ஒரு அறிவியல் எழுத்தாளன் போல எல்லோரது கண்ணெதிரேயும் கனவு காண்பது, நம் வேலையின் முக்கியமான ஒரு அங்கம். நல்ல கனவுகளும் வரும்; கெட்ட கனவுகளும் வரக்கூடும். வெறுமனே கனவு காண்பவர்கள் அல்ல நாம்; அந்தக் கனவுகளை நிஜமாக்க உழைப்பவர்கள்.
- வில்லியம் கிப்சன்
உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலையை நன்றாகத்தான் செய்தீர்கள். என்றாலும், எப்படியோ, எங்கோ தவறாகி விட்டது. தோல்வியில் முடிந்து விட்டது.
‘‘இந்த வேலையை நான் சரியாகப் பார்ப்பேன் என்று மேலிடம் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகிவிட்டதே! எப்படி இதற்கு பதில் சொல்லுவேன்’’ என்றெல்லாம் எண்ணிக் குமைகிறீர்கள். பழிச்சொல், வீணாகி விட்ட உழைப்பு, இதனால் என்ன ஆகுமோ என்ற பீதி... எல்லாம் உங்களை வாட்டுகிறது.
கவலைப்படாதீர்கள்... இது இயல்பானதே!
இப்படியெல்லாம் நீங்கள் வருந்துவதே, நீங்கள் எவ்வளவு தூரம் உண்மையாக உழைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. தவறு நடந்துவிட்டது உண்மை. இதற்கு அடுத்த கட்ட ஆக்கபூர்வ நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்றால், இதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் நீங்கள் வெளியே வருகிறீர்கள் என்பதில் இருக்க வேண்டும்.
அடுத்தவர்கள் உங்களை விமர்சிப்பது என்றால் விமர்சனம் செய்து விட்டுப் போகட்டும். ஆனால், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ... எப்படிப் பேசுவார்களோ... என நீங்களாகவே நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை உங்கள் கற்பனையில் ஓடவிட வேண்டாம். பொய்யான சம்பவங்களில், கற்பனை எதிரிகள் உங்களது வசனங்களைப் பேசும்போது, நிஜத்தில் நீங்கள் மேலும் பலவீனம் அடைந்துவிடுவீர்கள். விமர்சனங்கள் வரும்போது, அந்தத் தருணத்தில் அவற்றை எதிர்கொள்ளலாம். ‘பாலம் வரும்போது அதைக் கடந்து கொள்ளலாம்!’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி.
இந்தத் தவறின் மூலம் நீங்கள் நிறையக் கற்றுக்கொண்டு விட்டீர்கள். எதனால் இந்தத் தவறு நேர்ந்தது, எங்கே கோட்டை விட்டோம் என்பதெல்லாம் இப்போது உங்களுக்குத் தெரியும். எனவே, அடுத்தமுறை இந்தத் தவறை செய்ய நீங்கள் அனுமதிக்கப் போவதில்லை.
இது ஒன்றும் வேண்டுமென்றே நீங்கள் செய்த தவறு அல்ல. வேலை செய்யும்போது இதெல்லாம் இயற்கையான விஷயமே. எனவே, உங்களிடம் வருத்த உணர்வு இருக்கலாமே தவிர, குற்ற உணர்வு இருக்கத் தேவையில்லை.
இதுவரை உலகில் நிகழாத ஒன்று இப்போது நிகழ்ந்து விடவில்லை. தவறுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் இதுவரை யாரும் பிறக்கவில்லை.
இப்படி எல்லாம் யோசித்து அதிலிருந்து விடுபடும் வழியைப் பாருங்கள்.
நீங்கள் டைரி எழுதுகிற பழக்கம் உடையவராக இருந்தால், முன்பு இதுபோல் சந்தித்த தோல்வி தினங்களைப் படித்துப் பாருங்கள். அப்போதும் எழ முடியாமல்தான் இருந்தீர்கள். பின்னர் ‘காலம்’ என்னும் மாயக்குதிரை உங்களின் கரம் பற்றி இழுத்து வந்து, தன் முதுகில் போட்டு உங்களைக் கரை சேர்த்து விடவில்லையா?
நீங்கள்தான் உங்களை சுய ஊக்குவிப்பு செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விடுபட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் எடுங்கள். அடுத்தவர்களின் பரிவிற்காகவும், கை தூக்கும் கருணைக்காகவும் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.
அடுத்தவர்கள் நம்மை கைத்தாங்கலாகக் கூட்டிப் போவார்கள் என்று நீங்கள் காத்திருந்தால் - அவர்களும் வருவார்கள். ஆனால், அவர்களின் வேலையை முடித்துவிட்டுத்தான் வருவார்கள். அதுவரை நீங்கள் காத்திருந்தால் வீணாகிப் போவீர்கள்.
ஒருவேளை இப்படி அடுத்தவர்கள் வராமல் கூடப் போகலாம். எனவே, நீங்களாகவே மீண்டு கரை சேருங்கள். உங்களது பணி வாழ்க்கையில் அது ஒரு ப்ளஸ் பாயின்ட் ஆக இருக்கும். இதைவிட இன்னொரு பெரிய ப்ளஸ் பாயின்ட் இருக்கிறது. அது, ‘இந்தத் தவறுக்கு வேறு சிலர்தான் காரணம், அவர்தான் காரணம்...’ என்று பிறரின் மேல் பழி போடாமல் நேர்மையுடன் நீங்களே எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்பது ஆகும்.
பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு எழும் பிரச்னைகள் பெரும்பாலும், உங்களது பணிகளாலோ, பொறுப்புகளாலோ வருவது அல்ல... உடன் பணிபுரிபவர்களால் வருவது. எனவே, சக பணியாளர்களுடன் உங்களது உறவு நல்ல ரீதியில் அமைய வேண்டும். குறைந்தபட்சம், மோசமான ரீதியில் அமையாதபடியாவது பார்த்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.
இல்லையென்றால், ‘வேலைக்குப் போகவே பிடிக்கவில்லை. அங்கே வேலைக்குப் போனால் இந்த முகங்களை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது’ என்னும் அளவிற்கு உங்களது மனநிலை சென்று விடும். அதோடு இந்த விஷயம் முடியாது. வேலை பார்க்கும் இடம் நிம்மதியாக இருந்தால்தான், அந்த நிம்மதி உங்களது வீட்டிலும், உங்களது பிற வாழ்க்கைகளிலும் எதிரொலிக்கும்.
சரி, இப்படி நினைப்பதால் மட்டும் பணிபுரியும் இடத்தில் உங்களுக்குப் பிரச்னைகள் வராமல் இருந்து விடுமா? வரும்... ஆனால், கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா...’ என்பது புரிய வரும்.
எனக்குத் தெரிந்த இடத்தில் ஒருவர், ‘என்னை யாரும் வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பதே இல்லை’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரை தரக்குறைவாகப் பேசி விடுகிறார்களாம்.
என்னவென்று ஆராய்ந்தபோதுதான் புரிந்தது... அவர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் எல்லோரையும் ‘‘அண்ணா... அண்ணா...’’ என்று அழைத்திருக்கிறார். அவராகவே தன்னைத் தம்பியாக்கிக் கொண்டுவிட்டார். ‘அண்ணாக்களும்’ பொது இடத்தில் ‘‘டேய் தம்பி, இதைக் கொஞ்சம் பாருடா...’’, ‘‘இந்த வேலைய முதல்ல முடிடா தம்பி...’’ என்ற ரேஞ்சுக்குப் போய்விட்டார்கள்.
யாராவது, ‘‘என்னை அண்ணா என்று கூப்பிடு’’ என்று சொன்னார்களா? துவங்கியது நீங்கள்... உரிமையைத் தந்தது நீங்கள்... விளைவு, ‘வாடா, தம்பி!’ என்கிறது.
நீங்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பணி இடத்திற்கான பொதுவான நடத்தை விதிகள் இருக்கின்றன. அதன்படி ஒருவரை ஒருவர் நடத்தினால் போதுமானது.
ஒருவேளை, முதலில் ‘அண்ணன்’ இந்த விளையாட்டைத் துவங்கினார் என்றால், அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், மறைமுகமாகக் கூட ஆட்சேபத்தைத் தெரியப்படுத்தி விடலாம். எதையும் புரிந்துகொள்ள முடியாத அளவு இங்கு எவரும் முட்டாள்கள் அல்லர்.
நீங்கள் பெண்ணாக இருக்கிறபட்சத்தில் ஒரு ஆண் சொல்லுகிற ‘அந்த மாதிரி’ ஜோக்கிற்கும், இரட்டை அர்த்தப் பேச்சுகளுக்கும் சிரித்து ஆமோதித்து விட்டால் பின்னர், ‘இந்த ஆள் பார்க்கிற பார்வையே சரியில்லை... நடத்தை சரியில்லை’ என்று புலம்புவதற்கும் தயாராக இருக்க வேண்டும்!

நீங்கள் பணிச் சூழலுக்குப் பொருத்தமில்லா ஆடையுடன் வந்தால், ‘அந்த ஆள் கிறுக்குத்தனமா டிரஸ் பண்ணிட்டு வருவான்’ என்ற விமர்சனத்தைத் தவிர்க்க நினைக்கக் கூடாது.
வயதில் சிறியவர்களுடன் பழகினால் அவர்களும் ஒரு கட்டத்தில், ‘பெரிசு’, ‘அங்கிள்’, ‘சித்தப்பு’ என்று உரிமை பாராட்டுவார்கள். அப்போது ‘கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் செஞ்சிருக்கலாமோ’ என்று வருந்தக் கூடாது.
ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். மனித இனம் பொதுவாக பிறரை விடத் தன்னைப் பெரிதாக எண்ணி, ஆளுமை செலுத்த நினைக்கும் ஒரு இனம். எனவே, முடிந்த அளவு மறைமுகமாகவேனும் அடுத்தவனை சக மனிதன் மட்டம் தட்டியே தீருவான். இப்பண்புகள் ஆளாளுக்கு வேறுபடலாம் என்றாலும் கூட அடிப்படை - ‘அடுத்தவர்களைவிட, நான் உசத்தி...’
ஒப்பிடுவதற்கு எதுவுமே இல்லை என்றால், ‘அவனைவிட எனக்கு தலைமுடி அதிகம்’, ‘அவன் வண்டியை விட, என் வண்டி 0.0005 கி.மீ அதிக மைலேஜ் கொடுக்கிறது’ என்று கூட மனிதர்கள் பெருமையடைவார்கள். அல்ப காரணங்களே போதுமானவை.
நாம் ஏன் அதற்கு வீணாக வழிவகுத்துக் கொடுக்க வேண்டும்?
(வேலை வரும்...)