நல்லூர் சிவன் கோயிலை அடைந்த ருத்ரன், விஜயலட்சுமியையும் குந்தியையும் அழைத்துக் கொண்டு நேராக குளத்துக்குச் சென்றான். மகாபாரத குந்தியின் சிலை அவர்களை வரவேற்றது. மூவரும் வணங்கினார்கள். விஜயலட்சுமிக்கு கண் ஜாடை செய்தான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக குடத்துடன் குளத்துக்குச் சென்று நீர் கொண்டு வந்தாள்.
‘‘அம்மா குழந்த... உன் கையால அபிஷேகம் செய்மா...’’ - ருத்ரனின் குரல் தழுதழுத்தது.
புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அந்த சிறுமி தலையசைத்தாள். குடத்து நீரை சொம்பில் எடுத்து மகாபாரத குந்தியைக் குளிப்பாட்ட ஆரம்பித்தாள். பால், தயிர், தேன்... என சகல பொருட்களாலும் அவளைக் குளிர்வித்தாள். பிறகு துண்டால் அவளைத் துடைத்து, அரக்கு நிற புடவையைப் போர்த்தினாள். கொண்டு சென்ற சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியம் செய்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்தாள்.
‘‘நமஸ்காரம் பண்ணும்மா...’’
செய்தாள்.
‘‘வா, போகலாம்...’’ - சொன்ன ருத்ரனை கேள்வியுடன் பார்த்தாள் விஜயலட்சுமி. அவள் பார்வையைத் தவிர்த்துவிட்டு முன்னால் நடந்தான் ருத்ரன். சிறுமியின் கையைப் பிடித்தபடி பின் தொடர்ந்த விஜயலட்சுமிக்கு குழப்பமாக இருந்தது. பூஜை இன்னும் பூர்த்தியாகவில்லையே... கடைசியில் மகாபாரத குந்தியின் சிலை சொல்லும் செய்தியை அறிய வேண்டுமே?
மூவரும் கார் அருகில் வந்தார்கள். பின்பக்க கதவைத் திறந்து சிறுமியை உள்ளே போகச் சொன்னாள். அவள் ஏறியதும் கார்க் கதவை மூடிய விஜயலட்சுமி, தன் கணவனை ஏறிட்டாள்.
‘‘என்ன விஷயம்ங்க..?’’
‘‘ஒண்ணுமில்ல...’’
‘‘இல்ல... ஏதோ இருக்கு. எதுக்கு என்கிட்டேந்து மறைக்கறீங்க..?’’
‘‘எதையும் நான் மறைக்கலை...’’
‘‘அப்புறம் ஏன் பூஜை பூர்த்தியாகறதுக்குள்ள கிளம்பச் சொன்னீங்க..?’’
ருத்ரன் அமைதியாக இருந்தான்.
‘‘சொல்லுங்க... எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம்...’’
‘‘சமாளிக்கவே முடியாது விஜயலட்சுமி...’’
‘‘என்ன சொல்றீங்க?’’
‘‘மகாபாரத குந்தியை காணும்...’’
‘‘என்னது..?’’
‘‘ஆமாம். அங்க இருக்கறது ஒரிஜினல் சிலை இல்ல. போலி. பரமேஸ்வர பெருந்தச்சன் தன் கைவரிசையைக் காட்டிட்டான்..!’’
வெறித்தபடி தன் முன்னால் எழுந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரவிதாசன்.

சங்கரும் அவனைப் போன்ற ஆறு சிறுவர்களும் விடாமல் கடப்பாரையால் மண்டபத்தை உடைத்துக் கொண்டிருந்தார்கள். அனைவருமே பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஒல்லியான உடல்வாகு. அனைவரது கண்களும் மயக்க நிலையில் இருந்தன. சாதாரண நாட்களில் தோட்டத்தில் வேலை செய்யவே சங்கர் அஞ்சுவான். கை வலிக்கிறது என அழுவான். அப்படிப்பட்டவன் எந்திரம் போல் மண்டபத்தை இடித்துக் கொண்டிருக்கிறான்...
‘‘இரவு வரை இந்த வேலையை செய்யச் சொல்லி ஃபாஸ்ட் கட்டளையிட்டிருக்கான்...’’ - சூ யென்னின் குரல் மங்கலாகக் கேட்டது. ‘‘அதனால இப்போதைக்கு ஒண்ணும் பண்ண முடியாது. மாற்று மருந்தை நைட்டுதான் தர முடியும்...’’
‘‘எந்த ‘ஸோம்பி’ பவுடரை கொடுத்திருக்கான்..?’’ தன் மவுனத்தைக் கலைத்தபடி ரவிதாசன் கேட்டான்.
‘‘பஃபர் மீன்...’’
அதிர்ந்து போய் உதடுகள் துடிக்க சூ யென்னை பார்த்தான் ரவிதாசன்.
