ஹீரோக்கள் பிடியில் தமிழ் சினிமா இருக்கு!





‘‘ ‘வைதேகி காத்திருந்தாள்’ உட்பட கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் காமெடி கலாட்டாவை தொடங்கி வச்சதே என் படங்கள்தான். கவுண்டமணி ஹீரோ டிராக்கிற்கு மாறினதும், செந்திலை தனியா காமெடி பண்ண வச்சேன். செந்திலும் பிஸியாகிட, அடுத்து என் படங்களில் ஜனகராஜோட காமெடி கொடி பறக்க ஆரம்பிச்சது. ‘ராஜாதி ராஜா’ படம் பண்றப்போ, ‘உங்களுக்கு காமெடி சூப்பரா வருதே... ஏன் நீங்க நடிக்கக்கூடாது’ன்னு ரஜினியும், மனோரமாவும் சின்னதா தூண்டினாங்க. ‘சரி நடிக்கலாம்’னு போனவன்தான்... இயக்குனரா திரும்பி வர்றதுக்கு 12 வருஷம் ஆயிடுச்சு’’ - சிரித்தபடி சொல்கிற ஆர்.சுந்தர்ராஜன், ‘சித்திரையில் நிலாச்சோறு’ படத்தை பரபரவென முடித்திருக்கிறார்.

‘‘ ‘சித்திரையில் நிலாச்சோறு’ - டைட்டிலே ரசனையா இருக்கே?’’
‘‘கதையும் அப்படித்தான் இருக்கும். பணம் இல்லாம இந்த உலகத்தில எதுவுமில்ல. அப்படிப்பட்ட பணம், பாசத்திடம் எப்படித் தோற்குதுங்கறதுதான் படம். ஒரு குழந்தைதான் படத்தோட ஆதாரமே. ‘தெய்வத்திருமகள்’ சாராதான் அந்தக் குழந்தையா வர்றது. மலையாளத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் பிரகாஷ், ஹீரோ. ஹீரோயின் வசுந்தரா. என்னோட படத்தில வர்ற காமெடியும் நடிச்ச காமெடியன்களும் எவ்வளவு ‘ரீச்’ ஆவாங்கன்னு தெரியும். இந்தப் படத்தில் கஞ்சா கருப்பு காமெடிக்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும். வழக்கம் போலவே நட்சத்திர கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. முக்கியமான கேரக்டரில் பூமிகா நடிக்கிறார். என்ன கேரக்டர் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்...’’

‘‘உங்க படத்தில பாடல்கள் பிரதானமாகவும் பிரமாதமாகவும் இருக்குமே..?’’
‘‘சுந்தர்ராஜன் - இளையராஜா காம்பினேஷன் இதுவரை எவ்வளவோ ஹிட் கொடுத்திருக்கு. இந்தப் படத்திலும் அப்படி பாட்டுப் பந்தி இருக்கு. ஒருத்தனுக்கு கல்யாணமாகிட்டா ஒரு பொண்ணுக்கு புருஷனாகிடுவான். குழந்தை பிறந்தா அப்பன் ஸ்தானத்துக்கு வந்துடுவான். மகனோட மகன் வந்துட்டா தாத்தாவாகிடுவான். இது எல்லாமே நடந்த பிறகும் இன்னிக்கும் ராஜா இளையராஜாவாகவே இருக்கார்!’’

‘‘நடிகனா கேமரா முன்னாடி நின்றபோது இயக்குனர் சுந்தர்ராஜன், தலை நீட்டினாரா?’’
‘‘இன்னொருத்தர் படத்தில நடிக்கிறப்போ இயக்குனர் சுந்தர்ராஜனை வெளிப்படுத்த மாட்டேன். ‘கட்’ சொன்னபிறகு இயக்குனர் சுந்தர்ராஜன் முழிச்சிக்குவான். அந்த நேரத்தில் ஏழு கதை எழுதிட்டேன். அதில ஒண்ணுதான் இப்போ எடுக்கிற படம். எனக்கு எப்போதுமே ஹீரோ பின்னாடி போய் பழக்கம் இல்ல. கதை என்ன கேட்குதோ அதை மட்டும்தான் செய்வேன். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு தீவிரமா இருந்த நேரம் ‘ஆராதனா’ வெளிவந்து ஒரு வருஷம் ஓடுச்சு. அதே கதையை ‘சிவகாமியின் செல்வன்’னு தமிழில் எடுத்தப்போ சரியா போகல. ஏன்னா, அந்தக் கதை யூத்தை கேட்டது. அது அமையாததால படம் ஓடல. இந்தக் கதை ஒரு குழந்தையைக் கேட்டது. அதை மட்டும் செய்திருக்கேன்!’’



