நிழல்களோடு பேசுவோம்





கடைசி அழைப்பு
மதுரையைச் சேர்ந்த நண்பன் ஒருவன் இரவு 9 மணிக்கு தொலைபேசியில் அழைத்து, ‘‘இது தற்கொலைக்கு முந்தைய எனது கடைசி அழைப்பு’’ என்றான். குரல் உடைந்திருந்தது. குடி மட்டுமல்ல, துக்கத்தின் கனமும் அதில் கலந்திருந்தது. ‘‘எங்க இருக்கே’’ என்று கேட்டேன். ‘‘சென்னையில்தான்’’ என்றான். ‘‘எந்த இடத்தில் இருக்கே... இப்ப வர்றேன்...’’ என்றேன். ‘‘நான் போற இடத்துக்கு நீங்க வர முடியாதுண்ணே’’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான். நான் அவனது எண்ணிற்கு மறுபடி அழைத்தேன். போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. திரும்பத் திரும்ப முயற்சித்துக்கொண்டிருந்தேன். வேறு யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. அவனது நெருங்கிய நண்பர்களையோ, அவர்கள் வீட்டிலிருக்கும் வேறு யாரையுமோ எனக்குத் தெரியாது.
மதுரையிலிருந்து அவனுக்கும் எனக்கும் பொதுவான ஒரு நண்பர் அழைத்தார். அவருக்கும் அதே போல இறுதி அழைப்பு வந்திருக்கிறது. ‘‘அண்ணா, பயமா இருக்கு... ஏதாவது பண்ணுங்கண்ணா’’ என்றார். என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. அந்த நண்பரை, ‘‘வீட்டிற்குப் போய் பார்க்கிறீங்களா?’’ என்று கேட்டேன். ‘‘போகலாம்... ஆனா விஷயம் தெரியாம போய்ச் சொன்னா களேபரம் ஆயிடும்’’ என்றார்.

சம்பந்தமில்லாமல், எப்போதோ பார்த்த அவனது சின்ன மகளின் ஞாபகம் எனக்கு வந்தது. அந்தச் செய்தியை அவளிடம் சொல்பவனாக நான் இருந்துவிட்டால் என்ன செய்வது என்கிற நினைப்பு எழுந்ததும், எனக்குப் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எங்கோ தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்துவிட்டு எல்லா இணைப்புகளையும் துண்டித்துக்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட ஒருவனை எப்படித் தடுத்து நிறுத்துவது? எனக்கு ஒரு புத்திசாலித்தனமான யோசனை வந்தது. ‘சைபர் க்ரைம் பிரிவில் எனக்குத் தெரிந்த ஒரு உயரதிகாரி இருக்கிறார். அவரிடம் அவனது மொபைல் எண்ணைக் கொடுத்து, கடைசியாக அவன் எந்த இடத்திலிருந்து போன் செய்தான் என்று கண்டுபிடித்து...’

மணியைப் பார்த்தேன். இரவு பதினொன்றரை. இந்த நேரத்தில் ஒருவரைத் தொந்தரவு செய்வது தார்மீகமாக சரியில்லை என்று தோன்றியது. ஆனால் எனக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை. பொதுவாக எனக்கு ஒரு ராசி உண்டு. நான் யாருக்காவது அவசரம் என்று அழைத்தால் அவர்களது எண் உத்திரவாதமாக ‘நாட் ரீச்சபிள்’ என்று வரும். அன்றும் வந்தது.
இரவெல்லாம் தூங்க முடியவில்லை. லாட்ஜ்களில் நிராதரவாக தற்கொலை செய்துகொள்பவர்களைப் பற்றி நான் ஒரு நெடுங்கவிதை எழுதியுள்ளேன். அதன் ஒவ்வொரு வரியும் மறுபடி மறுபடி நினைவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு எனது தந்தை மதுரை நகரின் மருத்துவமனை ஒன்றில் இறந்தபோது, அவரது உடலை அவன்தான் என் ஊருக்கு எடுத்துச் சென்றான். என் கண்களில் நீர் திரையிட்டது. இரவு முழுக்க, அடுத்த நாள் காலையிலிருந்து மாலை வரை அவனது எண்ணை பல நூறு முறை அழைத்திருப்பேன். எங்கோ அனாதையாக இறந்து கிடப்பவனின் அருகில் கிடக்கும் போன் போலவே அது மௌனமாக இருந்தது.



