+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?





‘‘கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் 60 சதவீதத்துக்கும் அதிக மதிப்பெண் பெற்றவர்களே பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யவேண்டும். பொறியியல் படிப்பின் அழுத்தத்தை அவர்களால் மட்டுமே தாங்கமுடியும். குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் வேறு துறையை தேர்வு செய்வது நல்லது.. என்கிறார் சென்னை ஐஐடியின் முன்னாள் துணைப் பதிவாளரும், கல்வி ஆலோசகருமான டாக்டர் சூரியகுமார்.

அப்படியானால் அவர்களுக்கான சாய்ஸ் என்ன?
‘‘பொறியியலும், மருத்துவமும் மட்டுமே படிப்புகள் அல்ல. குறைந்த செலவில், முடித்தவுடனே வேலை கொடுக்கும் நூற்றுக்கணக்கான படிப்புகள் இங்கே உண்டு. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பொறியியலை விரும்பினால், பாலிடெக்னிக்கில் சேர்ந்து பாரா எஞ்சினியரிங் கோர்ஸ்களை படிக்கலாம். அதை முடித்துவிட்டு பி.இ. படிக்க வாய்ப்புண்டு. அப்படியான மாணவர்களுக்கு பெரிய டிமாண்ட் இருக்கிறது’’ என்கிறார் சூரியகுமார்.
‘‘ஒரு காலத்தில் பி.இ படிப்பது கௌரவமாகவும், வேலை தரக்கூடிய விஷயமாகவும் இருந்தது. இன்று எல்லாம் மாறிவிட்டது. பிளஸ் 2 தேர்ச்சிபெறும் நான்கில் ஒருவர் பி.இ படிக்க வருகிறார். தரமான கல்லூரியில், ஈடுபாட்டோடு படித்து நல்ல மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் படிப்புக்குத் தொடர்பில்லாத வேலையைச் செய்ய நேரிடுகிறது’’ என்கிறார் சூரியகுமார்.

‘‘பொறியியல் படிப்புக்கு என்றுமே இறங்குமுகம் இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக, எல்லாப் படிப்புக்குமே வேலைவாய்ப்புகள் உண்டு. ஆனால், எங்கு படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் தீர்மானிக்கப்படும்’’ என்கிறார் கல்வி ஆலோசகர் முத்துக்குமார்.

‘‘அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக தங்கள் தொழிற்சாலைகளை ஆசிய நாடுகளை நோக்கி நகர்த்தி வருகின்றன. அதனால், அடுத்த 10 ஆண்டுகளில் கட்டுமானம், மின்சாரம், மின்னணுவியல் துறையில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. இந்தியாவிலும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, ‘கோர் எஞ்சினியரிங் கோர்ஸ்கள்’ எனப்படும் சிவில், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், மெக்கானிகல் எஞ்சினியரிங் படிப்புகளுக்கு எக்காலமும் மவுசு குறையாது. எந்த தயக்கமும் இன்றி இவற்றைத் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் அவர்.

‘‘கடந்த வருடம் 70 சதவீத வேலைவாய்ப்பை அள்ளித் தந்தது ஐ.டி இண்டஸ்ட்ரிதான். எனவே கம்ப்யூட்டர் எஞ்சினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளும் சோடை போகாது. அதேபோல் ‘ஃபேஷன் டிசைனிங்’ படிப்பும் சிறப்பானது. இந்த துறையில் சம்பளம் குறைவு என்று ஒரு தவறான கருத்துண்டு. ஐ.டி-யோடு ஒப்பிடும்போது ஆரம்ப சம்பளம் சற்றுக் குறைவாக இருக்கலாம். போகப் போக லட்சங்களைத் தொடலாம்.

மரபுசாரா எரிசக்தி தொடர்பான படிப்புகளுக்கு ஏகப்பட்ட தேவையிருக்கிறது. குறிப்பாக சோலார் டெக்னாலஜி. தைரியமாக இதைத் தேர்வு செய்யலாம். மெரைன் எஞ்சினியரிங் படிப்புக்கு உடனடி வேலைவாய்ப்பு உண்டு. ஆனால் கடலையும், கப்பலையும் விரும்பும் மாணவர்கள் மட்டுமே அதைத் தேர்வுசெய்ய வேண்டும். மைனிங், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, ஏரோநாட்டிகல் போன்ற துறைகளைத் தேர்வுசெய்யும்போது கூடுதல் கவனம் தேவை. இத்துறை சார்ந்த நிறுவனங்கள் நம்நாட்டில் குறைவாகவே உள்ளன’’ என்று எச்சரிக்கிறார் முத்துக்குமார்.

