சரப்ஜித் சிங் என்ற அரசியல் கால்பந்து! : சோகம்





மரண தண்டனைக் கைதிகளை சாகடிக்க, உலகெங்கும் பல நாடுகள் பல்வேறு உபாயங்களைக் கையாள்கின்றன. சிலர் முகத்தை கறுப்புத்துணியால் மூடி, தூக்கில் போட்டுக் கொல்கிறார்கள்; சிலர் விஷ ஊசி போட்டு வலிக்காமல் மரணிக்கச் செய்கிறார்கள். மின்சார நாற்காலியில் சொகுசாக உட்காரவிட்டு சாகடிப்பது நடக்கிறது. கற்களை வீசி கொடூரமாகக் கொல்வதும் நடக்கிறது.

பாகிஸ்தான் வித்தியாசமாக மரண தண்டனையை நிறைவேற்றுகிறது. சக கைதிகளை விட்டே சாகடிப்பதுதான் அந்தப் புதுமை. சரப்ஜித் சிங் என்ற ஏதுமறியா ஒரு அப்பாவிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனையும், சக கைதிகளைவிட்டு அந்த அரசு வழங்கிய தண்டனையும் கொடூரமானது என்பது ஒவ்வொரு பாகிஸ்தானியரின் மனசாட்சிக்கும் தெரியும். ஏழை சொல் அம்பலம் ஏறாது; ஏழைகளின் கண்ணீரும்தான்!

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை ஒட்டிய இந்திய - பாகிஸ்தான் எல்லை பெரிதாக வேலி போட்டு பாதுகாக்கப்படாத காலத்தில், வழிதவறி எல்லை தாண்டிய சம்பவங்கள் ஏராளம் உண்டு. மேய்ச்சலுக்குப் போகும் ஆடு, மாடுகள் தாண்டினால் மேய்ப்பர்கள் போய் இழுத்து வருவதுண்டு. தேசங்களுக்குத்தான் இது எல்லை; ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு பக்கத்து கிராமம்.

பஞ்சாப் மாநிலம் தரன்தரன் மாவட்டம் பிகிவிண்ட் கிராமத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங், வழக்கம் போல அன்றும் நிலத்தில் வேலை முடித்துவிட்டு, வழக்கம் போல சாராயம் குடித்துவிட்டு, போதையில் கால்கள் போன பாதையில் நகர்ந்தவர், எல்லை தாண்டி விட்டார். வழக்கம் போல பாகிஸ்தான் ராணுவத்தினர் இதை சாதாரண எல்லை தாண்டலாக நினைத்து அவரைத் துரத்தி விடவில்லை. இதற்குக் காரணங்கள் இரண்டு... 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி சிங் எல்லை தாண்டுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்து 14 பேர் இறந்திருந்தனர்; இன்னமும் அதில் குற்றவாளிகள் கிடைக்காமல் போலீஸ் தடுமாறிக் கொண்டிருந்தது. சரப்ஜித் சிங்கை தீவிரவாதியாகவும் இந்திய உளவாளியாகவும் சித்தரித்து வழக்கை நகர்த்தினர்.



ஒரே வருடத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பும் வந்தது. குண்டுவெடிப்பில் தன் தந்தையைப் பறிகொடுத்த சௌகத் சலீம் என்பவர் சொன்ன சாட்சியை போலீஸ் வலுவான ஆதாரமாக வைத்தது. சரப்ஜித் குண்டு வைத்ததை தான் கண்ணால் பார்த்ததாக சலீம் சொன்னார். சிங்குக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம். (தன்னை போலீஸாரும் ராணுவத்தினரும் மிரட்டி, சரப்ஜித் சிங்குக்கு எதிராக வாக்குமூலம் தரச் சொன்னதாக பல ஆண்டுகள் கழித்து சலீம் பேட்டி கொடுத்தார். ஆனாலும் சரப்ஜித்தின் விதி மாறவில்லை.)

