மலையாள ஹீரோவுடன் கல்யாணமா?





‘ரிலாக்ஸ்’ என்கிற வார்த்தையை எழுதிப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு மலையாளத்தில் பிஸி, ரம்யா நம்பீசன். ‘கால்ஷீட் கொடுத்த படங்களை மடமடவென்று முடித்துக் கொடுத்துவிட்டு கல்யாணத்துக்கு தயாராகப்போவதால்தான் இத்தனை பிஸி’ என ரம்யாவை குறி வைத்து செய்திகள் மீடியாக்களில் கசிய.. ரம்யா நம்பருக்கு தட்டினோம்.

‘‘லஞ்ச் பிரேக்ல கூட ரெஸ்ட் எடுக்க முடியாத அளவுக்கு ஷூட்டிங் போயிட்டிருக்கு’’ என்றவர், நமக்காக நேரம் ஒதுக்கிப் பேசினார்.

‘‘மலையாளத்தில் இப்போ நீங்கதான் நம்பர் ஒன்னாமே?’’
‘‘முதல் கேள்வியே அதிரடியா இருக்கே! நம்பர் ஒன் என்று நான் சொல்லலைங்க. எனக்கு அதில நம்பிக்கையும் இல்ல. போன வருஷம் ஆறு படங்கள், இந்த வருஷம் ஆறு படங்கள்னு பிஸியா இருக்கறது உண்மைதான். நான் மட்டுமில்லாம இன்னும் சில நடிகைகள் இங்க பிஸியாதான் இருக்காங்க. நம்பர் ஒன் இடத்தில் யார் இருக்காங்கன்னு கணக்கு பார்க்க ஆரம்பிச்சா கவலையும் பொறாமையும்தான் மிச்சமாகும். அதனால என் வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கேன்!’’



‘‘மலையாளம் தாண்டி, தமிழ் கமிட்மென்ட்ஸ் இல்லையா?’’
‘‘சி.எஸ்.அமுதன் டைரக்ஷனில் ‘ரெண்டாவது படம்’ நடிச்சி முடிச்சிருக்கேன். இன்னொரு படத்துக்குக் கேட்டிருக்காங்க. எப்போ ஷூட்டிங்னு தெரியல. அது என்ன படம்னு டைரக்டர் சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்றது நல்லாயிருக்காது. ‘பீட்சா’வுக்குப் பிறகு தமிழில் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா என் மனசுக்குப் பிடிச்ச, எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கறேன்.’’

‘‘பாடகியாகவும் கலக்கிட்டு இருக்கீங்க போல..?’’
‘‘ ‘இவன் மேகரூபன்’ படத்திலதான் முதல்முறையா பாடினேன். நல்ல ரெஸ்பான்ஸ் வந்தது. இது வரைக்கும் ஆறு பாடல்கள் பாடிட்டேன். ‘தட்டத்தின் மறையத்து’ படத்தில் நான் பாடின ‘முத்துச்சிப்பி போலொரு...’ பாட்டு கேரளாவில் ரொம்ப பிரபலம். நிறைய பேர் ரிங்டோனா வச்சிருக்காங்க. இந்தப் பாட்டுக்காக சிறந்த பாடகிக்கான விருதுகளும் கிடைச்சிருக்கு. தமிழில் வாய்ப்பு கிடைச்சா பாடத் தயாரா இருக்கேன்!’’

‘‘அஜித், விஜய்னு மாஸ் ஹீரோக்களோட நடிக்கணும்... டோலிவுட், பாலிவுட் பறக்கணும் என்ற ஆசையெல்லாம் கிடையாதா?’’
‘‘மறுபடியும் சொல்றேன்... கதை பிடிச்சிருந்தா அது எந்த ஹீரோவா இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு கால்ஷீட் கொடுத்திடுவேன். ‘பீட்சா’வில் எல்லாமே புதுசுன்னு பார்த்திருந்தா, அந்தப் படத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன். நல்ல கதைங்கறதால ஒரு ஷார்ட் ஃபிலிம்ல கூட நடிச்சிருக்கேன். மாஸ் ஹீரோவோட நடிக்க எல்லாருக்கும்தான் ஆசை இருக்கும். ஆனா, அது அமையணும். அசினா இருந்தாலும் அமலா பாலா இருந்தாலும் தமிழில் நல்ல கேரக்டர் பண்ணி பெயர் வாங்கின பிறகுதான் மற்ற மொழிப் படங்களில் பெரிய ஹீரோக்களோட நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஏற்கனவே தெலுங்கில் மூன்று படங்கள் பண்ணிட்டேன். ரொம்ப பெருசா ஆசைப்படாமல் கடுமையாக உழைச்சுக்கிட்டிருக்கேன். உண்மையான உழைப்புக்கும், திறமைக்கும் கண்டிப்பா ஒருநாள் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.’’



‘‘மலையாள நடிகர் உன்னி முகுந்தனுடன் உங்களுக்கு காதல், கல்யாணம் ஆகப்போகுதுன்னு செய்திகள் கசியுதே...’’
‘‘எல்லாமே பொய். பொய்ச் செய்தி எழுதி பரபரப்பு தேடிக்கிற மீடியாக்காரங்க யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. இதில துளியளவும் உண்மையில்லை. நான் யாரையும் லவ் பண்ணல. இந்த நியூஸ் என்னை எந்த விதத்திலும் பாதிக்கல. தப்பா எழுதினவங்க மேல எனக்கு கோபமும் இல்ல. என்னோட வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும்போது. யார்கிட்டயோ கோபத்தைக் காட்டி நேரத்தை வீணாக்கி டென்ஷனை கூட்டிக்க விரும்பல...”

‘‘உன்னி முகுந்தனுடன் லவ் இருப்பதால்தான் ‘இது பத்திரமணல்’ படத்தில் அவ்வளவு நெருக்கமா நடிச்சீங்களாமே?’’
‘‘நான்தான் லவ் இல்லேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா கேள்வி? கதையின் சூழ்நிலைக்கேற்ப நடிக்கிறதை தப்பான கண்ணோட்டத்தோட பார்க்கிறவங்க புதுசு புதுசா கண்டுபிடிச்சி ஒரு கதை கட்டிவிடுவாங்க. இதுக்கு நான் பதில் சொல்லிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை’’ என்ற ரம்யாவுக்கு இது கோபம் வரும் நேரம்.
அப்ப நாம போனை வைக்கிற நேரம்!
- அமலன்