‘‘வருங்காலத்தில் உலகையே ஆட்சி செய்யப் போவது நேனோ டெக்னாலஜிதான். ஆட்டோமொபைல், மெக்கானிகல் என எல்லாத் துறைகளிலும் நானோ ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. ஆர்வம் உள்ளவர்கள் நானோ டெக்னாலஜியைத் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் அவர்.

‘‘பிளாஸ்டிக், ரப்பர் இண்டஸ்ட்ரிகள் அதிவேகத்தில் வளர்ந்து வருகின்றன. இவை தொடர்பான படிப்புகளுக்கும் எதிர்காலம் உண்டு. மரபணு தொழில்நுட்பம் சார்ந்து உலகளவில் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதனால் ஜெனடிக் எஞ்சினியரிங்கை தேர்வு செய்வதும் நல்ல முடிவு. வேளாண்மை சார்ந்த பொறியியல் படிப்பை பலர் விரும்புவதில்லை. அடுத்த பத்தாண்டுகளில் வேளாண் பொறியியல் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டும். அக்ரிகல்சர் எஞ்சினியரிங், அக்ரிகல்சர் இர்ரிகேஷன் எஞ்சினியரிங் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ‘பி.ஆர்க்’ எனப்படும் ஆர்க்கிடெக்சர் படிப்பும் வேலைவாய்ப்பு மிகுந்தது.

பயோ மெடிக்கல் எஞ்சினியரிங், என்விரான்மென்டல் எஞ்சினியரிங், ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ், மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் படிப்புகளையும் தைரியமாகத் தேர்வு செய்யலாம். தமிழ்வழி சிவில் எஞ்சினியரிங் படிப்பு ஒரு வரப்பிரசாதம். இதை பலர் மொழிசார்ந்த விஷயமாகக் கருதி தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். தொழில்நுட்பத்தை தாய்மொழியில் கற்பது சிறந்தது. கூடுதலாக ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  

குறிப்பிட்ட தொழில்நுட்பம் சார்ந்த ஒரு படிப்பைத் தேர்வு செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. அத்துறையில் வேலைவாய்ப்பு எப்படி, பணிச்சூழல் எப்படி என்பதை எல்லாம் ஆய்வுசெய்ய வேண்டும். இளங்கலையில், அந்த தொழில்நுட்பம் சார்ந்த ஒரு ‘கோர் எஞ்சினியரிங்’ படிப்பை முடித்துவிட்டு, முதுகலையில் அந்தப்படிப்பை படிப்பது புத்திசாலித்தனம். உதாரணத்துக்கு பெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங் படிக்க விரும்பினால் இளங்கலையில் கெமிக்கல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, முதுகலையில் பெட்ரோ கெமிக்கல் படிக்கலாம். இரண்டில் ஒன்று பலனளித்துவிடும்’’ என்கிறார் ராஜராஜன்.  
எஞ்சினியரிங் படிப்புக்கு இணையாக கலை அறிவியல் துறைகளிலும் வேலைவாய்ப்புள்ள பல படிப்புகள் உண்டு. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்...

ஹாட்
சிவில்
ஆர்க்கிடெக்சர்
மெக்கானிகல்
எலெக்ட்ரிகல் - எலெக்ட்ரானிக்ஸ்
எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன்
மெக்கட்ரானிக்ஸ்
சோலார் எனர்ஜி
ஃபுட் டெக்னாலஜி
அக்ரிகல்சர் எஞ்சினியரிங்
ஜெனடிக் எஞ்சினியரிங்
எலெக்ட்ரோ கெமிக்கல்  
ஐ.டி
நானோ டெக்னாலஜி
பிளாஸ்டிக் எஞ்சினியரிங்
ரப்பர் டெக்னாலஜி
ஃபேஷன் டெக்னாலஜி
ஆட்டோமொபைல்
புரொடக்ஷன் எஞ்சினியரிங்
மெரைன் எஞ்சினியரிங்
பயோ மெடிக்கல் எஞ்சினியரிங்
என்விரான்மென்டல் எஞ்சினியரிங்

புதிய வரவு
இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்
எலெக்ட்ரானிக் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன்
அக்ரிகல்சர் அண்ட் இர்ரிகேஷன்
மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங்
மேனுஃபேக்சரிங் எஞ்சினியரிங்
இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி
டவுன் அண்ட் கன்ட்ரி பிளான்னிங் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் எஞ்சினியரிங்
பயோ மெடிக்கல் எஞ்சினியரிங்
மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ்
சேஃப்டி எஞ்சினியரிங்
மெக்கானிகல் டிசைனிங்

- வெ.நீலகண்டன்