கர்ணனின் கவசம் : 9





‘‘ஃபாஸ்ட், நாம என்ன செய்யறோம்னு எனக்குப் புரியலை...’’ - பல மணி நேரமாக அடக்கி வைத்திருந்திருப்பான் போல. ஹோட்டல் அறைக்குள் புகுந்ததுமே, ஆனந்த் கொட்ட ஆரம்பித்தான்.

‘‘சிற்பங்கள் தொடர்பா புத்தகம் எழுதறதுதான் நம்ம வேலை. ஆனா, மயிலாடிக்கும் போகலை; பரமேஸ்வர பெருந்தச்சனையும் பார்க்கலை. அவர் வெளியூர் போயிருக்கறதா சொன்னீங்க. சரி, பிரகதீஸ்வரர் ஆலயத்தை ஒரு பார்வை பார்க்கலாம்னு வந்தோம். ஆனா, இன்னமும் கோயிலுக்குப் போகலை. ரவிதாசனைத்தான் பார்த்தோம். அந்த ஆள் சிற்பியும் கிடையாது. அவர்கிட்ட சிற்பங்கள் தொடர்பாவும் நீங்க எதுவும் கேட்கலை. தக்ஷீலா பல்கலைக்கழகம், ஒடிசா யூனிவர்சிட்டினு ஏதேதோ கேட்டீங்க. போர் விமானங்கள் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்பட்டீங்க. இதெல்லாம் எதுக்கு ஃபாஸ்ட்? இதனால நமக்கு என்ன பயன்..?’’

பதில் ஏதும் சொல்லாமல், ஜன்னல் அருகே சென்றான் ஃபாஸ்ட். இரவிலும் தஞ்சை பெரிய கோபுரம் ஒளிர்ந்தது. அந்த சீனன் இன்னமும் ரவிதாசன் வீட்டில்தான் இருக்கிறான். ஜிபிஎஸ் சிக்னல், அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
‘‘ஃபாஸ்ட், உங்களைத்தான்...’’ - அருகில் வந்து தோளைத் தொட்டான் ஆனந்த்.
‘‘கொஞ்ச நேரம் பேசாம இரு ஆனந்த்...’’
‘‘இத்தனை நேரம் அமைதியாதான் இருந்தேன்...’’
‘‘அதே மாதிரி இரு!’’
‘‘முடியாது ஃபாஸ்ட்...’’
‘‘அப்ப நீயே கோயிலுக்கு போய் சிற்பங்கள் ஏதாவது ரகசியம் சொல்லுதான்னு பாரு...’’
விழித்தான் ஆனந்த்.
‘‘முடியாதுல்ல. அதனாலதான் மவுனமா இருன்னு சொல்றேன்...’’
‘‘அதில்லை ஃபாஸ்ட். நான் என்ன சொல்றேன்னா...’’
‘‘எதுவும் சொல்ல வேண்டாம். நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு. ரவிதாசன்ங்கற பேரை இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டிருக்கியா?’’
‘‘இல்ல...’’
‘‘நீ இந்த ஊர்க்காரன்தானே? உனக்குத் தெரிஞ்சு யாராவது இப்படி பேரு வச்சிருக்காங்களா?’’
‘‘இல்ல...’’

‘‘ஆனா, ரத்தமும் சதையுமா ஒரு மனுஷனைப் பார்த்துட்டு வந்திருக்கோம். அவன் பேரு ரவிதாசன். தஞ்சைலதான் அவன் வாழ்ந்துட்டு இருக்கான்...’’
‘‘பேருல என்ன இருக்கு ஃபாஸ்ட்..?’’
‘‘பேருலதான் எல்லாமே இருக்கு. இதோ இந்தப் பெரிய கோயிலைப் பாரு. இதைக் கட்டினது ராஜராஜ சோழன். தமிழகத்துல முதன்முதல்ல ஒரு பேரரசை நிறுவினவன் இந்த அரசன்தான். இவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் பேரு ஆதித்ய கரிகாலன். நியாயமா பார்த்தா அவன்தான் அரசனா வந்திருக்கணும். ஆனா, வரலை. ஏன் தெரியுமா..?’’
‘‘அவனை யாரோ கொன்னுட்டதா படிச்சிருக்கேன்...’’
‘‘கொன்னது யாரு..?’’
‘‘ரவிதாசன் தலைமைல ஒரு குழுன்னு...’’ - ஆரம்பித்த ஆனந்த், சட்டென்று நிறுத்தினான். அவன் கண்கள் விரிந்தன. ‘‘அந்த ரவிதாசனுக்கும் இவனுக்கும் தொடர்பிருக்குன்னு நம்பறீங்களா ஃபாஸ்ட்..?’’
‘‘சந்தேகப்படறேன். அந்த ரவிதாசனோட டி.என்.ஏ.வுக்கும், இந்த ரவிதாசனோட மரபணுவுக்கும் தொடர்பிருக்கு. அது மட்டும் நிச்சயமா தெரியும்!’’
‘‘எதை வச்சு சொல்றீங்க?’’

