அதிரி புதிரியாய் அஜித் புதுப்பட டீசர் அவர் பிறந்தநாள் அன்றே யூ டியூபில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே ஐந்து லட்சம் ஹிட்ஸ் அள்ளி சாதித்திருக்கிறது. பெயரே வைக்காத ஒரு படத்தின் டீசர் மில்லியன் ஹிட்ஸை நோக்கிச் செல்வதுதான் தல படத்தின் ஹைலைட்.
ஆர்யா, நயன்தாரா ‘ஜோடி’யோடும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலோடும் அசால்ட்டாக தல நடந்து வரும் இந்த டீசர், சரியாக 42 விநாடிகள் ஓடுகிறது. கரெக்ட், ‘தல’யின் வயதுதான் டீசரின் நீளம். பெயர் கூட வைக்காமல் ஏன் இந்த திடீர் டீசர் ரிலீஸ்? விசாரித்ததில் இது தல கொடுத்த ஐடியாதான் என்கிறார்கள்.
‘டைட்டிலே வைக்காமல் எப்படி டீசர்’ என்ற கேள்வி எழுந்தபோது, ‘‘டீசருக்கு இடையிலேயே டைட்டில் இன்னும் வைக்கலை என்று நாமளே சொல்லிடுவோம். அது சிரிப்பாவும் இருக்கும், சரியாவும் இருக்கும்’’ என்றிருக்கிறார் தல. யூ டியூபில் பல யூத்களை அது கவர்ந்ததற்கு அந்த டயலாக்தான் காரணம். என்ன இருந்தாலும் தல போல வருமா?
- நா.கதிர்வேலன்