ‘நாளைய பொழுதையாவது பொணமில்லாத பொழுதாக்குடா சாமி’ன்னு வேண்டிக்கிட்டுத்தான் படுக்கிறேன். ஆனாலும் விடியக்காலையில போன் வந்திருது. இருபத்தெட்டு வருஷமா இதான் நைனா வேலை. எத்தனை பாடின்னு கணக்கெல்லாம் வச்சிக்கறதில்லை. தூக்கிட்டு வந்து ஆம்புலன்ஸ்ல ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டா, அத்தோட மறந்திருவேன். எல்லாத்தையும் நினைவுல வச்சுக்கிட்டு இருந்தா ஒருநாள் பொழுது நிம்மதியா தூங்கமுடியாது...’’ - ரத்தக் கறை அப்பியிருந்த கையில் உப்புச்சோப்பைத் தேய்த்துக் கழுவியபடியே பேசுகிறார் பிரகாஷ்.

பெரம்பூரைச் சேர்ந்த பிரகாஷின் தொழில், ரயில்வே டிராக்கில் அடிபட்டு இறப்போரின் உடல்களை மீட்பது. பேசின் பிரிட்ஜ் முதல் அம்பத்தூர் ரயில்வே கேட் வரை ரயிலில் அடிபட்டு யார் இறந்தாலும், பிரகாஷுக்கு தகவல் வந்துவிடும். இரவோ, பகலோ... ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

‘‘பொறந்தது, வளந்தது எல்லாமே பெரம்பூர்லதான். ராஜீவ்காந்தி நகர்ல வீடு. அப்பா அந்தோணி சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனார். அம்மா பேரு, வேளாங்கண்ணி. நான் ஒரே பையன். வூட்டுல எப்பப் பாத்தாலும் பிரச்னை. சம்பாதிக்கிறதை எல்லாம் குடிக்கு குடுத்துட்டு தள்ளாடிக்கிட்டே வீட்டுக்கு வருவாரு அப்பா. ‘ஏய்யா, நீயும் அழிஞ்சு, குடும்பத்தையும் அழிக்கிறே’ன்னு கேட்டா அம்மாவை இழுத்துப் போட்டு அடிப்பாரு. தடுக்கற எனக்கும் அடி வுழும். தாங்க முடியாம, ‘உங்கூட வாழமுடியாதுடா சாமி’ன்னு ஒருநாளு என்னைய கையில கூட்டிக்கிட்டு தனியா வந்திருச்சு அம்மா. ஓட்டேரி சரவணா தியேட்டர் பக்கத்துல ஒரு வீட்டைப் புடிச்சுக்கிட்டு குடியிருந்தோம். அம்மா வீட்டு வேலைகளுக்குப் போவும். கொஞ்ச நாள் அப்பாகிட்டயும், கொஞ்ச நாள் அம்மாகிட்டயுமா இருந்தேன். படிக்கிற வயசு வந்தும் என்னைய பள்ளிக்கூடத்துல சேத்துவிடணுங்கிற எண்ணம் ரெண்டு பேருக்குமே வரலே.

12 வயசுல ஒரு சீட்டுக் கிளப்புல வேலைக்குச் சேந்தேன். சீட்டாட வர்றவங்களுக்கு பீடி, சிகரெட் வாங்கிக் குடுக்கணும். தினம் அஞ்சு ரூவா சம்பளம். எக்ஸ்ட்ரா ஒரு ரூவா, ரெண்டு ரூவா டிப்ஸ் கிடைக்கும். 3 வருஷம் அங்கே வேலை பாத்தேன். ‘எவ்வளவு காலத்துக்கு இந்த கருமத்துக்குள்ளயே கிடக்கிறது... ஏதாவது கவுரவமா பொழக்கணும்’னு முடிவு பண்ணி, அப்பன் வழியவே கையில எடுத்தேன். சைக்கிள் ரிக்சா.



பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனான்ட இருக்கிற ஸ்டாண்ட்ல வண்டிய கொண்டாந்து போட்டுருவேன். ஓரளவுக்கு வண்டியும், வாழ்க்கையும் ஓடுச்சு. கூட ரிக்சா ஓட்டுற ஏழுமலை அண்ணே, ரயில்வே டிராக்ல பாடி விழுந்தா போலீசுக்கு ஒத்தாசை பண்ணப் போவும். ஒருநாளு என்னையக் கூட்டிக்கிட்டுப் போச்சு. கை தனியா, கால் தனியா, ரத்தத்துல சிதறி கெடந்த பாடியை பார்த்ததும் பதறிட்டேன். ‘இனிமே இந்தப் பக்கமே வரக்கூடாது’ன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அதுவே என் வாழ்க்கையா ஆகிப்போகும்னு அப்ப தெரியல.