‘‘தன் பையனுக்கு போர் விமானத்தை பொம்மையா செய்து கொடுத்ததை வச்சுத்தான்...’’ - நிறுத்திய ஃபாஸ்ட், அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடியே பேச ஆரம்பித்தான்.
‘‘ஆனந்த், அது மாதிரி போர் விமானங்களை அவ்வளவு ஈசியா செஞ்சிட முடியாது. அசாத்தியமான திறமை வேணும். அப்படிப்பட்ட வல்லுனர்கள் அந்தக் கால இந்தியாவுல இருந்திருக்காங்க. உடனே இந்தக் காலத்து இந்தியாவோட அதைப் போட்டு குழப்பிக்காத. ஆரம்ப காலத்துல நாடுகள், கண்டங்கள்னு எந்த எல்லைக் கோடும் கிடையாது. உலகம் ஒண்ணாதான் இருந்தது. அப்ப மனுஷங்களை பக்குவப்படுத்தறதுக்காக பல்கலைக்கழகங்கள் இருந்தன. சகல கலைகளும் அங்க கத்துத் தந்தாங்க. தக்ஷீலா அதுல ஒண்ணு. இந்த தக்ஷீலாவுக்கு முன்னாடி ஒடிசால ஒரு பல்கலைக்கழகம் இருந்ததாவும், இதுவே கூட கபாடபுரத்துல இருந்த ஸ்கூலோட கிளைதான்னும் சொல்றாங்க. அதாவது எல்லா யுனிவர்சிட்டியுமே ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான். ஒண்ணோட தொடர்ச்சியாதான் இன்னொண்ணு வளர்ந்திருக்கு...’’



‘‘எல்லாம் சரிதான் ஃபாஸ்ட்... அதுக்கும் ரவிதாசனுக்கும் என்ன தொடர்பு?’’
‘‘தமிழ்நாட்ல இருந்துகிட்டே தமிழக வரலாறு தெரியாம இருக்கியே ஆனந்த்..? இன்றைய கேரளா... அப்ப சேர நாடு. அங்க ஒரு யுனிவர்சிட்டி இருந்தது. அந்தப் பல்கலைக்கழகத்துல ஆசிரியரா இருந்தவன்தான் ஆதித்ய கரிகாலனைக் கொன்ற பழைய ரவிதாசன். அதனாலதான் ராஜராஜ சோழன் பட்டத்துக்கு வந்ததும் முதல் வேலையா சேர நாட்டு மேல போர் தொடுத்தான். அந்த யுனிவர்சிட்டிய அழிச்சான். சரித்திரத்துலயே ஒரு பல்கலைக்கழகத்தை அழிக்க பெரும்படையோட போனவன், ராஜராஜ சோழன் மட்டும்தான். அதனாலதான் தன்னோட எல்லா கல்வெட்டுலயும் இந்த முதல் வெற்றியை ஆர்ப்பாட்டமா பொறிச்சிருக்கான். அவ்வளவு ஏன்... இதோ இருக்கு பாரு தஞ்சை பெரிய கோயில்... அதனோட முதல் வாயில் பேரே ‘கேரளாந்தகன் நுழைவாயில்’தான்...’’
‘‘ஃபாஸ்ட்..?’’