23 ஆண்டுகள்... சரப்ஜித்தின் அக்கா தல்பீர் கவுர் எழுதிய ஏராளமான மனுக்கள் இந்திய அரசின் எந்த மட்டத்திலும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. சரப்ஜித்தின் மனைவியும் இரண்டு மகள்களும் தல்பீர் கவுரோடு சேர்ந்து ஏறாத படிகள் இல்லை. எப்போதோ தூக்கில் தொங்கியோ, வேதனையிலோ செத்திருக்க வேண்டிய சரப்ஜித்தின் உயிரைப் பிடித்து வைத்திருந்தது அவரது குடும்பத்தைத் தவிர, இன்னும் இரண்டே பேர் மட்டும்தான்!

ஒருவர், ஜஸ் உப்பல் என்ற பிரிட்டிஷ் வழக்கறிஞர். தன் தம்பியை மீட்கப் போராடும் தல்பீர் கவுரின் உறுதி அவரை உலுக்கி எடுத்தது. சரப்ஜித் சிங்கை மீட்பதற்காக ஒரு பிரசார இயக்கத்தைத் தொடங்கிய அவர்தான், இப்படி ஒரு அப்பாவி பாகிஸ்தான் சிறையில் வாடுகிறார் என்ற விஷயத்தை உலகத்துக்கு உணர்த்தியவர். இன்னொருவர், அன்சார் பர்ணி. பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி. சரப்ஜித் குடும்பம் பாகிஸ்தான் சென்று நடத்திய நீதிப் போராட்டங்களுக்குத் துணையாக இருந்தவர் இவர்.

கருணை மனு நான்கு முறை நிராகரிக்கப்பட்ட பிறகும், சரப்ஜித்துக்கு அவசரப்பட்டு பாகிஸ்தான் அரசு தண்டனை தந்துவிடவில்லை. சர்வதேச சமூகம் அக்கறை காட்டும் ஒரு விஷயமாக சரப்ஜித்தின் தண்டனை மாறிவிட்டதால், தண்டிக்க தயக்கம் இருந்தது.

இதைமீறி அவர் சாகடிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? ‘‘வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற இருக்கும் தேர்தல்தான்’’ என்கிறார் அன்சார் பர்ணி. ‘‘கசாப்பை இந்தியா தூக்கில் போட்டபிறகு பாகிஸ்தானில் சூழ்நிலை மாறிவிட்டது. கடும் போட்டி நிறைந்த தேர்தல் களத்தில், மத அடிப்படைவாதிகளின் ஓட்டை வாங்குவதற்கு சரப்ஜித் சிங்கின் உயிர் தேவையாக இருந்தது’’ என்கிறார் அவர்.

சிறையில் சரப்ஜித்தை தாக்கிய ஆறு பேரும் செங்கற்களையும், கூர்மையான ஆயுதங்களையும் பயன்படுத்தினார்கள். சாப்பாட்டுத் தட்டு, கரண்டி போன்றவற்றை வளைத்தே இந்த ஆயுதங்களை தயாரித்தார்கள். அமீர் அஃடாப், முடாசர் என்ற இருவர்தான் முக்கிய குற்றவாளிகள். இருவருமே மரண தண்டனைக் கைதிகள். சரப்ஜித் இருக்கும் அதே லாகூர் காட் லக்பாத் சிறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இருப்பவர்கள். ‘‘குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பழிவாங்கவே இப்படிச் செய்தோம்’’ என அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். ஆறு ஆண்டுகளாக இல்லாத வன்மம் இப்போது எப்படி வந்தது? சரப்ஜித்தை பாதுகாக்கத் தவறிய சிறை அதிகாரிகள் யாருமே, அவர் மரணமடையும் வரை தண்டிக்கப்படவில்லை. அவர்களை அரவணைக்கும் கரம் யாருடையது?

‘‘இந்தியா நினைத்திருந்தால், சர்வதேச சமூகத்தின் உதவியோடு முன்பே சரப்ஜித்தை மீட்டிருக்கலாம். இதை வெறும் அரசியல் விவகாரமாக இந்தியா பார்த்தது. இதில் அரசியல் மட்டும் இல்லை; ஒரு உயிரும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை’’ என வருந்துகிறார் ஜஸ் உப்பல்.
தேர்தல் ஆதாயத்துக்காக உருட்டப்பட்ட அரசியல் கால்பந்து ஆகிவிட்டார் சரப்ஜித் சிங்
- அகஸ்டஸ்