ஒருநாளு ஏழுமலை அண்ணனுக்கு உடம்பு முடியலே. அன்னிக்கு பாத்து ஒரு பாடி விழுந்திடுச்சு. ஸ்டாண்டுக்கு வந்த போலீஸ்காரங்க, ‘நீ வாப்பா’ன்னு என்னிய கூப்பிட்டாங்க. பெரிய மனுஷங்ககிட்ட முடியாதுன்னு சொல்ல முடியாதே. ‘நடக்கிறது நடக்கட்டும்’னு போயிட்டேன். பதினேழு, பதினெட்டு வயசு இருக்கும். பொம்பளப் புள்ள... ரயிலு வர்றது தெரியாம கிராஸ் பண்ணியிருக்கு. தலையில ஏறி, மூளை தனியாக் கிடக்கு. ஒரு பக்கம் பயம்... இன்னொரு பக்கம் கொமட்டல்... எப்பிடியோ ஒரு வழியா உடம்பை ஒண்ணு சேத்து அள்ளிட்டேன். எல்லாம் முடிஞ்சதும் அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க ஐநூறு ரூபாய் கொடுத்தாங்க. போலீஸ்ல இருந்து இருநூறு கிடைச்சுது. ஒரு மாசம் ரிச்சா ஓட்டுனாலும் இத்தனை காசை மொத்தமாப் பாக்க முடியாது. பண தைரியத்துல பொண பயம் காணாமப் போயிருச்சு. அதுக்குப்பெறவு ரிச்சா ஓட்டுறதையே விட்டுப்புட்டு இதுல முழுசா இறங்கிட்டேன்’’ - ஓலமிட்டு நகர்கிற ரயிலை வெறித்துப் பார்த்தபடி சொல¢கிறார் பிரகாஷ்.



‘‘பாவம்... பதினெட்டு, இருபது வயசுப் புள்ளைக. தானா விழுந்து தற்கொலை பண்ணிக்கிறது ஒரு ரகம். ரயில் அடிச்சு சாகுறது இன்னொரு ரகம். ஏந்தான் கண்டு
புடிச்சானுங்களோ இந்த செல்போனை. பல சாவுக்கு அதுதான் காரணமா இருக்கு. காதுல ஒயரை மாட்டிக்கிட்டு என்னதான் பேசுங்களோ... அம்மாம் பெரிய ரயிலு வர்றது கூட தெரியாத
அளவுக்கு!  

ரயில் சாவு மாதிரி ஒரு கோரம் உலகத்துலயே இல்லை. மூஞ்சி எது, முழி எதுன்னு தெரியாத அளவுக்கு சிதைஞ்சு போயிரும். ஒவ்வொரு சாவுலயும் மனுஷன் பாடம் கத்துக்கணும். இவ்வளவு சாவு விழுகுதே... கோரம் கோரமா செத்துப் போகுதுகளே... இதுக்குப் பெறகாவது இந்த புள்ளைக காதுல இருந்து போனக் கழட்டுதுகளா? எந்த சுகத்தையும் அனுபவிக்காம, பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாம.. அகாலமா போய்ச் சேந்திடுதுங்க. பொணத்தைத் தொட்டுத் தூக்கவே கஷ்டமா இருக்குய்யா...’’ - கண்கள் அரும்புகின்றன.