‘‘யெஸ் ஆனந்த்... ரவிதாசனோட மூதாதையர்கள் தக்ஷீலா, ஒடிசா மட்டுமில்ல... கபாடபுரத்தோடயும் தொடர்புடையவங்க. ஸோ, அவனுக்கு போர் விமானங்கள் பத்தியும் தெரியும். அணு ஆயுதங்களோட நுணுக்கங்களும் தெரியும். சிற்பங்களோட ரகசியங்களும் அவனுக்கு மனப்பாடம்தான். பொக்கிஷத்தோட வரைபடமும் அவனுக்கு அத்துப்படிதான். நிச்சயம் ரகசியக் குழுவோட அவனுக்குத் தொடர்பிருக்கு. அதுல சந்தேகமே வேண்டாம்...’’
‘‘ஆனா நம்மகிட்ட அவன் பிடிகொடுத்தே பேசலையே?’’
‘‘அதனால என்ன? அவன் பையன் சங்கர் நம்ம பிடிலதான இருக்கான்? மகனை வச்சு அப்பாவை பிடிப்போம்...’’  
‘‘மகளை வச்சு அப்பாவை பிடிப்பாங்களா ஆன்ட்டி..?’’
பங்களாவுக்குள் நுழைந்ததுமே கேட்ட ‘குந்தி’யை வியப்புடன் பார்த்தாள் விஜயலட்சுமி.
‘‘எதுக்கும்மா இப்படி கேட்கற?’’

‘‘அப்பாதான் ஆன்ட்டி அப்படி சொல்லி அனுப்பினாரு. அதனாலதான் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன். நீங்க புல்தரைல உட்கார்ந்துட்டு இருந்ததை முன்னாடியே பார்த்துட்டேன். ஆனாலும் பயமா இருந்தது. ஒருவேளை நீங்க வேற யாராவதா இருந்தீங்கன்னா..?’’
மழலையுடன் பேசிய சிறுமியை அள்ளி அணைத்தாள் விஜயலட்சுமி. ‘குந்தி’யின் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது. அளவுக்கு மீறி இவள் அப்பா பயமுறுத்தியிருக்கிறார். பேசாமல் அவரும் உடன் வந்திருக்கலாமே... எதற்காக தனியாக தன் மகளை அனுப்பியிருக்கிறார்?
‘‘உன் கூட அப்பா வரலையாம்மா?’’
‘‘இல்ல ஆன்ட்டி. அவர் ஆஸ்பிட்டல்ல இருக்கார்...’’

‘‘ஆஸ்பிட்டல்லயா?’’ - அதிர்ந்த விஜயலட்சுமி, ‘‘உடம்புக்கு என்ன?’’ என்று படபடப்புடன் கேட்டாள். ஏதோ புரிவது போலிருந்தது.
‘‘தெரியலை ஆன்ட்டி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு...’’
‘‘பயப்படக் கூடாதும்மா. அவருக்கு ஒண்ணும் ஆகாது. அதான் நாங்க இருக்கோமே...’’ - அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
‘‘நீங்க எதுக்கு ஆன்ட்டி அழறீங்க?’’
‘குந்தி’ கேட்ட பிறகுதான், தான் அழுகிறோம் என்பதே விஜயலட்சுமிக்கு புரிந்தது.
என்னவென்று சொல்வாள்? ‘மரணப்படுக்கையில் இருக்கும்போதுதான் வாரிசை வளர்க்கும் பொறுப்பை ரகசியக் குழுவைச் சேர்ந்த மற்றவர்களிடம் ஒப்படைப்போம்.
அப்படித்தான் நீ வந்து சேர்ந்திருக்கிறாய். இனி, உன்னை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது’ என்றா...
‘‘கண்ணுல தூசி விழுந்துடுச்சு...’’
‘‘அச்சச்சோ... காட்டுங்க! நான் ஊதறேன்...’’ என்றபடி விஜயலட்சுமியின் கண்களை விரித்து ஊதினாள். அவளை அப்படியே உச்சி முகர்ந்தாள் விஜயலட்சுமி. அடிவயிறு குளிர்ந்தது. ஆயியின் கருணையே கருணை. குழந்தை பாக்கியம் இல்லை. தத்தெடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டதற்கு அப்போது ஆயி பதில் சொல்லவில்லை. இப்போது ‘குந்தி’யை அனுப்பி தன் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

