காசு செலவின்றி ஏசி!





வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் போட்டுப் பராமரிக்கலாம் என்கிறார்களே... என்னென்ன செடிகள் வைக்கலாம்? அதனால் என்னென்ன பலன் கிடைக்கிறது?
- ரா.மல்லிகா, மதுரை.
பதில் சொல்கிறார் சுப்பிரமணிய ராஜா (பசுமைக்குடில் ஆர்வலர், ராஜபாளையம்.)

முதலில் மொட்டை மாடியில் தோட்டம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் மாடியில் தாவரங்களைப் பயிரிட்டால், அதனால் சீலிங் பாதிக்கப்படாதா என்றெல்லாம் கேட்கிறார்கள். மொட்டை மாடியில் தோட்டம் என்றால், வீட்டின் முன்பாகவோ அல்லது கொல்லைப்புறத்திலோ செடிகள், பூந்தொட்டிகள் வளர்ப்பதில்லையா? அதை வீட்டு மாடியில் வளர்க்கிறோம் அவ்வளவுதான். சிறு வித்தியாசம்... மாடியில் பரந்த இடம் கிடைக்குமாதலால் தொட்டிகளுக்குப் பதில் சாக்குகளை வைத்துக்கொள்ளலாம்.

சாக்குகளில் பாதியளவு மண் நிரப்பி, அதில் செடிகளை நடலாம். பூஞ்செடிகள் முதல் மிளகாய், கத்தரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறிச் செடிகள், கீரைகள், அவரை, பாகற்காய் போன்ற படர்கிற கொடிகள் வரை எதையும் வளர்க்கலாம். கொடிகள் படர்வதற்கு வசதியாக குச்சிகள் கொண்டு குடில் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இந்தச் செடிகளின் வேர்கள் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் செல்வதில்லை என்பதால், மாடியின் தளத்துக்கு இவற்றால் ஆபத்து இல்லை. தண்ணீர் ஊற்றும்போது தரையில் படாதபடி ஊற்றிக் கொள்ள வேண்டும். உரங்கள் அவரவர் விருப்பம். என்னிடம் ஆலோசனை கேட்பவர்களுக்கு இயற்கை உரத்தையே பரிந்துரைக்கிறேன். இதில் வேலை என்றால், தினமும் இரு வேளை தண்ணீர் பாய்ச்ச வேண்டியது மட்டும்தான். பலன்கள் என்று பார்த்தால் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைத்து விடுகின்றன. கொளுத்தும் வெயில் காலங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்காமல் செடிகள் குளிர்ச்சி தருகின்றன. காசு செலவில்லாமல் ஏசி போட்ட எஃபெக்ட் கிடைக்கிறது. மேலும் இதில் தீவிரமாக இறங்கி விட்டவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கும் கூட!

பிசினஸ் விஷயமாக சென்னைக்கு வாரம் இருமுறை ரயில் பயணம் செய்பவன் நான். சமீபமாக ரயில் பயணங்களின்போது, எலிகளின் அலப்பறை தாங்க முடியாததாக உள்ளது. உணவுப் பண்டங்கள், லக்கேஜ்களை அவை பதம் பார்ப்பது பற்றி டிக்கெட் பரிசோதகரிடம் சொன்னால், ‘எலிகளை ஒழிப்பது என்னுடைய வேலை இல்லை’ என்கிறார். இது குறித்து யாரிடம் புகார் தரலாம்?
- சேதுராமன், வள்ளியூர்.

பதில் சொல்கிறார் மக்கள் தொடர்பு அதிகாரி, தெற்கு ரயில்வேரயில் ஒரு மொபைல் வீடு. நான்கு நாள் வரை பயணிக்கும் தொலைதூர ரயில்கள் எல்லாம் கூட இருக்கின்றன. ரயிலிலேயே தூங்கி, எழுந்து, குளித்து, சாப்பிட்டு தொலைதூரம் பயணம் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் வீட்டில் இருக்கும் எலி, எறும்பு, கரப்பான் பூச்சி போன்றவை எப்படியாவது வந்து விடுகின்றன.



ரயில்வே மெக்கானிகல் டிபார்ட்மென்டில் ‘ஃப்யூமிகேஷன் யார்டு’ என இதற்கென ஒரு தனிப்பிரிவே இயங்கி வருகிறது. சென்னையில் பேசின்பிரிட்ஜில் இருக்கிறது இந்த யார்டு. ரயில் பெட்டிகள் குறிப்பிட்ட இடைவெளியில் இங்கு கொண்டு வரப்பட்டு, கிருமி நாசினி கலந்த புகைமூட்டத்துக்கு உள்ளாக்கப்பட்டு, எலி, கரப்பான் பூச்சி போன்றவற்றை விரட்டவும் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

என்னதான் பெட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும், ஆங்காங்கே ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும்போது, அங்கு குடியிருக்கும் எலிகள் ரயிலில் ஏறிவிடுகின்றன. இது தொடர்பாக ரயில் நிலையங்களுக்கும் நாங்கள் அவ்வப்போது சர்க்குலர் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். அது தவிர, பயணிகள் தரும் எழுத்துப்பூர்வமான புகாருக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அப்படி புகார் தர நினைப்பவர்கள் ‘மக்கள் தொடர்பு அதிகாரி, தெற்கு ரயில்வே, சென்னை - 600003’ என்ற முகவரியில் தபால் மூலமாகவோ, நேரிலோ தரலாம். அல்லது, பயணம் தொடங்கிய - முடிவுற்ற ரயில் நிலையத்தின் மேலாளரிடமும் புகாரைத் தரலாம். புகாரில் தாங்கள் பயணித்த வண்டியின் பெயர், எண், கோச் உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக இருக்கும்படி, பயணச்சீட்டின் நகலை இணைக்க வேண்டியது அவசியம்.