‘‘நம்ம பொழப்புக்கு நேரம், காலமெல்லாம் கிடையாது. போலீஸ்காரங்க எத்தனை மணிக்கு போன் பண்ணுனாலும் ஸ்ட்ரெச்சரை தூக்கிட்டுக் கிளம்பிருவோம். கூட ஏழுமலை, முனுசாமி ரெண்டு பேத்தையும் கூப்புட்டுக்குவேன். பாடி கிடக்குற இடத்துக்குப் போயி  தெரிஞ்ச முகமான்னு பாப்போம். ஏதும் அங்க அடையாளங்கள் இருக்கான்னு பாக்கணும். அடுத்து ஒவ்வொரு உடல் பாகமா எடுத்து ஸ்டெச்சர்ல வரிசவாரியா அடுக்குவோம். எந்தெந்த உறுப்பைக் காணலைன்னு தனியா எழுதிக்குவோம். எல்லாத்தையும் சேகரிச்சு அள்ளின பிறகு, பொருள் எதுவும் கிடக்கான்னு பாப்போம். இருந்தா அதையும் எடுத்து ஸ்டேஷன்ல ஒப்படைக்கனும். எல்லாம் முடிஞ்சதும் பக்கத்துல இருக்கிற ரயில்வே ஸ்டேஷனுக்கு தூக்கியாருவோம். மிட்நைட் நேரம்னா, பாடிய ஸ்டேஷனாண்டை வச்சுட்டு தூங்கிருவோம். ஃபர்ஸ்ட் டிரெயின் வரும்போது, எழுந்து, வெண்டர் பெட்டியில வச்சு பெரம்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வருவோம். போலீஸ்காரங்க தகவல்களை எழுதினபிறகு ஆம்புலன்ஸ் வரும். அதுல ஏத்தி ஜி.ஹெச்சுக்கு அனுப்பிருவோம். அதோட எங்க வேலை முடிஞ்சிரும். பாடிக்கு சொந்தக்காரங்க வந்தாங்கன்னா ஓரளவுக்கு பணம் கிடைக்கும். இல்லைன்னா போலீஸ்ல இருந்து 300 ரூவா கொடுப்பாங்க. அதை மூணு பேரும் பிரிச்சுக்குவோம்.

முன்ன மாதிரி இப்பல்லாம் பாடிய பார்க்க பயம் இல்லை. இருந்தாலும், சில முகங்களைப் பாக்கிறப்போ ஏதோ ஒரு ஜென்மத்தொடர்பு இருக்க மாதிரி தோணும். அதுலயும் இந்த வாலிபப்புள்ளைக சிதைந்து கிடக்கிறதைப் பாக்குறப்ப அழுதுருவேன். நானும் ரெண்டு புள்ளைகளைப் பெத்தவன் பாருங்க. ‘ஆயி, அப்பன் என்ன கனவோட வளத்தாகளோ... இப்பிடிக் குலைஞ்சு போயி கிடக்குதே’ன்னு உள்ளுக்குள்ள இருந்து அழுகை பீறிட்டுக்கிட்டு வரும். அந்த பாடியை தூக்கிட்டு வரும்போது, யாராவது போன்ல பேசிக்கிட்டே தண்டவாளத்தை கிராஸ் பண்ணினா, ஓடிப்போயி ஓங்கி அறையணும் போல இருக்கும். ‘தண்டவாளத்தை கடந்தபெறவு பேசினா குடிமுழுகிடுமா’ன்னு சத்தமா கேட்பேன். முகத்தைப் பாத்து, பெத்தவங்க ரெண்டு சொட்டு கண்ணீர் கூட விட முடியாது. இந்தக் கோரம் தேவையா..? - கோபமாகக் கேட்கிறார் பிரகாஷ்.

‘‘என் தொழிலு தெரிஞ்சே என்னைக் காதலிச்சா ஆரோக்கியமேரி. அத்தை மவ. பிரிஞ்சிருந்த எங்க அப்பாவையும், அம்மாவையும் ஒண்ணு சேத்து வச்சுட்டு, கல்யாணம் முடிச்சேன். ரெண்டு பொம்பளைப் புள்ளைக. அதுங்க பெரிசான பிறகு இப்போ கொஞ்சம் சங்கடமா இருக்கு. எதுக்குப்பா இந்த தொழில்னு கேக்குதுங்க. ‘பாடி எடுக்கும்போது கையில கிளவுஸாவது மாட்டிக்கப்பா’ன்னு சொல்லுதுங்க. இத்தனை வருஷமா பாடி எடுக்குறேன். யாரும் சொல்லலே. இப்போ புத்தி சொல்ல புள்ளைக வந்திருச்சுக. இரண்டு புள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுத்திடணும். அதுவரைக்கும் இந்த வாழ்க்கை இப்பிடியேதான் ஓடும்...’’
பிரகாஷின் மொபைல் அடுத்த வேலைக்கான அழைப்பை சுமந்துகொண்டு சிணுங்குகிறது.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்