என்னால் பொறுக்க முடியவில்லை... முந்தின நாள் பேசிய மதுரை நண்பரை அழைத்து, உடனடியாக அவன் வீட்டிற்கு ஒரு ஆளை அனுப்பி அவர்கள் வீட்டில் ஏதாவது தகவல் தெரியுமா எனக் கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். அவர் அனுப்பிய ஆள் அரை மணி நேரத்தில் போன் செய்தார். ‘‘ஏதாவது தகவல் தெரியுமா?’’ என்று பதற்றமாகக் கேட்டேன். ‘‘அவன் வீட்லதான் சார் இருக்கான்... எதுவும் சொல்லணுமா சார்?’’ என்றார். ‘‘முடிந்தால் அவனைக் கொன்னுடுங்க’’ என்றேன்.

இது என்ன விளையாட்டு? எதற்காக அவனை அவ்வளவு நேசிக்கும் என்னிடம் இப்படி விளையாடினான்? உங்களுடனும் யாராவது ஒருவர் இதை எப்போதாவது செய்திருக்கக் கூடும். அல்லது நீங்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதை மற்றவர்களிடம் செய்ய விரும்பியிருக்கக் கூடும். நான் செய்ய விரும்பியிருக்கிறேன்; செய்ததில்லை... அவ்வளவுதான்!
எனது கோபம், வருத்தம் எல்லாவற்றையும் தாண்டி அவனைப் புரிந்துகொள்ளவே விரும்புகிறேன். அது மட்டுமே ஒரு எழுத்தாளனுடைய வேலை இல்லையா? வெறுமனே புரிந்துகொள்வது. தனது இறப்பை தானே அறிவித்துக்கொள்வது நமது மனதின் விசித்திரங்களில் ஒன்று. தனது மரணத்தை நமது மனம் எப்போதும் ஒரு நாடகம் போல நிகழ்த்திப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. நான் என் சாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், ‘என் இறுதிச் சடங்கிற்கு யாரெல்லாம் வருவார்கள், யாரெல்லாம் வர மாட்டார்கள்’ என்பதை மட்டுமே யோசித்திருக்கிறேன். குறிப்பிட்ட சிலருக்கு என் சாவுச் செய்தி தெரியாமலே போய்விடுமோ என்று பயந்திருக்கிறேன்.

சாவு என்பது உண்மையிலேயே ஒரு நாடகம் என்பதைத் தவிர, அதற்கு எந்த அர்த்தமும் இல்லையா?
தற்கொலை செய்துகொள்பவர்கள் அல்லது தற்கொலை பிரகடனம் செய்பவர்கள் உண்மையில் இந்த நாடகத்தை ஏன் ஆட விரும்புகிறார்கள்? அது சுய அழிவிற்கான விருப்பம் அல்ல. மாறாக அது, கருணைக்கான ஒரு பிரார்த்தனை. அன்பிற்கான ஒரு கண்ணீர். தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவரும் யாரோ சிலரின் கண்ணீரின் பொருட்டே இதைச் செய்ய விரும்புகிறார்கள். ஒரு கல்லை கனியச் செய்வதுபோல தனக்காக ஒருமுறை இந்த உலகத்தை கனியச் செய்ய விரும்புகிறார்கள்.

ஆனால் தற்கொலைப் பிரகடனம் செய்பவர்கள் கொஞ்சம் புத்திசாலிகள். அவர்களுக்கு ‘இந்த உலகத்தை கனியச் செய்வது அவ்வளவு சுலபமல்ல’ என்று சந்தேகம் வந்துவிடுகிறது. அப்போது அவர்கள் அரைகுறையான தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். பாதி அளவே தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அறுந்து விழக்கூடிய கயிறுகளிலோ துணிகளிலோ தூக்கிட்டுக்கொள்கிறார்கள். உயரம் குறைவான மாடிகளில் இருந்து விழுகிறார்கள்.