‘‘குழந்தைக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே...’’
‘‘அப்பா சொல்லிக் கொடுத்தாங்க...’’ - வெட்கத்துடன் சொன்ன ‘குந்தி’, ‘‘ஆன்ட்டி, இங்க ஒரு அங்கிள் இருப்பார்னு அப்பா சொன்னாரே..?’’ என்று சுற்றிலும் பார்த்தபடியே கேட்டாள்.
தன் கணவர் ருத்ரனை கேட்கிறாள். ‘‘வெளில போயிருக்காரும்மா... வந்துடுவாரு. அதுக்குள்ள நீ டின்னரை முடிச்சுடு...’’ என்றபடி அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். சுடச்சுட தோசையை வார்த்து ஊட்டி விட்டாள். தாய்மையின் சுகத்தை அனுபவித்தபோதும் தொண்டையில் சிக்கிய முள்ளாக அந்தக் கேள்வி மட்டும் விஜயலட்சுமியை குடைந்து கொண்டே இருந்தது.
நல்லவேளையாக பாதுகாப்பான இடத்துக்கு ‘குந்தி’ வந்துவிட்டாள். இவளைப் போலவே பதினைந்து வருடங்களுக்கு முன் தாராவும் நம்மிடமோ அல்லது நம்மைச் சேர்ந்தவர்களிடமோ வந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்காக கண்காணாத இடத்துக்கு சென்றாள்? அவளுக்கும் அவள் அப்பாவுக்கும் என்னதான் பிரச்னை? தாராவைத் தேட வேண்டாம் என்று ஏன் ஆயி சொன்னார்? இப்போது தாரா எங்குதான் இருக்கிறாள்?
‘மும்பையில்தான் இருப்பேன்... மும்பையிலேயேதான் வாழ்வேன்... எந்தக் காரணத்தைக் கொண்டும் மதுரை செல்ல மாட்டேன்...’ என்ற முடிவுடன் விமலானந்தர் தன் கையில் திணித்த காகிதத்தை எடுத்து, அதில் எழுதப்பட்டிருந்த ஸ்லோகத்தை சத்தம் போட்டுப் படித்தாள் தாரா.

‘கோபி பாக்யா மதுவ்ரதா; சிருங்கிசோ தாதி சந்திகா; கால ஜீவிதா கடவா; கால ஹலா ரசந்தரா...’
கிருஷ்ணருக்கான ஸ்லோகம் என்ற பெயரில் ஏதோ கணித ஃபார்முலா. யோசனையுடன் அந்தக் காகிதத்தை வீசி எறிய இருந்தவள், தன் முடிவை மாற்றிக் கொண்டு முட்டி போட்டு அமர்ந்தாள். ஸ்படிக மகா மேருவுக்குக் கீழே அந்தக் காகிதத்தை வைத்தாள்.
தெரிந்தோ, தெரியாமலோ அவள் செய்த அந்தச் செயல்தான் அவள் உயிரைக் காப்பாற்றியது. அவள் மண்டையைப் பிளப்பதற்காக வந்த புகை வடிவிலான கதாயுதம், இப்போது குறி தவறி வெட்டவெளியில் தன் கடமையை முடித்துவிட்டு மறைந்தது. எப்படி குருக்ஷேத்திரப் போரில் கர்ணன் ஏவிய பிரம்மாஸ்திரம் அர்ஜுனனின் தலையைத் தாக்காதபடி தேரின் சக்கரத்தை பூமியில் அழுத்தி கிருஷ்ணர் காப்பாற்றினாரோ, அப்படி அவரது ஸ்லோகம் இப்போது தாராவின் உயிரைக் காப்பாற்றிவிட்டது.
இதைப் பற்றி எதுவும் அறியாமல் ஸ்படிக மகா மேருவையே தாரா பார்த்துக் கொண்டிருந்தபோது, அவளது செல்போன் சிணுங்கியது. அலுவலக நம்பர்.
‘‘ஹலோ... தாரா ஹியர்...’’
‘‘தொந்தரவுக்கு மன்னிக்கணும் மேம்...’’
‘‘பரவால்ல... சொல்லுங்க!’’
‘‘காலைல ஆறு மணிக்கு உங்க ஹாஸ்டல் வாசல்ல கார் ரெடியா இருக்கும்... குட் நைட் மேம்!’’
‘‘ஒரு நிமிஷம்... டிரைவர் பேர் என்ன?’’