‘‘நடிகர்கள் பின்னால் ஓடமாட்டேன்னு சொல்ற நீங்க, ரஜினியை நம்பித்தானே ‘ராஜாதிராஜா’ எடுத்தீங்க?’’
‘‘அந்தப் படத்தில் ரஜினி கத்தி எடுத்து சுத்தும்போது தியேட்டரே கை தட்டியது. இதையே மோகன் செய்திருந்தால் யாராவது ரசிச்சிருப்பாங்களா? அந்தப் படத்துக்கு ரஜினிதான் பொருத்தம். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் ரஜினி நடிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமா? கோடம்பாக்கம் பாலம் வர்றதுக்கு முன்னாடி, அங்க ரயில்வே கேட்தான் இருக்கும். ஒரு நாள் ஒரு கார் வந்து நின்னப்போ, ஒரு வயசான அம்மா கார் கண்ணாடியை தட்டி தர்மம் கேட்டிருக்கு. கார்ல வந்தவர் கண்ணாடியை இறக்கிட்டு, பணம் கொடுத்திருக்கார். பணத்தை வாங்கிய அந்த அம்மா ‘நீங்க நல்லாயிருக்கணும் எம்.ஜி.ஆரேன்னு சொல்லிட்டு நகர்ந்திருக்கு. இதில வேடிக்கை என்னன்னா பணம் கொடுத்தது எம்.ஜி.ஆர் இல்ல... எஸ்.எஸ்.ராஜேந்திரன். அந்த அம்மாவைப் பொறுத்தவரை கொடுக்குற ஆளெல்லாம் எம்.ஜி.ஆர்னு ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. இதுதாங்க சினிமாவும்!’’

‘‘தமிழ் சினிமாவோட டிரெண்டே இப்ப மாறியிருக்கே?’’
‘‘அதெல்லாம் இல்லீங்க. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு... அவ்வளவுதான்! ரீமேக்கும், டப்பிங்கும்தான் வளர்ந்திருக்கு. இன்றைய சினிமா ஹீரோக்கள் கையில் இருக்கு. இயக்குனரையும், தயாரிப்பாளரையும் அவர்தான் முடிவு செய்யறார். எழுத்தாளர்களுக்கு மரியாதையே இல்லாமப் போச்சு. பாத்திரங்களுக்கு பெயர் அடிக்கிறவனெல்லாம் எழுத்தாளன் ஆகிட முடியாது. இங்க எல்லாமே மார்க்கெட்டிங்தான். இதில சின்ன படம், பெரிய படம்னு ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல். பெரிய படம்ங்கிறது ஆலமரம் மாதிரி. அது நிழல் கொடுக்கும். சின்ன செடிதான் நெல். ஆனா, அதுதான் உயிர் கொடுக்கும்.’’



‘‘இன்றைய இளைஞர்கள் ரசிக்கிற மாதிரி உங்களால படம் கொடுக்க முடியுமா?’’
‘‘எங்க அம்மாவுக்கு, எனக்கு, என் மகனுக்கு... எல்லாருக்குமே ஐஸ்வர்யா ராய் அழகாத்தான் தெரியுறாங்க. பார்வதியையும், பரமசிவனையும் பல்லாயிரம் வருஷமா கும்பிட்டுட்டுத்தான் இருக்கீங்க. இத்தனை வருஷமா யிடுச்சேன்னு கும்பிடாமலா இருக்கீங்க? இத்தனை வயசுக்குப் பிறகும் மன்மோகன், அத்வானி எல்லாம் அரசியல்ல இருக்காங்க. அவங்கள வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கீங்களா? சமையலுக்கு வயசு வேணுமா என்ன? சாப்பாடு ருசியா இருக்காங்கறதுதான் விஷயமே.

ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல் மாதிரி, உலகத்தில மொத்தமே ஏழு கதைதான் இருக்கு. அதை எந்த ரூட்ல சொல்றோம்ங்கிறதுதான் முக்கியம். ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு என்னால பத்து சீன் சொல்ல முடியும். என்னோட கதைக்கு யாராவது ஒரு சீன் சொல்ல முடியுமா? இரண்டு கிழவிகளை வச்சு எடுத்த ‘அன்னை’, ஊமைப் பையனையும் நாயையும் வச்சு எடுத்த ‘ராமு’ படங்கள் சூப்பர் ஹிட்டா ஓடலையா? தேவர் எடுத்த ‘தெய்வச்செயல்’ சரியா ஓடல. அதையே இந்தில எடுத்தப்போ ‘உங்களுக்கு பைத்தியமா’ன்னு நிறைய பேர் கேட்டாங்க. ஆனா படம் இந்தியில் சக்ஸஸ். அதையே மறுபடியும் தமிழில் ‘நல்ல நேரம்’னு எடுத்தார். அதுவும் சக்ஸஸ். திரைக்கதைதான் இங்க முக்கியம். அந்த வகையில் என் ‘சித்திரையில் நிலாச்சோறு’ புது ரூட்ல போகிற படமா இருக்கும்.’’
- அமலன்