என் நண்பனைப் போல வெறுமனே மிரட்டுகிறவர்கள் தங்கள் மரணம் என்ற மருந்தை இந்த உலகத்திற்குக் கொடுத்து கொஞ்சம் சோதித்துப் பார்க்க விரும்புகிறார்கள். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்பதுதான் அவர்கள் விருப்பம். அது சரியாக வேலை செய்தால் அவர்கள் மனம் நிம்மதி அடைந்துவிடும். இந்த உலகத்தில் இன்னும் தனக்கான இடம் மிஞ்சியிருக்கிறது என்பதை உத்திரவாதப்படுத்திக்கொள்வார்கள். ஒருவேளை யாருமே பொருட்படுத்தவில்லை என்றால்? மனமுடைந்து போய் அவர்கள் உண்மையாகவே தற்கொலை செய்துகொள்ளக்கூடும்.

இந்த உலகில் வாழ்வதைப் போலவே இறந்துபோவதற்கும் காரணங்கள் ஏதும் முக்கியமல்ல. ஏதோ ஒரு வழியில் வாழ்வதைப் போலவே, ஏதோ ஒரு வழியில் ஒருவன் இறந்துபோகத்தானே வேண்டும்? ஆனால் நாம் அதை அவ்வளவு இயல்பாக நிகழ அனுமதிக்க முடியாது. நம்மிடம் இருக்கும் ஒரே கடைசி துருப்புச்சீட்டு நம்முடைய உடலும் உயிரும்தான். நாம் வாழ்க்கையில் அதிகமாக பணயம் வைக்கக்கூடியதும் அதுதான். ஒரு கடும் உழைப்பாளி, ஒரு போர் வீரன், ஒரு விலைமாது, ஒரு தற்கொலையாளன் என எல்லோருமே தங்களை இப்படித்தான் பணயம் வைக்கிறார்கள்.

ஒருவேளை அவன் உண்மையாகவே தற்கொலை செய்துகொண்டிருந்தால்? இப்போது இங்கே எழுதியிருக்கும் எந்த வாக்கியத்தையும் எழுதியிருக்க மாட்டேன். இதற்கு பதிலாக முற்றிலும் வேறு வாக்கியங்களையே எழுதியிருப்பேன். ஆனால் அதில் மரணத்தின் விளைவுகளைப் பற்றித்தான் பேச முடிந்திருக்குமே தவிர அதன் சூட்சுமமான நாடகங்களைப் பற்றி சொல்ல எதுவும் தெரிந்திருக்காது.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்


‘பல்லவர்களின் பரம்பரை நாங்கள்’ என்று பா.ம.க. கூறுவது பற்றி...
- அ.சுகுமார், காட்டுக்கானூர்
பார்த்தா அப்படி தெரியலையே!

பாகிஸ்தான் சிறையில் இந்திய தூக்கு தண்டனைக் கைதி சரப்ஜித் சிங் தாக்கப்பட்டது பற்றி...
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.
எல்லையில் சீனாவோடு சிக்கல். இந்த விவகாரத்தால் பாகிஸ்தானோடு பதற்றம். இது எல்லாம் ஏதோ தற்செயலானது என்று எனக்குத் தோன்றவில்லை.

18 வயது ஓட்டுப்போடுவதற்கு தகுதியான வயதுதானா?  
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
இந்தியர்களுக்கு 50 வயதில் ஓட்டுரிமை கொடுத்தாலும், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஆண், பெண் - இவர்கள் விதி மீது நம்பிக்கை வைப்பது எப்போது?
- வண்ணை கணேசன், சென்னை-110.
இருவரும் இணைந்து வாழும்போது.

பவர் ஸ்டாரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்களே...
- ஜெ.மகேஷ், திண்டுக்கல்.
பவர் ஸ்டாரின் புகழ் மகுடத்தில் இன்னொரு சிறகு!