‘‘ஸாரி ரவிதாசன். டெட்ரோடோடாக்ஸின் விஷம் அளவுக்கு அதிகமாவே இந்தப் பசங்களுக்கு தரப்பட்டிருக்கு. ஆனாலும் பயப்பட வேண்டாம்...’’
‘‘ஃபாஸ்ட் எங்க?’’
‘‘அடைச்சு வைச்சிருக்கேன்...’’
‘‘அவனை நான் பார்க்கணும்!’’
‘‘இப்ப வேண்டாம்...’’
‘‘ஏன்?’’ - சீறினான் ரவிதாசன்.
‘‘இப்போதைக்கு அவன் சாகக் கூடாது...’’
‘‘அவனைக் கொல்ல மாட்டேன். போதுமா? அவன் இருக்கிற இடத்தை சொல்லு...’’
‘‘எதுக்கு..?’’
‘‘ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்ட இந்த மண்டபத்தை ஏன் இடிக்கச் சொன்னான்னு எனக்குத் தெரியணும்...’’
‘‘எர்த் கிரிட்...’’
‘‘என்னது..?’’
‘‘இந்த மண்டபத்துக்குக் கீழ ஓடற காந்தப் புலத்தை ஆராய ஃபாஸ்ட் விரும்பியிருக்கான்...’’
சொன்ன சூ யென்னை உற்றுப் பார்த்தான் ரவிதாசன்.
‘‘எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க..?’’
‘‘ஒண்ணுமில்ல...’’ - பார்வையைத் திருப்பி சிறுவர்களை ஆராய்ந்தான் ரவிதாசன். அவன் கண்களில் ரத்தம் வடிந்தது.
‘‘வீட்டுக்குத் தகவல் சொல்லிடுங்க...’’ - மவுனத்தைக் கலைத்தான் சூ யென்.
‘‘என்னன்னு..?’’
‘‘சங்கர் பாதுகாப்பா இருக்கான்னு...’’
‘‘சொல்லிட்டேன்...’’
‘‘சரி, அவங்களை நிறைய உப்பு போட்டு இரவு உணவைத் தயாரிக்கச் சொல்லுங்க... மாற்று மருந்து கொடுத்ததும் பசங்க அந்த சாப்பாட்டைத்தான் சாப்பிடணும். உப்பு அதிகமா சேர்ந்தாதான் இயல்புக்கு திரும்புவாங்க...’’
சட்டென்று திரும்பி சூ யென்னின் சட்டையைப் பிடித்தான் ரவிதாசன்.
‘‘யார் நீ?’’
‘‘என்ன இப்படி கேட்டுட்டீங்க..? நான்தான் சூ யென்...’’
‘‘பொய் சொல்லாத. என்னைத் தேடி தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்தவன் நீ இல்ல... என் வீட்டு பாதாள அறைல நடராஜர் சிலையை 3டி ஸ்கேன் செய்ததும் நீ கிடையாது... சொல்லு, யார் நீ..?’’
பதில் சொல்லாமல் சூ யென் சிரிக்க ஆரம்பித்தான்.
ஆதித்யாவின் புருவங்கள் முடிச்சிட்டன. தன் முன்னால் சற்றுத் தொலைவில் ஆங்கில ‘வி’ ஷேப்பில் நின்றுகொண்டிருந்த ஏழு கரும் பச்சை நிற ஹோண்டா சிட்டி கார்களையும் பார்த்தான். அவன் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது. மெல்ல தன் காரின் வேகத்தைக் குறைத்து பிரேக்கை அழுத்தி நிறுத்தினான்.
‘‘உன்னை மீட்க ஆட்கள் வந்திருக்காங்க...’’ - பின்புறம் பார்க்காமல் சொன்னவன், தன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடியே விரல்களுக்கு சொடுக்கு போட்டான். பின்னர் திரும்பி தாராவின் கட்டுகளை அவிழ்த்தான். அவள் வாயில் இருந்த துணி உருண்டையை எடுத்தான்.
படுத்திருந்த தாரா, எழுந்து அமர்ந்தாள். காரின் முன்பக்கக் கண்ணாடி வழியே காட்சிகள் துல்லியமாகத் தெரிந்தன. ஹோண்டா சிட்டி கார்களில் இருந்து கறுப்பு கோட் - சூட் போட்ட ஆசாமிகள் இறங்கினார்கள். அனைவரது கைகளிலும் ஏ.கே. 47 துப்பாக்கி. ஆதித்யாவின் காரை குறி பார்த்தபடி அவர்கள் சாலையில் வரிசையாக நின்றார்கள்.
