எதிர்நீச்சல் : சினிமா விமர்சனம்





‘குஞ்சிதபாதம்’ என அப்பா அம்மா வைத்த பெயரோடு அல்லல்படும் இளைஞனின் கதை. காமெடியாகக் கொண்டு போகப் பயன்படும் என்பதால், சரசரவென்று பிடித்துக்கொண்டு மேலேறுகிறார்கள். ஆனால் இடைவேளைக்குப் பிறகு நமக்கு கிடைப்பது உணர்ச்சிகள் நிரம்பிய வேறொரு கதை. பொது இடத்தில் சுதந்திரமாக இருக்க விடாமல் சங்கடப்படுத்தும் கூச்சத்தில் சிவகார்த்திகேயன் பெயர் மாற்றப் போக, அதன் விளைவாக காதலில் துயரங்கள் வர, இறுதியில் ‘பெயரில் என்ன இருக்கிறது... சாதனைதான் சிறப்பு’ என மெசேஜ் சொல்வதுதான் ‘எதிர்நீச்சல்’.

இரு வேறு கதைகளை மென்மையாகவும் துடிப்புடனும் இணைக்கும் விதத்தில் சிறப்புப் பெறுகிறார் அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார். புதிது என்று பதறாமலும், கதையைக் கொண்டுபோகும் விதத்தில் தடுமாற்றம் இல்லாமலும் இருப்பதற்கு நல்வரவு.

அடுத்தடுத்து கவனம் பெறும்விதத்தில் திரை நிரப்புகிறார் சிவகார்த்திகேயன். பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் காமெடியை இயல்பாக அவிழ்த்து விடும் பாவனையில் அடுத்த கட்டம் போயிருப்பது கண்கூடு. அவர் வாய் திறக்கும் முன்பே சிரிக்கக் காத்திருக்கும் கூட்டத்தை, நகைச்சுவை நடிகருக்கு ஈடாக சேர்த்து வைத்திருப்பது பலம். ஸ்கூல் டீச்சர் பிரியா ஆனந்தை முதலில் பார்த்த இடத்திலிருந்தே பின் தொடரும் லாவகம், ஓனர் வீட்டுப் பையனை தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குப் போகிற அவசரம் என காதலின் ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லப்படுகிற சிவகார்த்திகேயனின் சிக்சர் கமென்ட்டுகளுக்கு தியேட்டரில் விசில். ஆகக் கடைசியாக, கிடைத்து விட்டார் ‘மிடில்கிளாஸ்’ ஹீரோ.



சிவகார்த்திகேயனும், நண்பன் சதீஷும் சந்திக்கிற காட்சியெல்லாம் சிரிப்பு வெடி. ‘வெளிச்சப் பூவே’ பாடலில் பிரியா ஆனந்த், நுரைக்கும் கடல் வெளியில் தருவது அழகான அளவுகளுடன் கூடிய சுத்தமான பிம்பம். அதில் கிறங்கடிக்கிறது சிவகார்த்தி - பிரியா ஆனந்த் ஜோடி. பயப்பட வேண்டாம் சிவகார்த்தி... இன்னும் ஹீரோயினை நெருங்கலாம். இப்ப நீங்க ஹீரோ பாஸ்!

இடைவேளைக்குப் பின்னான ஸ்போர்ட்ஸ் கதை, கதைக்குப் பொருத்தமான பின் இணைப்பு. கடுகடுப்பும், எரிச்சலும், கவனமும் கொண்டிருக்கிற ‘கோச்’ நந்திதா கதையில் நுழைந்த பிறகு, முக்கோண காதலாக உருவெடுத்துவிடுமோ எனப் பயந்தால் டைரக்டர் கொடுத்திருப்பது வேறு வகை யதார்த்தம். நந்திதாவின் ஃபிளாஷ்பேக் நீளம்தான் பொறுமையை செமத்தியாக சோதிக்கிறது. அதில் கத்திரி வைத்திருந்தால் இன்னும் அழகு.

ஒரு படத்தோடு முடிந்துவிட்டதோ என நினைக்க வைத்த அனிருத் கொடுத்திருப்பது ஆனந்த அதிர்ச்சி. பின்னணியிலும் செமத்தியாக ஸ்கோர் செய்து, திரையிலும் முகம் காட்டி மறைகிறார். என்ன செய்ய, அவருக்கும் ஹீரோவாக நல்வரவு சொல்ல வேண்டியதுதான்! அவருக்கென்ன... ஹீரோவாகும் முன்பே கிஸ்ஸிங் சீனெல்லாம் பார்த்தவராச்சே!

‘துறுதுறு’ ஒளிப்பதிவுக்கு வேல்ராஜின் கேமரா உத்திரவாதம் ஆகிவிட்டது. மாதத்திற்கு ஒரு படம் வந்தால் எப்படி பாஸ்? கண்ணு வைக்கப்போறாங்க. தனுஷ் - நயன்தாரா குத்துப்பாட்டில் தனுஷின் வேகம், படு த்ரில்! முதல் பாதியில் சிரிப்பலைகளை உண்டாக்கி, இரண்டாவது பாதியில் மனதைத் தொடுவது டைரக்டரின் சாமர்த்தியம்!
எதிர்நீச்சல்... இந்த வெயிலுக்கு இதம்!
- குங்குமம் விமர்சனக் குழு