‘‘ஆதித்யா...’’
‘‘ஆதித்யா?’’
‘‘யெஸ் மேம். தமிழன்தான். முழுப் பேரு ஆதித்ய கரிகாலன்...’’
‘‘ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்ட இடம் இதுதானா?’’
சுற்றிலும் பார்த்தபடியே சூ யென் கேட்டான். புதர்களுக்கு மத்தியில் இருந்த அந்தப் பாழடைந்த மண்டபத்தின் வரைபடம் இருட்டிலும் துல்லியமாகத் தெரிந்தது. சதுர வடிவில் கொஞ்சம் பெரிய மண்டபம். நான்கு புறமும் தூண்கள். மேலே கல்லாலான கூரை. தரையில் இருந்து மூன்று படிக்கட்டுகள். பிறகு அமர்வதற்கான இடம். அங்கு தூசு இல்லை. அடிக்கடி வந்துபோகும் இடம் போல் பளிச்சென்று இருந்தது.
‘‘ம்...’’ என்று உறுமியபடியே அமர்ந்தான் ரவிதாசன். சற்று இடைவெளி விட்டு தூணில் சாய்ந்தபடி சூ யென் உட்கார்ந்தான்.
‘‘பரமேஸ்வர பெருந்தச்சன் எப்ப வருவாரு?’’

‘‘வர்ற நேரம்தான்...’’
‘‘இந்த மண்டபத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு...’’ - சொன்ன சூ யென்னை புன்னகையுடன் பார்த்தான் ரவிதாசன்.
‘‘நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனல்ல பார்த்திருப்ப...’’
‘‘ஆமா. ஒன்பதாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி கடல்ல மறைஞ்சு போன ‘அட்லான்டிஸ்’ நகரத்தைப் பத்தி காட்டும்போது, இந்த டிராயிங்கையும் காண்பிச்சாங்க...’’
‘‘பிளாட்டோ சொன்ன வர்ணனைகளை வச்சு தீட்டப்பட்ட ஓவியம் அது. சாக்ரடீஸோட சீடரும், அரிஸ்டாட்டிலோட குருவுமான பிளாட்டோதான் முதன்முதல்ல ‘அட்லான்டிஸ்’ பத்தி சொன்னாரு. அவரோட ‘தைமியஸ் அண்ட் க்ரிடியஸ்’ அப்படீங்கற உரையாடல்ல விலாவாரியா இது பத்தி விளக்கியிருக்காரு. முன்னேறிய நாகரிகம் அங்க வாழ்ந்ததாகவும், சகல கலைகளும் அங்க வளர்ந்திருந்ததாவும், போர்க் கலைகள்ல அவங்க முன்னேறியிருந்ததாவும், சூரியனுக்குள்ள ஊடுருவற கனிமங்கள் பத்தி அவங்க தெரிஞ்சு வச்சிருந்ததாவும் சொல்லியிருக்கார்...’’
‘‘நினைவுல இருக்கு. அது வெறும் கட்டுக்கதைன்னுதான் உலகம் பல்லாயிரம் வருஷங்களா நம்பியிருந்தது. ஆனா, 1999ல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஸ்பெயின் பக்கத்துல ‘அட்லான்டிஸ்’ நகரத்தோட நுனியைக் கண்டுபிடிச்ச பிறகு, பிளாட்டோ சொன்னது உண்மைன்னு விஞ்ஞானிகள் ஏத்துக்கிட்டாங்க...’’
சொன்ன சூ யென்னைப் பார்த்து கடகடவென்று சிரித்தான் ரவிதாசன்.
‘‘எதுக்கு சிரிக்கறீங்க?’’

‘‘நுனியைப் பார்த்தே உலகம் மிரண்டு போயிருக்கே... இன்னும் முழு நகரத்தைப் பத்தியும் தெரியும்போது எப்படி ரீயாக்ட் ஆவாங்கன்னு யோசிச்சேன்... ஏன்னா, அந்த ‘அட்லான்டிஸ்’ல இருந்த யுனிவர்சிட்டிக்கு ஆசிரியர்களை அனுப்பினதே கபாடபுரத்துல இருந்த பல்கலைக்கழகம்தான்..!’’
(தொடரும்)