‘‘தெலுங்கு சினிமாவைப் பார்த்து பரமேஸ்வர பெருந்தச்சன் ரொம்ப கெட்டுப் போயிட்டான். பாரு... அடியாட்களுக்கு யூனிஃபார்ம் எல்லாம் கொடுத்திருக்கான்...’’ - சிரித்த ஆதித்யா, ‘‘சீட் பெல்ட் போட்டுக்க...’’ என்றான்.
அவனை அலட்சியம் செய்த தாரா, கார் கதவைத் திறக்க முற்பட்டாள்.
‘‘லாக் ஆகியிருக்கு. சொன்னதைச் செய்...’’ - அழுத்தமாகச் சொன்ன ஆதித்யா, ரியர் வியூ மிர்ரரில் அவளைப் பார்த்தான். அசையாமல் இருந்தாள். சட்டென்று திரும்பி, அவள் திமிறத் திமிற சீட் பெல்ட்டை மாட்டி விட்டான். பின்னர் க்ளட்ச்சில் காலை வைத்து அழுத்தினான். தனது பெல்ட் லாக் ஆகியிருக்கிறதா என சரி பார்த்தான். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்திலிருந்த கண்ணாடியை மைக்ரோ விநாடி பார்த்தவனுக்கு திருப்தி ஏற்பட்டது. பின்புறம் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எந்த வாகனமும் வரவில்லை.
முன்பக்கம் பார்த்தான். கோட் - சூட் ஆசாமிகள் துப்பாக்கியை ஏந்திய பொசிஷனில் நின்றிருந்தார்கள். அவர்களுக்கும், தன் காருக்குமான இடைவெளி சுமாராக இருநூற்று ஐம்பது அடி இருக்கும். பிரச்னையில்லை. சமாளித்துவிடலாம். ஒரு முடிவுடன் க்ளட்ச்சில் இருந்த காலை அகற்றினான். முன்னோக்கி கார் சீறியது. சீட் பெல்ட் போட்டிருந்ததால், முன்னிருக்கையில் மோதுவதிலிருந்து தாரா தப்பித்தாள்.
சீறி வந்த காரை நோக்கி கோட் - சூட் ஆசாமிகள் சுட்டார்கள். பாய்ந்த குண்டுகள், காரின் மீது பட்டுத் தெறித்தன. ‘‘புல்லட் ப்ரூஃப். ஒண்ணும் ஆகாது... கவலைப்படாத...’’ என்று சொன்ன ஆதித்யா, காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
தங்கள் மீது கார் மோதாமல் இருப்பதற்காக, நின்று கொண்டிருந்த அடியாட்கள் சிதறினார்கள். ஒரே பாய்ச்சலில் ஆதித்யாவின் கார் மேல் நோக்கி எழும்பியது. துப்பாக்கி குண்டுகள் காரின் அடிப் பாகத்தைத் துளைத்தன. சரியாக ஏழு ஹோண்டா சிட்டியையும் தாண்டிய பின்னர் ஆதித்யாவின் கார் தன் சக்கரத்தை சாலையில் பதித்தது.
இரு பக்கமும் சிதறிய அடியாட்கள், தங்கள் வாகனங்களில் பாய்ந்து ஏறினார்கள். ஒவ்வொரு ஹோண்டா சிட்டியும் ரிவர்ஸில் திரும்பி முடிப்பதற்குள் ஆதித்யாவின் கார் பல கிலோ மீட்டர்களைக் கடந்திருந்தது.
‘‘உன்னோட வேல்யூ என்னன்னு பரமேஸ்வர பெருந்தச்சனுக்கு புரிஞ்சிருக்கு. அதனாலதான் வெப்பன்ஸோட ஆட்களை அனுப்பியிருக்கான்...’’ - சொன்ன ஆதித்யா, இடப்புறம் பிரிந்த மண் சாலையில் காரைத் திருப்பினான். தாரா அமைதியாக இருந்தாள். இரண்டு கிலோமீட்டர் வரை சென்றதும் நான்கு ரோடுகள் பிரிந்தன. எந்தப் பக்கமும் வண்டியைத் திருப்பாமல் ஆதித்யா நேராகச் சென்றான். அது காட்டுப் பகுதி. புதர்களும், மரங்களும் மண்டிக் கிடந்தன. அரை மணி நேர பயணத்துக்குப் பின்னர் சாலை வலப்பக்கம் திரும்பியது.
அங்கு காரை நிறுத்திய ஆதித்யா, லாக்கை ரிலீஸ் செய்துவிட்டு ‘‘இறங்கு...’’ என்றான். முரண்டு பிடித்தால் தூக்குவான். எதற்கு வம்பு? தாரா கட்டுப்பட்டாள். வண்டியை விட்டு இறங்கிய ஆதித்யா, பின்புறம் சென்றான். டிக்கியைத் திறந்து அவள் பையை எடுத்துக் கொண்டான்.
‘‘ம்... நட...’’
