கடைசி பக்கம் : நிதர்ஸனா





கல்லூரித் தோழிகள் அந்த இருவரும். திருமணத்துக்குப் பிறகு தொடர்பறுந்து போயிருந்தார்கள். பிஸியான நகரத்து வீதி ஒன்றில் திடீரென சந்தித்துக்கொண்டபோது இருவர் முகத்திலும் ஆச்சரியம்... திகைப்பு... சந்தோஷம். பரஸ்பரம் குடும்பங்களை விசாரித்துக் கொண்டனர்.

‘‘காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் நான் வேற சில கோர்ஸ்கள் படிச்சேன். மன அழுத்தத்தை எப்படி சரி பண்றதுன்னு நான் எடுக்கற கிளாஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. உனக்குத் தெரியுமா... இந்த விஷயத்துல இந்த சிட்டியிலயே நான்தான் டாப் ஆலோசகர். பெரிய பெரிய கம்பெனிகளுக்கு என்னைத்தான் கூப்பிடறாங்க!’’ என்றாள் வர்ஷா.
‘‘பெங்களூருல இருந்து போன மாசம்தான் நாங்க இங்க வந்தோம். நானும் என் கணவரோட சேர்ந்து வேலைக்கு போய்க்கிட்டு இருந்தேன். குழந்தைங்க பிறந்தபிறகு எனக்கு மன அழுத்தம் அதிகமாகிட்டதா சொல்லி, என்னை வேலைக்குப் போக வேண்டாம்னு கணவர் சொல்லிட்டார்’’ என்றாள் தீப்தி.

பேசிக்கொண்டே இருவரும் வர்ஷா வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ‘‘கொஞ்சம் வெயிட் பண்ணு. சமையலை முடிச்சிடறேன். சாப்பிட்டுட்டு கிளம்பலாம். அதுவரைக்கும் இந்த டி.வி.டி பாரு... மன அழுத்தத்தை சரி பண்றது தொடர்பா ஒரு கம்பெனியில நான் எடுத்த கிளாஸ்’’ என்று ஓடவிட்டுப் போனாள் வர்ஷா.

பத்து நிமிடங்களில் கிச்சனுக்கு வந்தாள் தீப்தி. ‘‘நல்லா இருக்கு. ஆனா எனக்கு அது யூஸ் ஆகுமான்னு தெரியலை’’ என்றாள்.

வர்ஷாவுக்கு ஆச்சரியம். ‘‘அது ஒரு மணி நேர கிளாஸ். பத்து நிமிஷத்துல நீ எப்படி பார்த்தே?’’
‘‘ஃபாஸ்ட் ஃபார்வர்ட் போட்டு ஓடவிட்டேன்’’ என்ற தீப்தியின் பிரச்னை வர்ஷாவுக்கு இப்போது புரிந்தது.
காத்திருக்கும் பொறுமையற்றவர்கள்
மன நிம்மதி இழக்கிறார்கள்!