நெஞ்சில் நின்ற வரிகள்


நிலவு தரும் சித்திரங்களுக்கு ஒரு முடிவு உண்டா? எவ்வளவு எழுதினாலும் தீராத நிலவு போல நிலவைப் பற்றிச் சொல்ல ஏதேனும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. கண்ணதாசன் இந்தப் பாடலில் நிலவின் வழியாக காதலின் சாரத்தை மட்டுமல்ல... உலக வரலாற்றின் சாரத்தையும் தொட்டுச் செல்கிறார். முடிவற்றுப் பெருகும் காலத்தின் நதியை நிலவு என்ற ஒரே மையத்தில் இணைத்துவிடுகிறது இந்தப் பாடல்.
அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளதும் ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
யோசித்துப் பார்த்தால் இருவர் கண்களுக்கும் நிலவைப் போல ஒன்றுபோல தோன்றக்கூடியது வேறு ஏதேனும் உண்டா?
அம்பிகாபதி கண்ட நிலா

அமராவதியைத் தின்ற நிலா    
என்ற வரிகளைக் கேட்கும்போதெல்லாம், நிலவு எப்படி ஒரு பெண்ணை தின்னக்கூடும் என்று திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்திருக்கிறேன். நிலவு தரும் காதலின் வெம்மையில் எரியும் ஒரு பெண்ணைத்தான் கவி எழுதிச் செல்கிறானா?
கவிஞர் தேவதச்சன் தனக்கு ஞாபகமுள்ள நான்கு பௌர்ணமிகளைப் பற்றி எழுதுகிறார். துஷ்டி வீட்டுக்குப் போய் திரும்புகையில் பார்த்த நிலவு, லாரியில் பயணம் செய்கையில் பார்த்த நிலவு, ஐந்து நட்சத்திர விடுதி வாசலில் யாருக்கோ காத்திருந்தபோது கண்ட நிலவு, ஒண்டுக் குடித்தனத்தில் மொட்டை மாடியில் மின்வெட்டில் பார்த்த நிலவு என்று காலத்தின் ஞாபகத்தின் வெவ்வேறு புள்ளிகளை இணைக்கிறார். உண்மையில் கண்ணதாசனும் தேவதச்சனும் நிலவைத் தவிர வேறு எங்கு இணைய முடியும்?

எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள்


இணையத்தில் மிக ஊக்கத்துடன் செயல்படுபவர் அதிஷா வினோ. மிகக் கூர்மையான அரசியல் விமர்சனம், கேலி, சுவாரசியம் என பல்வேறு தளங்களில் இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் படிக்க ஏதாவது ஒன்று எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. இவர் ஒரு பெருமாள் படத்தை வெளியிட்டு, ‘இதை 7 செகண்டுக்குள் ஷேர் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்’ என்று சொன்னதை நம்பி இதுரை 16000 பேர் ஷேர் செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து இவரது செல்வாக்கையும் மக்களின் குழந்தைத்தனத்தையும் புரிந்து கொள்ளலாம்.
அதிஷாவின் ஒரு பதிவிலிருந்து...

சிகரெட் பிடிப்பதை நிறுத்தி இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. கடந்த முப்பது நாட்களில் என்னென்னவோ நடந்துவிட்டது. ஏகப்பட்ட கசப்பான சம்பவங்கள். எதையுமே என்னால் சரியான வகையில் எதிர்கொள்ள முடியவில்லை. எல்லோரோடும் சண்டை. ஞிணிறிஸிணிஷிஷிமிளிழினின் எல்லைக்கே போய் தற்கொலை முயற்சி வரைக்கும் கூட போயிருக்கிறது.

இன்று திரும்பிப் பார்த்தால் வெறும் தனிமைதான் மிச்சமிருக்கிறது. முன்பு தனித்திருந்தபோது துணையாயிருந்த சிகரெட் கூட இப்போது துணையாக இல்லை. ஆனாலும் MISSION QUIT SMOKING™ NEVER GIVE UPதான்.   https://www.facebook.com/athisha1?ref=ts-fref=ts