வலப்பக்க சாலையில் இருவரும் நடந்தார்கள். ஐம்பதடி சென்றதும் ஆதித்யா தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு பொருளை எடுத்தான். அதிலிருந்த பட்டனை அழுத்தினான்.
அவர்கள் வந்த கார், வெடித்துச் சிதறியது.
கோராபுட்டிலிருந்து 92 கிலோ மீட்டர் தூரத்திலும், விசாகப்பட்டினத்திலிருந்து 200 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது டுடுமா அருவி. ஆந்திர - ஒடிசா எல்லையில் இருக்கும் இந்த அருவிக்கும் குப்தேஸ்வரர் குகைக்கும் அதிக தொலைவில்லை. சாலையில் இருந்து பார்த்தால் இரு அருவிகள் மலையில் இருந்து விழுவது போலிருக்கும்.
அந்த அருவிக்குச் செல்ல பள்ளத்தாக்கில் இறங்க வேண்டும். அதற்காக படிகளை அமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு அடி இருக்கும். உயரமான படிக்கட்டு என்பதால் குதித்துக் குதித்துதான் செல்ல வேண்டும். உள்நோக்கி இறங்க இறங்க அடிவயிற்றில் பயம் எழும். அதைத் தாங்கியபடி கவனமாக இறங்கினால் ஒற்றையடிப் பாதை வரும். சுற்றிலும் காடு. அடர்ந்த வனம். உயர்ந்த மரங்கள். புதர்கள்.
பொதுவாக அந்தப் பகுதிக்கு யாரும் வருவதில்லை. நூல் பிடித்தது போல் அந்த ஒற்றையடிப் பாதையில் சென்றால், பாறைகளைத் தொட்டு மீண்டும் கொஞ்ச தூரம் போக வேண்டியிருக்கும். அப்படிச் சென்றால்தான் அருவியின் அழகைக் காண முடியும். இந்தியாவிலேயே உயரமான அருவி இதுதான். அதுமட்டுமல்ல, மற்ற அருவிகளைப் போல் இது படிப்படியாக பாறைகளில் விழுந்து கீழே சரிவதில்லை. பிரமாண்டமாக சரிந்து, ஒரு பாறை மடிப்பில் விழுந்து, அப்படியே கொந்தளிப்புடன் அடிவாரத்தை நோக்கிப் பாயும். இதனால் விழுந்த வேகத்தில் நீர், புகை போல் உயரமாக எழும். எனவே யாராலும் இந்த அருவிக்குக் கீழ் நின்று குளிக்க முடியாது. நீரின் பாய்ச்சல் உடலை துண்டு துண்டாக்கி விடும்.
அப்படிப்பட்ட பயங்கரமான அருவியின் கீழ் நின்றுதான் அந்த மனிதர் குளித்துக் கொண்டிருந்தார். பாய்ந்து கொட்டிய நீரோ, மலை உயரத்துக்கு எழுந்த புகையோ அவரை ஒன்றும் செய்யவில்லை.
ஒற்றையாடையுடன் தன் இரு கரங்களையும் உயர்த்தி வானத்தை ஏறிட்ட அந்த மனிதர், அருவியை ஊடுருவியபடி வெளியே வந்தார். ஐம்பது வயதிருக்கும். வைரம் பாய்ந்த தேகம். பாறை மீதிருந்த துண்டை எடுத்து தன் உடலை துடைத்துக் கொண்டார். அருகிலிருந்த புதிய வேட்டியை எடுத்து அணிந்தவர், பழைய ஆடையை அருவியிலேயே வீசி எறிந்தார்.
பின்னர் பாறைக்கு மறுபக்கம் வந்தார். அவர் முகம் பூரிப்பில் ஜொலித்தது. கண்கள் முழுக்க ஆசையின் சுவடுகள். வைத்த கண் வாங்காமல் அந்த இடத்தையே பார்த்தார்.
அவர் பார்வை பதிந்த இடத்தில் -
நல்லூர் கோயில் குளத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மகாபாரத குந்தியின் சிலையும், பரத்வாஜ மகரிஷி எழுதிய விமானிகா சாஸ்த்ரா சுவடியும் அருகருகே இருந்தன.
தனது சாட்டிலைட் போனை எடுத்து யாரையோ தொடர்பு கொண்டார். மறுமுனை எடுக்கப்பட்டதும் உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.
‘‘வணக்கம். நான் பரமேஸ்வர பெருந்தச்சன் பேசறேன். ஆயி செத்துட்டா...’’ என்று அவர் சொல்லி முடிக்கவும் -
குப்தேஸ்வரர் குகையின் மறுமுனையில் நின்று கொண்டிருந்த அந்த உருவம், தன் துப்பாக்கியை எடுத்து ஆயியின் நெற்றியை நோக்கி சுடவும் சரியாக இருந்தது.
(தொடரும்)