சூது கவ்வும் : சினிமா விமர்சனம்





‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... ஆனால் தருமம் மறுபடி வெல்லும்’ - காலம் காலமாய் சினிமா சொல்லும் இந்த மெசேஜை விட்டு வெளியேறி, ‘சூது கவ்வும்’ என்பதோடு முடித்திருக்கிறார்கள். அதுதான் புதுசு!

சாத்வீகமாக - சின்ன லெவலில் ஆள் கடத்தல் செய்பவர் விஜய் சேதுபதி. இன்னும் வெட்டி ஆபீசர்ஸ் மூன்று பேர் அவரோடு இணைய, தாங்கள் உண்டு தங்கள் கடத்தல் உண்டு என்று ‘நிம்மதியாக’ப் போய்க்கொண்டிருக்கிறது காலம். திடீரென தங்கள் கொள்கைகளை மீறி, அமைச்சர் மகனைக் கடத்தக் கிளம்புகிறது விஜய் சேதுபதி அண்ட் கோ. கடத்தப்படும் அமைச்சரின் மகன் இவர்களை விட கேடியாக இருக்க, பணயத் தொகை 2 கோடி யாருக்கு என்பதில் ஒடித்துத் திரும்புகிறது திரைக்கதை. அமைச்சர் மகனோடு 2 கோடியை அவர்கள் பகிர்ந்து கொண்டார்களா? நேர்மையான போலீஸ் கையால் சுடப்பட்டு செத்தார்களா? என்பதுதான் க்ளைமாக்ஸ்!

ஹீரோக்கள் என்றால் நல்லவர்கள், வில்லன்கள் என்றால் கெட்டவர்கள் என்ற நம் பொதுபுத்தியை படம் முழுக்கப் போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி. குறும்பட உலகில் இருந்து இன்னொரு நல்வரவு.

‘தெளிவா ப்ளான் பண்ணி செஞ்சா, கிட்நாப்பிங் ஒரு நல்ல தொழில்’ என்று கிளாஸ் எடுக்கும் விஜய் சேதுபதி, இந்தப் படத்திலும் சிரிக்காமல் சிரிக்க வைக்கிறார். அவர் கண்களுக்கு மட்டும் காட்சி தந்து, ‘மாமா... மாமா...’ என்று கொஞ்சிப் பேசும் அவரின் கற்பனைக் காதலி சஞ்சிதா, ஹீரோயினே இல்லாத படத்துக்கு ஆறுதல் ஐஸ்கிரீம்.



லஞ்சம் கொடுக்க வருபவரை மாட்டி விட்டு பப்ளிசிட்டி தேடும் நேர்மையான அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர், ‘உன்னால கட்சிக்கு நஷ்டம்தான்’ என அவரைக் கடிந்துகொள்ளும் முதலமைச்சர் ராதா ரவி, என்கவுன்டர் இன்ஸ்பெக்டர் பிரம்மாவாக ஒற்றை வசனம் கூட இல்லாமல் டெரர் கொடுக்கும் யோக் ஜெப்பி, சினிமா எடுக்கும் ரவுடி டாக்டர் அருள்தாஸ் என கதையோட்டத்தில் வரும் கேரக்டர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசு.

லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும், அதைக் கவனிக்காத அளவுக்கு சிரிக்க வைத்து வென்றிருக்கிறார் இயக்குனர். டைமிங் வசனங்களும், விஜய் சேதுபதி கேங்கின் கோமாளித்தனங்களுமே கடைசி வரை படத்தை தொய்வில்லாமல் பார்த்துக்கொள்கின்றன. மற்றவை எல்லாமே புதுசாக இருப்பதாலோ என்னவோ, பின் பாதியில் இன்ஸ்பெக்டர் ஜெப்பி துப்பு துலக்குவது மட்டும் கொஞ்சம் அலுப்பு. ‘புகை பிடித்தல் மது அருந்துதல் உடலுக்குத் தீங்கானது’ என்ற வாக்கியம் சாட்டிலைட் சேனல் லோகோ போல, ஸ்கிரீன் ஓரம் நிரந்தரமாகவே இருந்திருக்கலாம். அந்த அளவுக்கு குடி காட்சிகள். தினேஷ் கிருஷ்ணனின் அறிமுகக் கேமரா, படம் முழுக்க பயமின்றி புகுந்து விளையாடியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் படு வித்தியாசம். பின்னணி இசை பல இடங்களில் பதம்... சில இடங்களில் காதைக் கிழிக்கிறது.

கல்யாண குணங்கள் நிரம்பிய கதாநாயகனை இந்த சினிமா முற்றிலும் நிராகரித்துவிட்டது. நீதி, நேர்மை என்று கிளாஸ் எடுத்த தமிழ் சினிமா, தடால் என்று தற்போது தலைமுறை மாறுவது ‘சூது கவ்வும்’-ல் வெட்ட வெளிச்சம். மேட்டர் புதுசுதான் டைரக்டர் சார்... ஆனா, இந்த சமுதாய அக்கறைன்னு சொல்றாங்களே... அது?
- குங்குமம் விமர்சனக் குழு